Subscribe:

Pages

Saturday, July 2, 2011

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூ உம்

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூ உம் 
அவ்வை மகள்
(டாக்டர் ரேணுகா ராஜசேகரன்)
வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கவியரங்கத்திற்காகப் படைக்கப்பட்டது 
நாள்: ஜூலை 2, 2011
இடம்: சார்ல்ஸ்டன், தெற்குக் கரோலினா  


  
மாட்சிமை செறிந்த ஆட்சிமைக்கு அரசனன்றோ அரணாவான்?
மட்சுமை ஏற்றம் மன்னவர்க்கு முடி சூட்டிய பட்டத்தின் பாடன்றோ?
தாட்சிமை அறுத்து மேதினியில் நல்லறன் காணல் அரசின் கடனன்றோ?
தட்சணைபெற்று செயல் தொடக்க அரசவண்  வேண்டுவதெவனெவன் அவனியிலே
காட்சியில் கவினுறு வனப்புடனே ஆள் பலம் காணுதல் அரியணையோ?
கட்சிகள் காட்டும் சாகசங்கள் பச்சோந்திகளின் பழக்கமன்றோ?
காசுக்கெனவே மாரடிக்கும் நடிகர்  பதவியிலமருதல் பாவமன்றோ?
கசுங்காய்கள் தம்மைக் கனிகளென பறைசாற்றிக் கொள்ளுதல் குற்றமன்றோ?
கயவர்கள் கூடம் அரசவையாய் மாறிப்போனது  இழுக்கன்றோ? நீதி
காயா நெடுமரங்கள் மனித சேவைக்கு நைவேத்தியம் தருவதுண்டோ?
முடியரசில் பரம்பரை ஆட்சி வரும், அது  முடிந்துபோன விவகாரம்!
குடியரசிலும் பரம்பரை ஆட்சி என்றால் அது நமக்கேயன்றோ அவமானம்?  
பொதிசுமக்கும் கழுதைகள் மக்களென அரசு போகும்போக்கு நெறிமுறையோ?
பொத்திப்போட்ட  ஊழலோட்டைகளில் தேசக் கப்பல் மூழ்குதே!   மீட்பதெப்போ?
தவ்வும் பட்சிகள் இடம்மாறும்  வசதியாக நல்ல இரை தேடும்!! இவர் 
தாவும் கட்சிகள் பலவாகும்! இரை எடுப்பது மக்களின் உயிராகும்!! 
அரண்மனைகள் தோற்கும் வீடமைப்பார்! தம்மாலானவையனைத்தும் சேர்த்து
                                                             வைப்பார் 
பரண்மேல் உறங்கும் மூட்டைகளில், பதுங்கப் புதையல் கட்டிகளில் மக்கள் குருதி
                                                             வாசம் வரும்  
பிறன்மனை கோருதல் இவர்க்கு வாடிக்கை! மக்களடிவயிற்றிலடித்தல் இவர்க்கு
                                                             வேடிக்கை!

திறனில்லா மக்கள் என்றெனவே இளக்காரமும் செய்குவார் கொக்கரித்தே!!
                                                             மக்கள் சேவை
மகேசன் சேவையென தேர்தலறிக்கையில் ஆத்திகம் பேசிடுவார்! ஓட்டு வென்றதும்
மகேசன் மன்றத்திலே செருப்பு வீசி நாத்திகம் ஓதிடுவார்!!
இறைவன் கோயிலில் கொலைகள் செய்வார்; இறையாண்மையைப் பீடத்தில்  சூறை
                                                             வைப்பார்
மறை பழித்த செயல்கள், வாசகங்கள் அரசவையில் நிகழ்த்தி ஆர்ப்பரிப்பார்!
                                                             இவர்    
குடியைக் கொணர்ந்தார்  குழி பறித்தார்; குடும்பம் சிதற வழி வகுத்தார்
குடிநீர் மறித்தார் குலை அவித்தார்  கல்விகலைகள் வணிகச் சரக்கென்றார்
கற்பு காத்த கண்ணகிகள் வீதியில் அவலமாகவே நின்று அவதியுற்றார்
பொற்புடைப் பெரியோர், சான்றோர்கள் தலைகுனிந்து கண்ணீர்  
                                                                                               
                                                             மல்கி நின்றார்
சாதிமதங்களைத்  தூண்டி விட்டார்; ஊர் துண்டாட வன்முறை மூட்டிவிட்டார்
தாதிகள், சேய்கள், முதியவர்கள், கதறி வீழ்ந்திட போக்கிரிப் பூசலிட்டார்      
காட்சிக்கெளியவன் தலைவனென்றால் அவனைக் காந்தி காமராசோடு   
                                                                   
                                                                                                      
                                        தொலைத்துவிட்டோம்!! தொலைக்
காட்சிப் பெட்டியில்  மட்டுமே இவர் காட்சி வரும்;  நம் தலைவர்கள் பாராமுகம்   
                                                         அது வெகு  பிரபலம்
சமூக வேரினை இவராட்டவில்லை மௌனமாய் அமிலம் வார்த்துக்     கரைக்கின்றார்       
அமுக்க வேரினையொத்த முகஅசைவில் பல பாதகம் செய்து களிக்கின்றார்

பார்த்தனர் காத்தனர் மக்களெல்லாம் அரசினர் மாறுவர் தேறுவர் என்றபடி     
காத்ததில், பார்த்ததில் பன்மடங்கு பாவம் மிஞ்சுதல் கண்டு அஞ்சிநின்றார்
வெட்டிப்  பயல்கட்கு ஓட்டு தந்து, அவராள விட்டனம் என்று நொந்தார்
ஒட்டுத்துணிக்கும் கேடிருக்கும் ஏழை என்று உய்வது? எனப் பதைத்தார்

மண்ணில் இவர்தம் கூத்துகண்டு விண்ணாள் பொழிவதும் மறுத்து விரைத்தனளோ?
கண்ணில் ஊசிகள் தைத்ததென நிலமகள் வெறித்து வீழ்ந்தனளோ?
விண் மண்  வேதனைக் கூக்குரல் கதறலினை தேவரும் கடவுளும் கேட்டனரோ?
எண்மரும் விரைந்து புவியினிடை அரசியல் முகாமிட்டுத் தங்கினரோ?

நீதிதேவதை தன்கண்ணின் கட்டவிழ்த்தாள்  கலிச்சனி தன்கால்தளை               
                                                                                        முறித்தெறிந்தான்     
சேதியாவதை நாமும் அறிகிலமோ? அவர் கம்பிஎண்ணுவதைக் காணிலமோ?
பிழைக்கத் தொழிலாய் அரசியலை மாற்றி யமைத்துக் கொண்டவர்கள், அரசியல்
பிழைத்தே வாழும் காலத்தை, காலன் கணக்காய் மாற்றி வருகிறான்  
மறவர், மன்னர் காலம்போல் அரசியல் ஆட்சிமைப் பிழைப்பவர்கள்
அறம் கூற்றாய் மாறும் அதிசயத்தைக் கண்டே வியந்து போகின்றார்
                                            மனதுள் நடுக்கம் கொள்கின்றார்!
  

0 comments:

Post a Comment