Subscribe:

Pages

Saturday, January 22, 2011

மறக்கப்பட்டார் தாமரை மணாளன்

மறக்கப்பட்டார் தாமரை மணாளன்

தாமரை மணாளன் - இந்தப்பெயரை நினைவில் வைத்திருப்பவர் எவரேனும் உண்டா?
இக்கேள்வியை நான் இங்கு எழுப்புவதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் எண்ணலாம்.
ஒரு எழுத்தாளனின் எழுத்து நன்றாயிருந்தால் மட்டும் போதாது; அதிர்ஷ்டத்தோடு, தூக்கிவிட ஆளும் தமுக்கடிக்க ஊடகங்களும் இருக்கவேண்டும் - அன்றேல் அவரைத் தமிழுலகம் சுத்தமாக மறந்துவிடும்  என்பதனை இந்த ஒரு நபரை வைத்தே சொல்லிவிடலாம் போலிருக்கிறது.     
எழுத்தாளர்  தாமரை மணாளன் இன்று மறக்கப்பட்ட மனிதர். அந்தப்புரம், இதயவல்லி, இந்திரவிழா, தேன்மலைக்கன்னி - இந்த நாவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிப் போந்தவர் - பெயர்போன ஒரு செய்தித் தாளின் துணை இதழான வாசுகி எனும் இருவாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இதய மலர் திரைப்படத்தின் கதை வசன கர்த்தா= “விலைக்கு வாங்கியிருக்கிறேன்” என்பது போன்ற சின்னத்திரைத் தொடர்களின் படைப்பாளர்! ஆனால் இன்று அவரை எவரும் அறியார்.
வலைதளத்தில் அவரைப் பற்றி அறிய தரவுகள் ஏதும் இல்லை. தாமரை மணாளன் இவ்வாறு மறக்கடிக்கப்படுவதா? அதிர்ச்சியுற்ற நான் - “விவரங்களைத் திரட்டுவேன் - இம்மனிதரை வருங்காலத் தலைமுறையினர் அறியுமாறு செய்வேன்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு. தேடலைத்துவக்கினேன்.
தினகரன் பத்திரிக்கை - அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றேன் - இப்போதுள்ளப் பணியாளர்கள் எவருக்கும் அவரைத் தெரியவில்லை. விடாமல் முயற்சித்தேன் - கடைசியாகக் கொஞ்சம் விஷயம் தெரிந்தநபர் ஒருவர்  லைனில் வந்தார். “ஹி ஈஸ் நோ மோர்” என்றார். வாசுகிப் பத்திரிகை மூடப்பட்டு எத்தனையோ வருடங்களாகி விட்டது என்றார். அவரது சந்ததியினருடைய  தொலைப்பேசி - முகவரி ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டபோது “இல்லை” என்றார்.

அடுத்ததாக, அவரது நாவல்களை வெளியிட்டிருக்கிற பதிப்பாளர்களைப் பிடிக்கலாம் எனத் தொடர்பு கொள்கிறேன்: “ரொம்ப நாளாயிடிச்சே! அவர் போயி!" 
"ராயல்டி அனுப்புவீங்களே அவரோட சந்ததி- அட்ரஸ் - போன நம்பர் கிடைக்குமா?" "
அவர் காலத்திலேயே அதெல்லாம் முடிஞ்சு போச்சு - அவரோட நாவல் எதுவும் இப்ப மார்க்கட்ல இல்லியே”

1994-1996 காலக்கட்டத்தில் அவருடன் எனக்குக் கொஞ்சம் தொடர்பு இருந்தது, வாசுகியில் என்னை எழுத அழைத்து இனிய இல்லறம் எனும் புரட்சிகரமானதொரு தொடரை எழுதவைத்தவர். வாசுகி அலுவலகத்தில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நானே சென்று எனது கட்டுரையைச்  சேர்ப்பித்துவிட்டு வருவேன். அப்போது பெரும்பாலான சமயங்களில், அவர் இருப்பார். அவரைச் சந்தித்து, கட்டுரையை வாசிக்கவைத்து அவரது விமரிசனத்தை அறிந்து கொள்ளுவது எனக்குப் பிடிக்கும். சில நிமிடங்கள் மட்டுமே நடக்கும் இந்த சந்திப்பில், வயதில் மிகப் பெரியவரான அவரது நிதானம், ஆரவாரமற்ற அவரது பேச்சு, சங்கிலித்தொடர் போன்ற சமஅளவிலான எழுத்துக்களில் அமையும் அவரது கையெழுத்து. தனது கரிய நிறத்தைச் சமப்படுத்தும் படியாக அவர் அணியும் வெள்ளை உடுப்பு ஆகியனவற்றைக் கவனித்திருக்கிறேன்.    

இவ்வாறான சந்திப்புகளின் போது, அவர் நடந்துகொண்ட விதம் நாகரீகமான பேச்சு  ஆகியனவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். எவ்விதமான தனிப்பட்டதான கேள்விகளையும்  கேட்க மாட்டார் அத்தகைய விஷயங்களை  வெளிக்கொணரும் எந்த உரையாடலிலும் அவர் ஈடுபடமாட்டார். அத்தனைக் கண்ணியம் இருக்கும். 

வாசுகியின் ஒவ்வொரு இதழிலும் அவர் எழுதும் தலையங்கம் மிகவும் சுவையாக இருக்கும். ஒரு தலையங்கத்தில், தனது மனைவி தாமரை புஷ்பம் பற்றிப் பேசியிருந்தார். அந்த இதழ் வெளிவரும் அன்று, மதுரையில் இருந்தேன். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தவள், அங்கு தாமரைமணாளன் -  தாமரை புஷ்பம் பெயரில் அர்ச்சனை செய்து  குங்குமப் பிரசாதம் கொண்டு வந்த நான், சென்னை திரும்பிய அன்று அவரிடம் நேரில் சென்று  பிரசாதம் கொடுத்து அவரது அன்பு மனைவியிடம் தருமாறு சொன்னேன். தன்  இருக்கையிலிருந்து சட்டென எழுந்து நின்று, “மொதல்ல ஏம் பொண்ணுக்குத் தரப்போறேம்மா! ஒன்னைபோல தான் அது - அவ நல்லபடியா இருக்கணும்மா!!” என்று நெகிழ்ந்தார். எவரிடமும், சொந்தப் பிரச்சனைகள் பற்றிப் பேசக் கூடாது எனும் நல்ல நெறியைப்பற்றி வாழும் அவரிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று அமைதியாக விடை பெற்று வந்துவிட்டேன்.

இது நடந்து பலமாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் தொலை பேசி அழைப்பு வந்தது அவரிடமிருந்து. இரண்டு வருடத்தொடர்பில் அவர் என்னை அழைத்த ஒரே   தொலை பேசி அழைப்பு அதுதான். மிகுந்த பணமுடையில் இருப்பதாகவும், ஏதேனும் பணம் கடனாகத் தந்து உதவினால் நன்றி செலுத்துவேன் என்றார். நான் எந்த விவரத்தையும் அவரிடம் கேட்கவில்லை. எப்போது வேண்டும் என்றேன் அன்றே தந்தால் சிறப்பு என்றார். இன்று ஞாயிற்றுக் கிழமையாயிற்றே என்றேன். யாரையாவது உடனே அனுப்பி வாங்கிகொள்ளுகிறேன் இல்லை இல்லை நான் புறப்பட்டு வருகிறேன் என்றார். வயதானவர் அலைய வேண்டாமென நானே கிளம்பினேன் பெருங்களத்தூர்- ரயில் நிலையத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.   “ரெண்டு சின்னக் கொழந்தைகளாச்சே! அதுகள விட்டுட்டு வீட்டு வேலைய போட்டுட்டு வந்து எனக்கு உதவி பண்ணியிருக்கிக! நீங்க -- நீ நல்லா இருக்கணும்” என்றார். அன்று அவரைப் பார்த்தபோது “சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்” என்கிற வாசகம் நினைவுக்கு வந்தது, நான் அவரிடம் பணம் பற்றிப் பின் எப்போதும் பேசவே இல்லை, வாசுகி அலுவலகத்தில் நான் சந்திக்க நேரிட்ட வேளைகளில் எல்லாம் அவர் கண்களில் உதித்த  நன்றி தெரிவிப்பினை என்னால் உணரமுடிந்தது.

இடமாற்றம் ஏற்பட்டுக் காலம் உருண்டோடிவிட்டது. ஆயினும் எளிமையான அந்தப் பெரியவரிடம் நான் கண்ட பண்பாடு மட்டும் நிலைத்ததாக இருக்கிறது.  

தமிழ் மீது தனக்கு இருந்த காதலுக்காகவே அரசாங்க வேலையைத் துறந்து எமக்குத்தொழில் எழுத்து எனப் பல இடர்பாடுகளுக்கு இடையே எழுத்தாளனாக வாழ்ந்து காட்டியவர் தாமரை மணாளன். எளியோரை மறந்து வலியோரை வாழ்த்தும் போக்காகத் தமிழுலகம் மாறிவிடக்கூடாது. இந்த நல்ல மனிதருக்கு நல்லதொரு நினைவுப் பதிவை ஏற்படுத்துவது நல்லது. இவரது வரலாறு, மற்றும் விவரங்கள் பிறருக்குக் கிடைக்குமாறு செய்யவேண்டும். இவரது படைப்புக்கள், எல்லோருக்கும் கிடைக்கும்படியாக மின்வடிவில் தயாராகவேண்டும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு - எவரேனும் இப்பொறுப்பான பணியை மேற்கொள்வார்களா?  
    
  

  
    
  

    
          

         

6 comments:

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

அவரை மிகவும் ரசிப்பவர்களுள் அடியேனும் ஒருவன். நன்கு ஞாபகம் இருக்கின்றது 'வாசுகி' இதழ். கடைசிப் பககமும் அவர் எழுதுவது தான். நல்ல எழுத்தாளர். ந.தீ.

Unknown said...

பொதிகை பூங்குயில் நாவலை நான் வாசித்தேன். என்ன அருமையான காதல் வரலாறு சாதி மதம் அனைத்தையும் கடந்த காதல் என்னை மிகவும் ஈர்த்தது. கடந்த வாரம் தான் அந்த நாவலை வாசித்தேன். அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தேடிய போது அந்த நாவல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. யாரேனும் அந்த நாவல் கிடைக்கும் இடத்தை எனக்கு சொல்லுங்கள் . தாமரை மணாளன் இறந்து விட்டார் என்பதே எனக்கு இபோதுதான் தெரிந்தது. மிகவும் வருந்துகிறேன்

இரா. கிரிதரன் said...

நான் தாமரை மணாளன் ஐயாவை ஓரளவிற்கு அறிவேன். அவ்வமயம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது வாசுகி இதழில் கலந்துரையாடலும் அதன் செய்திகளும் வெளியாகும். அதையொட்டி அனைத்துக் கட்சி இளைஞர் அமைப்புகள் சார்பாக சிலபேர் கலந்துரையாடுவதற்கு வந்திருந்தனர். என்னையும் அனுப்பி வைத்தார்கள். எனக்கு தெரிந்ததைப் பதிவு செய்துவிட்டு வந்தேன். எங்களை ஒருங்கிணைத்தவர் ஐயா, எழுத்தாளர் தாமரை மணாளன் அவர்கள்தான். அவர் எழுத்தாளர் என்பது எனக்கு தெரியாது. கம்பீரமான கரிய தோற்றம். சற்றொப்ப மறைந்த சிறுகதை எழுத்தாளர் சு.சமுத்திரம் போல் இருப்பார். அப்பொழுது அவரை நேரில் பார்த்த சிறு அனுபவம்தான். எனக்கு வாசிப்பு அனுபவம் அப்போது போதவில்லை. தினமணி கட்டுரைகள், ஜனசக்தி சில கட்டுரைகள் என வாசித்து அதனை தெருமுனைக் கூட்டங்களில் பேசுவது என்ற நிலையில் இருந்தேன். அவரின் படைப்புகளையும் வாசித்த அனுபவம் இல்லை. அப்போதே அவருக்கு வயது 60 இருந்திருக்கும். வாழ்க எம்மான்! 9176812501

Anonymous said...

1979 ல் எனது திருமணம் விருது நகரில் இவரது தலைமையில் நடந்தேறியது.அக்காலக்கட்டத்தில் இவ்விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. எனது தந்தையும் இவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர்கள். நான் சென்னைக்கு வந்த பிறகு இவரை சந்திக்க ஆர்வமுடன் இருந்தேன்.அது கைகூடவில்லை.

Unknown said...

தாமரை மணாளன் இதயம் பேசுகிறது இதழில் அந்தப்புரம் என்றும் பின்னர் இந்திரா விழா என்றும் இரண்டு சரித்திர புதினங்கள் தொடர்கதையாக எழுதினர். தமிழ் அவருக்கு லாவகமாக வரும் என்பதற்கு அந்த இரண்டும் உதாரணகள். அந்த நாவல்கள் 1980 வாக்கில் வானதி பதிப்பகம் வெளியிட்டதாக நினைவு. இதயம் பேசுகிறது இதழில் மணியனோடு இருந்த வரை அவர் நன்றாக இருந்தார். நக்கீரன் என்ற பெயரில் காரசாரமாக அவர் இதயத்தில் எழுதியதும் நினைவுக்கு வருகிறது.
C.N. RAJARAJAN, thanjavur

Unknown said...

You are lucky atleast you have seen him and you where able to travel with him. But myself as current generation, couldn't able to get blessed as like as you.

Post a Comment