Subscribe:

Pages

Sunday, July 24, 2011

இயற்கையின் எளிமை அழகு: கவிதை - அவ்வைமகள்

இயற்கையின் எளிமை அழகு

மனிதனது கலப்படம் இல்லாமல் இறையோனின் தூய்மை நிறைந்த சிந்தையில் அவனது எண்ணிறந்த கண் திறத்தால் பார்த்தெடுத்த வண்ணகுழம்பில் பிசைந்தெடுத்த வார்ப்படத்தில் ஈந்தெடுத்த இயற்கைமகள் தன் சூல்குடத்தில் தேர்ந்தெடுத்து ஈன்றெடுத்த சிசுவாம் இயற்கையின் பிறப்பு - இதன் சிறப்பைக் கவிதொடுத்து வணங்குவதே நம் தலையாய கடமை. இதோ என் கவிதையொன்று"



பூவிது பூவிது பூவிது நல்ல
பொடிப்பொடி மகரந்தம் தூவுது
மேவிளம் மேவிளம் மேனியில் ஒளிர்
மஞ்சளின் பொன்துகள் படிந்தது

பாடுது பாடுது பாடுது ஒரு
பூங்குயில் மெல்லிசை கூட்டுது
செந்நிற செந்நிறத்தாமரை நீரில்
மெல்லத் தலையாட்டிச்சிரிக்குது

ஓடுது ஓடுது ஓடுது அங்கே
புள்ளிமான் துள்ளியே ஓடுது
வெள்ளிய வெள்ளிய முயலொன்று
காதை நேராக்கிக் கண்ணைத்தான் சிமிட்டுது

ஆடுது ஆடுது ஆடுது மயில்
தோகை விரித்தழகாய் ஆடுது
கரியது கரியது காகமும் தன்
கழுத்தை சாய்த்துத்தான் பார்க்குது

நாணுது நாணுது நாணுது பெட்டை
சேவல் அருகிருக்க நாணுது இதைக்
கண்டது கண்டது அணிலொன்று தன்
பேடையைத்தாவித்தான் பிடித்தது

0 comments:

Post a Comment