Subscribe:

Pages

Saturday, July 23, 2011

புத்திமதி கொள்ளல் நன்மைதரும் கேளீர்!- கவிதை- அவ்வைமகள்

புத்திமதி கொள்ளல் நன்மைதரும் கேளீர்!



ஏனிந்த வாழ்க்கை எதற்கிந்த நிலைமை என்செய்தேன் பாவம்
என ஓயாமல் கேள்வி; காலைமுதல் மாலை கணப்பொழுதுமெந்தன் நெஞ்சில்
கனமான அலைகள்; சுமைதாளாத அலறல்!

என்னவெனக்கேட்க யாரும் இல்லையென்றே கண்கள்குளமாகக்
கதறி மனம் நொந்தேன்; சென்றதொரு பாதை சேர்ந்ததொரு பாதை
வென்றதென்று சொல்ல ஏதுமிலையென்று ஆனேன்!

வண்ணமயவாழ்க்கை வார்த்தைமிகமாயம் கொண்டவர்கள்
கூட்டம், சுற்றும் கூத்தர்களின் ஆட்டம்; எண்ணமிட சித்தம்
தேவையில்லையென்றே கூறுமவர்போக்கில் வஞ்சமிகு நெஞ்சம்!

பொய்மைவழிபோக உள்ளம் உள்ளவர்கள் இருக்க எந்தன்
மெய்மைவழி நோக்கம் வேண்டாக்குப்பையென்றவர் வாதம்!!
கயமைமனமாந்தரவர் பெருஊக்கம்; அவருலகில் ஊழல்மிக மிக நியாயம்!

காலபலமின்றி கடினவழிமேவி ஊழிப்பழிகொண்டு உளைச்சல்
நிலைபெற்று வாழும்வகை நடுங்கி பலத்தோர்படை கண்டஞ்சி
விலைபோகாதொரு பொருளாய் வாடிவரலானேன்!

காலமறையோனும் தன் காலளவை விசைக்க ஞானவிளக்கேற்றம்
பெற, ஆதிபகவனவன் பதமதில் வீழ்ந்தேன்! கோலமிகக்கொண்டு
கொள்கைமிகக்கொன்று வீணரிடம் வாழும்வேதனைகொல் என்றேன்!

விடாப்பிடித்தொழுகை நில்லாத்தோத்திரத்தொடர் மாலை
காலைமுதல் ராவரை எந்தனுயிரினிடைக் குடைந்தே
சொல்லிலெந்தன் செயலில், ஈசனெண்ணமிட்டேன்!!

சொல்லிலடங்காத அமைதியெனைமேவ எண்ணிலடங்காத
ஆற்றலெனைச்சேர வண்ணமெழுதாத வானதனைப்போல
தெளியமனமோங்க நிலைபெற்று திடமானேன்!

இறைவன் எனும் உணர்வால் இன்னல் மிகப்பொறுத்தே
இறைஞ்சி தினம் கதறி வழித்துணை வருகவெனக்கேட்டால்
முன்னவனும் வருவான்! மூண்டவினை துடைப்பான்!

மூத்தவர்கள் சொன்ன ஆதிவழி சென்றால் எத்தர்கள்
செத்தனரென ஆவர்; இதை என் வாழ்வினிடை கண்டேன்
புத்திமதி கொள்ளல் நன்மைதரும் கேளீர்! மேன்மை தரும் பாரீர்!!

அவ்வைமகள்

0 comments:

Post a Comment