Subscribe:

Pages

Friday, July 22, 2011

விண்ணைத் தாண்டி வருவாயா? விரசமில்லாது உரசிப்போன ஸ்பரிசம்





பொதுவாக திரைப் படங்களைப் பார்க்கும் பழக்கம் இல்லாதவள் நான். ஆனால் நீளமான விமானப் பயணங்களில் மட்டும் கட்டாயம் நல்ல திரைப் படங்களைத் தேடுவேன் -- நாடுவேன். இருப்பினும் தமிழ்ப் படங்களின் பால் என் மனது நாட்டம் கொள்வதில்லை - காரணம் - தற்காலத் தமிழ்ப் படங்களில் அதிகமான ஆபாசங்கள் - சத்தற்ற கதை அமைப்புக்கள் - யதார்த்தமில்லாத காட்சி அமைப்புக்கள்.

சமீபத்தில் சென்னை செல்லும்போது அட்லாண்டிக் மகாசமுத்திரத்தைக கடக்கும் நீண்ட நெடும் பயணத்தைக் கொஞ்சம் இலகுவாக்கிகொள்ள வழக்கம் போல் படம் தேடினேன் - எமிரேட்சில்.

திடீரென ஒரு ஐடியா முளைத்தது - ஒரு சேஞ்சுக்காக தமிழ்ப்படம் பார்த்தாலென்ன?' - தேடலைத் துவக்கினேன்

அதே நேரத்தில் - உருப்படியாய் என்ன படம் கிடைக்கப் போகிறது? என்ற வெறுப்புடன் தான் தேடல் போனது.

இருந்தவை மொத்தம் மூன்று திரைப்படங்களே!! ஒன்றை கிளிக் செய்தேன். தலைப்பு - "விண்ணைத் தாண்டி வருவாயா?" இது எங்கே நன்றாக இருக்கப் போகிறது? சும்மா கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு மூடிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டே பார்க்கலானேன்.

திரை ஓடியது - நெஞ்சமும் நாடியது - மூட மனம் வரவில்லை மீண்டும் மீண்டும் பார்த்தேன் - மூன்று முறை!!

சந்தடிக்கு நடுவிலே சத்தமிலாமல் வந்து போயிருக்கிற முத்தாய்ப்பான திரைப் படம். அழுத்தமான கதை - ஆபாசம் துளியும் இல்லாத அமரிக்கையான காட்சிகள் வசனங்கள் - ஒட்டுதல் இல்லாது திணிக்கப்பட்ட காமடிகள் இல்லை - வரம்பு மீறிய சண்டைக் காட்சிகள்- வன்முறைகள் இல்லை!!

தன்னைவிட ஒரு வயது மூத்த பெண்ணைக் காதலித்து அவளை மணப்பதற்காகத் தவமிருக்கும் - காலம் கருதாது காத்திருக்கும் - ஒரு தெள்ளிய மனதுடைய வாலிபனின் - தீர்க்கமான அணுகுமுறையை - அழகாய்க் காட்டும் நேர்த்தி இப்படத்தின் வெற்றிக்கு வித்து - விருது!!

பார்ப்பவர் மனதை விரசமில்லாமல் உரசிச் செல்லும் ஸ்பரிசத்தை தாராளமாய் வழங்கும் இப்படம் பேழைக்குள் ஒளியாது - காலத்தை வென்று - மகுடம் தரிக்கும் என்பதில் ஐயமில்லை.

0 comments:

Post a Comment