Subscribe:

Pages

Thursday, December 15, 2011

பள்ளியறை


பள்ளியறை

Tuesday, December 13, 2011

பாரதிக்கு வயது 130: அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் பாரதி பிறந்தநாள் கொண்டாட்டம்: 12-11-2011


பாரதிக்கு வயது 130: அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் பாரதி பிறந்தநாள் கொண்டாட்டம்: 12-11-2011 


படத்திற்கு நன்றி: tamilweek.com

விழா எதுவாகினும் அதனைப் பொருத்தமான முறையிலே கொண்டாடுவது தான் சிறப்பு. ஆரவாரம் ஏதுமின்றி, விழாவின் குறிக்கோளின் மீது மட்டுமே கவனம் வைத்து மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஒரு விழாவாக அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின்  பாரதி பிறந்த தின விழா அமையப்பெற்றது.  

தேசியக்கவி பாரதி சர்வதேசக் கவியே என்பது மாபெரும் உண்மை. அவரது சொல்லாட்சியாகட்டும் - கருத்தாட்சியாகட்டும் - கவி மாட்சியாகட்டும் - இதில் எதனை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் - அதில் பாரதியின் உலகுதழுவிய வீச்சையும், ஆழத்தையும் காணமுடியும். பாரதியின் நோக்கு உலகுகளை உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் விளிம்புவரைச்சென்று அவ்விளிம்பை நின்று நீவிவிட்டு - மீள்திரும்பும் தன்மையது. ஆற்றலும் - வலிமையையும் - வேகமும்  அவனது எழுத்தின் மும்முனைத் தாக்கம்.

அதுவும்  அவன் வாழ்ந்து போந்த காலம் - சொற்பதம் கடந்த கடினம். அச்சூழலில அவன் என்ன உண்டான் -  எந்நேரம் உறங்கினான் எனத் தெரியாது. ஆனால், அவன் தமிழைப் பருகி, தமிழைச் சுவைத்து - தமிழை சுவாசித்து - தமிழே உறக்கமும் - விழிப்புமாய் வாழ்ந்தான் என்று அவனது எழுத்து பேசுகிறது.

இத்தகையதொரு கவியைப் போற்றுதற்கு பொருத்தமான ஒரு நிகழ்ச்சி - கவிஞர்கள் கூடி - தமிழில் கவி பாடுவது மட்டும் தானே!   பாரதி பிறந்த நாளில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கவியரங்கம்  பாரதியின் தமிழ்ப்பணி தரணியில் தொடரவேண்டும் என்கிற உயரிய நோக்கைப் பறைசாற்றுவதாக அமைந்தேறியது.      

"தலைமுறை  தழைக்க தமிழ்ப் பயிர் வளர்ப்போம்" என்கிற தாரக மந்திரத்தைக் கொண்டது  அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழியின் வாழ்வும் வளமும் எதிர்காலச் சந்ததியினரின் கையிலே தான் உள்ளது.  இப்பொறுப்பிற்கு, அவர்களை உரித்தானவர்களாக ஆக்குவது இன்றைய பெரியவர்களின் கையிலே உள்ளது. இந்த இரண்டு கடமைகளும் இரட்டைக் கடமைகள் -  ஒரு முகத்தின் இரு கண்கள் போல - ஒரு வித்தின்  இரு இலைகள் போல , ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல ஒன்றை ஒன்று விடுத்து இயங்காத் தன்மையன. இந்த இரட்டைக் கடமையைச் செவ்வனே ஆற்றும்  முகமாக மழலைகள் கவிபாடி கவியரங்கைத் துவக்கியது கண்கொள்ளாக் காட்சியாகும்.

மொழியியல் ஆய்வாளரும் கவிஞருமான பெரியண்ணன் சந்திரசேகரன் இக்கவியரங்கில் தன் மழலைச் செல்வங்ககளோடு வருகை தந்திருந்து - மழலைகளும் தானுமாக, தனிதனியே கவி வழங்கி இவ்விழாவினைச் சிறப்பித்தார்.  கவிஞர் குமரேசன், தன கவியுரையோடு இணைப்புரையும்  வழங்கி, ஒருங்கிணைத்துச் சென்ற இக்கவியரங்கம் கவிஞர் ஆதி முத்துவின் "அவைக்கு வணக்கம்"  எனும் தொடக்கக்  கவிதையோடு தொடர்ந்தது. கவிஞர்கள், அரசூர் ராஜா, ராம் மோகன், கந்தபொடி,  உள்ளிட்ட பலரும் தமது படைப்புக்களை 

மழலைக் கவிஞர்கள் 

இச்சிறப்புக் கவியரங்கத்தில் அரங்கேற்றினார்கள்.    நான் "பள்ளியறை" எனும் கவிதையை இக்கவியரங்கத்திற்காக இயற்றி வழங்கினேன். கூடுதலாக, "அகரம் சொல்லு பாப்பா" என்கிற எனது மற்றுமொரு கவிதையையும் வழங்கினேன். ("அகரம் சொல்லு பாப்பா" ஏற்கனவே நமது அம்பராத்தூணியில் வெளி வந்துள்ளது.) தமிழுக்கும், பிற திராவிட மொழிகளுக்கும் உள்ள உறவு எத்தனை முக்கியமானது என்பதும் - குழந்தைப்பருவமே சொல்வளம் பதிக்கும் சரியான பருவம் என்பதும் எனது கவிதைகளின் சித்தாந்தங்கள்.
          
பார்வையாளர்களாக மட்டுமே பங்கேற்க வந்திருந்த தமிழன்பர்கள சிலரும் தாமாகவே முன்வந்து தமது கவிதைகளைப் படைக்க முன்வந்தது வெகு சிறப்பு.
வேதியியலில் வினை ஊக்கிகள் என்போம். அதுபோல, கவிஞர்கள் தம்  " உடன் இருந்த  தெம்பே" இந்தக் கன்னிக் கவிஞர்களுக்கு ஊக்கசக்தியாக அமைந்தது! இதனை மிகவும் ஆரோக்கியமானதொரு  தொடக்கம் என்பேன். அனுபவம் மிக்க கவிஞர்கள் முன்னிலையில், அச்சப்பட்டுப் பின்வாங்கி ஒதுங்கிப்போய்விடாதவாறு - ஒரு எளிவந்த தன்மை அனைவரிடத்திலும் அமையப்பெற்றது இறைவனின் கொடை என்றால் அது  மிகையில்லை.. 


முன்னேரும் பின்னேரும்:
கவிஞர் பெரியண்ணன்  சந்திரசேகரன் குழந்தைகளுடன்

இக்கவியரங்கில் காட்டப்பட்ட கரிசனமும், வாஞ்சையும் ஏட்டில் பதிவு செய்யப்படவேண்டிய முக்கியத்துவம் உடையன. இத்தனை இலகுவான சூழலை உருவாக்கிய பெருமை இக்கவியரங்கை வடிவமைத்து வழிநடாத்திச் சென்ற அபை ராதா  அவர்களையே சாரும். இவருடன் தோளோடு தோள் நின்று இவருக்கு வலது கையாகச் செயல்பட்ட நாகி சேது அவர்கள், அபயரோடு சேர்ந்து கொண்டு, கவிஞர்களின் படைப்பைப் பாராட்டியும், ஊக்குவித்தும், கருத்துப் பரிமாற்றம் செய்தும் சுவை கூட்டினார். 




 தொடக்கக் கவிதை: கவிஞர் ஆதிமுத்து 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின்  தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்கமணி அவர்கள்  இச்சங்கத்தின் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். எவ்வித பந்தாவும் இல்லாமல், பார்வையாளர்களுக்கு இடையே அமர்ந்து கொண்டு கவியரங்கை அனுபவித்தபடி தனது  பணியைச் சிறப்பாய் ஆற்றிய அவரது  தலைமை பாராட்டுதற்குரியது.

 மொத்தத்தில், எளிமையானதொரு நிகழ்ச்சி - வலிமையானதொரு நிகழ்ச்சி - பொருத்தமானதொரு நிகழ்ச்சி  - பாரதி! பார்  அதில் எம் போல் சங்கமில்லை - பாரதி! என்று பாரதிக்குப் பெருமையுடன் கூறுவதுபோல் அமைந்த இக்கவியரங்கம் கண்டபோது நான் சொன்னது:

பார்! அதி நாதனின் உலகு  எலாம் உணர்ந்த தமிழ்ப் பார்! அதியமான்  தொழுத  அவ்வை பார்! அதியாதி அந்தாதி தந்த அபிராமன்  பார்! அதி கம்ப நாடனின் ஏட்டைப் பார்! அதிவீர  ராமார்கள் எழுச்சி பார்! - பார் அதி அமாநதச கவியரங்கம் பார் !

குறிப்பு அமாநதச என்பது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் என்பதன் சுருக்கம். (சுருக்கம் இவ்விடத்திற்காக மட்டும் நான் செய்தது)       

இக்கவியரங்கு குறித்த இன்னபிற சேதிகள் தொடரும்.


அவ்வைமகள்  

 



     

Monday, December 5, 2011

சித்திரம் பேசுதடி - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொன்னாலும் சொன்னார்கள்!!


சித்திரம் பேசுதடி - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொன்னாலும் சொன்னார்கள்!! 

அச்சசலாய் -
குழந்தைகளை வார்ப்படம் செய்திருக்கிறார்கள் இந்தப் பெற்றோர்கள் !!
இதென்ன அதிசயம்?
பக்கத்திலிருப்பது நாயா பூனையா?
அடையாளம் காணமுடியாதபடி  எஜமானியம்மாவைப்போலவே
முகம் ச்ந்த்ர பிம்பமாக!!   
நம்ம ஊர் பாஷைப்ப் படி"எந்தக் கடையில அரிசி வாங்கறீங்க?" என்று கேட்கலாமா?

Saturday, December 3, 2011

போதிமரம் - அவ்வைமகள்

போதிமரம்

உனக்கு எது நடந்தால் என்ன?
உனை எவர் பிரிந்தாலுமென்ன?
உன்மேல் எது விழுந்தால் தான் என்ன?
உன்" இளி" நிலை எவர் கண்டாலுமென்ன?
உன் துயர் எவரும் அறியாரெனினும் என்ன?
உன்னுடல் இறுகி விறைத்த போதும்
உன் ஊன் வற்றி தீர்ந்த போதும
உன் நுனி வேர் கொண்ட சொட்டு ஈரம் 
உன் ஞான நாடியாக   
உன் மௌனம்  தியான நிட்டை  
உன்  அகப்பை அழல் திரட்டி
உ ன்னுள் ஆன்ம வேள்வி மூட்டி 
உ ன் ஆற்றல் உன்னுள் மீட்டு
உ ன் நிலையை மாற்றிக் காட்டும் 
உன் தவவலிமை போற்றி!! போற்றி!!

அவ்வைமகள்