Subscribe:

Pages

Tuesday, June 14, 2011

நமது தேசியப் பறவை: மை, மையல், மயில்

நமது தேசியப் பறவை: மை, மையல், மயில்  

நமது தேசியப்பறவையாக மயிலைத்தெரிவு செய்தது எவ்வாறு?

இந்தியத்துணைக்கண்டத்து பூர்வீகவாசியானது மயில். இந்தியா முழுவதும் மற்றும் பாகிஸ்தானில் சில இடங்ககளிலும் மயில் காண்ப் படுகிறது.  எனவே இப்பறவையை தேசியப்பறவையாகத் தெரிந்தெடுத்தது  மிகவும்  பொருத்தமானது. 
மயிலை, ஆங்கிலத்தில், Peafowl  என்ற பொதுப்பெயருடன்  அழைப்பர். ஆண் மயிலை peacock என்றும், பெண்மையிலை  peahen என்றும் அழைக்கின்றனர். மனித இனத்தைத்தவிர, மற்ற விலங்கின வகைகளில் பெரும்பாலும் ஆண்களே அழகாய் இருப்பார்கள் என்ற கூற்றிற்கு ஆன்மயிலின் தோகையும் அதை விரித்து அது நடனமாடும்  காட்சியும் சான்றுகள். 
நன்கு வள்ர்ந்த ஆண்மயிலின் தோகையில் ஆயிரம் கண்கள் இருக்கும் என்பார்கள். மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது என்பார்களே! இதற்குக் காரணம் உண்டு. நமது தலைமுடி தன்னாலேயே உதிர்தல் போல மயிலிறகும் தன்னாலேயே முதிர்ந்து விழவேண்டும். இதைவிடுத்து இறகைப்பிடுங்குதல் வலியை உண்டாக்கும். நினைத்த வாக்கிலோ அல்லது பிறர்கேட்பதாலோ மயிலால் தனது இறகை உதிர்க்கமுடியாது.


பர்மா மற்றும் ஜாவாவில் காணப்படும் மயில் சற்று வித்தியாசமானது; பச்சைவண்ணம் மிகுந்து இருக்கும் அவ்வகை மயிலை Green Peafowl  என்பர். இந்திய மயில்கள் பச்சை நீலமும், பழுப்பு நிறமும் கலந்தனவாய், பல்வண்ண ஜொலிப்பில், பெரியதோகையோடு கவர்ச்சிகரமாய் வலம்வருபவை.  மெஃஸிகோவில் வெள்ளை மயில்கள் காணப்படுகின்றன.


எண்ணிக்கையைப்பொருத்தமட்டில் இந்தியாவைக்காட்டிலும் பாகிஸ்தானில் குறைந்த அளவு மயில்களே காணப்படுகின்றன, அதிகமான மயில்கள் காணப்படுவது நமது நாட்டில் தான். குன்றுகளும், குறுங்காடுகளும் நிறைந்தனவாய் -  அதிகக்குளிர்ச்சியும், அதிகவெப்பமும் இல்லாதத் தட்பவெப்பமும் உடையனவாய் நம் நாட்டின் பெரும்பகுதிகள் நிலவுவதால், இங்கு மிகதாராளமாகவே மயில்கள் வாழுகின்றன.

தரைமட்டத்திலும் தாழ்வான மரக்கிளைகளிலும் குஞ்சுகளுக்குக் கூடமைத்து வாழும் மயில்கள், சைவம் - அசைவம் என இரண்டும் பிடித்தவை. அசைவத்தில் பூச்சிகளும் கணுக்காலிகளுமே இவற்றின் பிரிய உணவு. 



சரி - மயில் பாம்பை  உண்ணுமா என்ன?
விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
மயில் பாம்பை உண்ணுவது இல்லை; கொல்ல மட்டுமே செய்கிறது!
பரம்பரை பரம்பரையாக ஏற்பட்டுள்ள பகைமை உண்ர்ச்சியின் வெளிப்பாடு இது!
மயிலின் குஞ்சுகளைக் கபளீகரம் பண்ணுவதற்காகப் பாம்புகள் மயிலின் வசிப்பிடத்திற்குள் அத்துமீறி நுழைவதுண்டு.   இதனைத்தடுத்து குஞ்சுகளைக்காப்பாற்றுவதற்காக மயில்கள் பாம்பைக் கண்டமாத்திரத்தில் தாக்கி அழிக்கின்றன. கூரிய நகங்களும் அலகும் இந்தப் பாம்பு வேட்டைக்கு ஒத்தாசை செய்கின்றன.

புத்தமதத்தைச்சேர்ந்தவர்கள் மயிலுக்கும் பாம்புக்கும் உள்ள உறவை வேறுவிதமாகச்சித்தரிக்கிறார்கள். பாம்பை அடக்கும் வல்லமை உள்ள ஒரே ஜந்து மயில் மட்டுமே! இதனால் மயில்  எங்களது வழிபாட்டுப்பறவை என்கிறார்கள்.

ஒரு கதை:  ஒரு புத்தபிட்சு பாம்புத்தொல்லையால் நடுங்கிக் கடவுளை வழிபட்டாரம். அப்போது ஒரு மயில் தோன்றி அந்தப்பாம்பை நேருக்கு நேர் நோக்கியதாம்; அந்தக்ககூரிய பார்வைக்குக்கட்டுப்பட்டு அந்தப் பாம்பானது மயிலின் உடலின்மீது ஏறி அமைதியாகச் சுற்றிக்கொண்டதாம். பாம்புடன், மயில் அங்கிருந்து பறந்து தொலை தூரத்திற்குச்சென்று பாம்பை உதறியதாம். இதனால் பாம்பும் பிழைத்தது; பிட்சுவும் பிழைத்தாராம்.


ஆண்-பெண் தொடுப்பில் நம்ம ஊர் பல-நிற மயில்கள் தனித்தன்மை உடையனவாய் இருக்கின்றன. பெண்மயில்கள் பதிவிரதைகளாகும். ஒரு பெண்மயில் ஒரு ஆண் மயிலோடு மட்டுமே உறவு கொள்ளும். ஆண்மயில்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்மயில்களுடன் உறவு கொள்வது உண்டு.

ஆனால் பச்சை மயில்கள் இவ்விஷயத்தில் மிகுந்த கற்புநெறியோடு செயல்படுகின்றன. ஒரு ஆணுக்கு ஒரு பெண் என ஏகபத்தினி-ஏகபதி விரதைகளாய் அவை வாழ்கின்றன.

குன்றுதோராடும் மயிலை, குன்றக் குமரனாகிய முருகன் தனது வாகனமாக்கிக்கொண்டது பக்தி இலக்கியம் காட்டும் புது அறிவியல். அதிக வேகத்துடன் அதிக உயரத்தில் பறக்கவியலாத பறவை மயில். தந்தையிடமிருந்து மாங்கனிபெறும் போட்டியில் மயில்மீது ஏறி  உலகைவலம் வந்து, பரிசை வேண்டுமென்றே தவறவிட்டு, திருவிளையாடல் புரிந்த அவன் காட்டும் சகோதரபக்தி நம்மை வியக்கவைக்கிறது.


கோயில் கொட்டடிகளில் மயில் வளர்க்கப்படுவதை நாம் அறிவோம்.  மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய்  உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.)

ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும். இன்று, பச்சை மயில்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன. எஞ்சியுள்ளப் பச்சை மயில்களைப் பாதுகாக்க இம்முறையைத் தழுவலாம்.

சைனாவிலும் ஜப்பானிலும் மயிலை, கருணை தெய்வமாகக் கருதுகிறார்கள். க்வான்-இன்-குவானான் என்பது அந்தக் கருணை தெய்வத்தின் பெயர். கிறிஸ்துவம், பேகன், யூதம், இஸ்லாம் உள்ளிட்ட பல சமயங்களிலும் மயில் பற்றி பேசப்படுகிறது. இஸ்லாமியர்களைப்பொறுத்தமட்டில், மயிலை சொர்க்கத்தின் வாயில் கதவைத்திறக்கும் வரவேற்பாளராகக் கருதுகின்றனர்.

பொதுவாக, மயில் என்பது ஆற்றல், கம்பீரம், மற்றும் எழிலைக்குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. விஷஜந்துக்களை அடக்கி அவற்றின் விஷத்தைத் தன் தோகையின் வண்ணமாக்கிக்கொள்ளுவதாக  பலசமயத்தினரும் நம்புகின்றனர்.

உலகில் பலரும் மயிலை தெய்வவடிவாக நினைக்கும் அதே நேரத்தில், மயிலின் ஆட்டத்தை கர்வத்தின் பிரதிபலிப்பாகக் கருதுகிறார்கள். மயிலின் தோற்றம் பொலிவாக இருந்தாலும் அதன் கால்களும், குரலும் நளினத்தைப்பிரதிபலிக்கவில்லை. மாறாக, அருவருப்பைத் தோற்றுவிக்கின்றன. இதனாலோ என்னவோ ஐரோப்பியர்கள் மயிலின் குரலையும் அதன் இறகையும் தீயசகுனமாகக் கருதுகின்றனர். 


மயிலாசனம் என்பது ராஜகம்பீரத்தின் அடையாளம். இந்தியாவில் மட்டுமல்ல; பாபிலோன் மற்றும் பாரசீகப் பாரம்பரியத்திலும் மயிலாசனம் பரவலாகப்பயன்பட்டுள்ளதை அறிகிறோம். மயிலாசனம் ஆசனங்களில் ஒரு வகையாகும். உடலை இலகுவாக்கிக்கொள்ள இது உறுதியான வழியாகும்.


நடனங்களில் மயில் நடனத்திற்கு அதிகப் பிரசித்தி உண்டு. 

சூரிய சின்னங்களில், மயில் என்பது ஆன்மாவைக்குறிக்கிறது. ஆன்மா எனும் ஆற்றல் அழியாத தன்மை உடையதாகவும் பலஜென்மங்களை எடுக்கும் தன்மை உடையதாகவும் இருக்கும் தன்மையை மயில் குறிப்பதாக நம்புகிறார்கள் . 


மயிலின் தோகை அலங்கார அழகுப்பொருட்களிலும் விசிறிகளிலும் பயன்படுவதோடு. பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழ் மருத்துவ முறையில், தொடர் வாந்தியை  நிறுத்த மயிலிறகைச்சுட்டு தேனில் குழைத்து அம்மையை, நாவில் தடவுவார்கள்.




மயிலின் இறகு சீக்கிரத்தில் மக்கிப்போகாது; சரியான முறையில் பாதுகாத்தால் நூற்றுக்கணக்கான வருடங்கள் காப்பாற்றமுடியும். பேனா, தொடங்கி, தூரிகை, மருந்து என மஞ்சம் வரைக்கும் பலவகைகளில் மயிலிறகு நமக்குக் கைகொடுத்துவருகிறது. ஆடை மற்றும் உடுப்புக்களில் மயில் டிசைன் உலக அளவில் பிரபலமானதாகும். இதில் இந்தியர்களாகிய நாம் முன்னோடிகளாக விளங்கி வருகிறோம்.


மயிலின் இறகு வெட்ட வெட்ட வரும் தன்மையுடையது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரியாக சிந்தித்தோமேயானால், மயிலிறகை நல்ல வர்த்தகப்பொருளாக, அன்னியச்செலாவணியை ஈட்டித்தரவல்லதொரு அம்சமாக மாற்றமுடியும். மாமிசத்திற்காக இல்லையென்றாலும், இறகிற்காகவும். இனத்தைக்காப்பாற்றுவதற்காகவும், மயில்களைப்பராமரித்து வளர்ப்பது சிறப்பானதாகும்.

விலங்கியல் நிபுணர்கள் இதுபற்றி சிந்திப்பார்களா?
---அவ்வை மகள் (Dr Renuka Rajasekaran)

1 comments:

Unknown said...

அவை அழிவது உங்களுக்கு பெரியதாக தெரியவில்லை ஆனால் அவற்றின் மாமிசம் இறைச்சி பற்றியே மிகுந்த முக்கியத்துவம் குறித்து கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள் இது மிகவும் கண்டிக்கத்தக்கது

Post a Comment