Subscribe:

Pages

Thursday, July 28, 2011

கோப்பும் கோப்பையுமாய் அரசுப் பணியாளர்கள்

கோப்பும் கோப்பையுமாய் அரசுப் பணியாளர்கள்



இருவாரங்களுக்கு முன் சென்னையில் நானிருந்தபோது சென்னையின் புராதனமானதொரு கட்டிடத்தில் இயங்கிவரும் அரசுசார் நிறுவனம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தபோது வெறிச்சோடிப் போனார்ப் போல் தெரிந்தது. பழைய களையில்லை. எனக்குப் பரிச்சயமான முகங்கள் எதுவும் தென்படவே இல்லை. விசாரித்தபோது பழைய ஆட்கள் யாவரும் ஏறக்குறைய ரிட்டையராகி விட்டிருந்தார்கள் என்பது தெரியவந்தது!!

எங்கு நோக்கினும் புதுமுகங்கள்!! ஆனால் அவர்கள் எவரிடமும் சுறுசுறுப்போ தெளிவோ, பணிபக்தியோ, பொறுப்போ, தென்படவில்லை!! எதுகேட்டாலும் தாறுமாறாய் பதில் வந்தது. அனைவரும் நடுத்தர வயதினர்! நாற்பதிலிருந்து அதற்கு மேல் தான் வயதிருக்கும் எவரொருவருக்கும். மனம் ஒன்றுதல் இல்லாமல் அவர்கள் அங்கு வேலைக்கு வந்திருப்பதாய்ப் புரிந்தது.

கோப்பைத் தொடுவதும், கொஞ்சம் புரட்டுவதும், கம்ப்யூட்டரில் எதையோ தட்டுவதும், உடனே கழிவறைக்குப் போய்வருவதும், செல் போனில் வரும் அழைப்புக்காய் வராந்தாவிற்குச் சென்று சவதானமாய் வெகுசத்தமாய்ப் பேசிவிட்டுவருவதும். உடனே டீ சாப்பிடச் செல்வதும், அங்கிருந்து வந்த ஒரு ஒருமணிநேரத்திரற்கேல்லாம் சாப்பாட்டிற்குச் செல்வதும் - இந்த முற்பகல் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே நான் சென்ற வேலைக்காக, அந்த செக் ஷனில் காத்துக் கொண்டிருந்தேன்.

நான் அங்கு காத்துகொண்டிருந்த வேளையில்ஒன்று பளிச்செனப் பட்டது --- அதிர்ச்சியாகவும் இருந்தது - அங்குள்ள பணியாளர்களில் முக்கால்வாசிப் பேர்கள் குடிப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்!! இலேசான் சாராய வாடையை அங்கே நுகர முடிந்தது!!

தொந்தியும் கல்லீரல் பெருத்து முன் தள்ளியதான "சிரோசிஸ் லிவர்" பிரச்சனையுடனும் வெகுபலரும் காணப்பட்டனர். சாப்பாட்டு இடைவேளையின் போது இரு சிப்பந்திகள குடிபோதையில் மிகவும் கீழ்த்தரமான வாசகங்களைப் பயன்படுத்தியவாறு பகிரங்கமாகவே வராந்தாவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

சாப்பாட்டு இடைவேளியிலிருந்து வர அரைமணிநேரம் தாமதம், வந்த கொஞ்ச
நேரத்திற்கெல்லாம் டீ ப்ரேக், அடுத்து, அரைமணிநேரம் முன்னதாகவே வேலையை முடித்துக்கொண்டு புறப்பாடு என பிற்பகலும் கண்கொள்ளாக் காட்சியாகவே போனது.

நான் அரைமணிநேரத்தில் முடியும் என எதிர்ப் பார்த்துச்சென்றிருந்த வேலை முடிய ஐந்து நாட்களாகின.

கரை போட்ட வேட்டிகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள்! அவர்கள் வந்தால் இவர்கள் எழுந்து நின்று பதில் சொல்லும் - இயங்கும் விதமும் அலாதியாக இருந்தது.

நம்மூரில் அரசு அலுவலகங்கள் திறம்பட இயங்குவதில்லை எனபது தெரிந்த விஷயம் தான் என்றாலும் - இத்தனை அளவுக்கு - ஒட்டுமொத்தத் சீர்கேடு எனும்படியாக - நிலைமை போயிருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

குடிபோதையும் சாராய வாடையுமாக கோப்புக்கும் கோப்பைக்குமிடையில் அரசுப் பணியாளர்கள் நர்த்தனமாடும் காட்சி கண்ணராவியாக உள்ளது.

புதிதாக சுமார் நூறு பேரை ஒன்றாகப் பணிக்கு அமர்த்தியிருக்கிரார்கள். ஆனால் அவர்களுக்குப் பக்கத்திலிருந்து வேலை சொல்லிக்கொடுக்க அனுபவசாலிகள் இல்லை. அனைவரும் ரிடையராகி விட்டார்கள்.

இவர்கள் என்னென்ன வேலை செய்துகொண்டிருந்தார்களோ இது அரசுவேலையென்று இங்குவந்து சேர்ந்திருக்கிறார்கள். வயது முதிர்ந்திருக்கிறதே தவிர வேலை தெரியவில்லை.

இம்மாதிரியான இடைவெளியும், பொறுப்பற்ற நடைமுறையும் நிகழாதவாறு தடுத்திருக்க முடியும் - நிர்வாகமும், அரசும் - முன்கூட்டியே சரியாக திட்டமிட்டிருந்தால்!!

எதுஎப்படியாயினும், குடிபோதையில் பணியில் இருப்பது, அல்லது, பணியிடத்தில் குடிப்பது ஆகிய இரண்டுமே பணியின் போது நடத்தைப் பிறழ்வு செய்வதாகும். இவர்களை நடத்தை ஒழுங்கீனச் சட்டத்தின் கீழ்க் கண்டிக்கவும் தண்டிக்கவும் முடியும்; பணிநீக்கம் செய்ய முடியும்.

ஆனால் கேட்பாரற்ற ராஜ்ஜியமாக அரசு அலுவலகங்கள் செல்கின்ற நிலவரத்தைப் பார்த்தால் பெருந்தலைகள் என்னதான் செய்துகொண்டிருக்கிரார்கள் என்று வினவத் தோன்றுகிறது.






0 comments:

Post a Comment