Subscribe:

Pages

Monday, May 30, 2011

வடிவுக்கரசி: நடித்தலில்லா நடக்கை

வடிவுக்கரசி: நடித்தலில்லா நடக்கை  

எனக்கும் வடிவுக்கரசிக்கும் என்ன பூர்வஜெனம் பந்தமோ தெரியாது. ஒரு கால கட்டத்தில் அவரும் நானும் எப்படியேனும் சந்த்தித்து விடுவோம். குசலம் விசாரித்துப் பேசுவோம். விடைபெறுவோம். ஆனால் எந்த ஒரு சந்திப்பும் திட்டமிடப்படாதது. எதேச்சையாக மட்டுமே  நிகழ்ந்தது. 

எனது பள்ளிப் பருவத்தில் இராணிப் பேட்டையில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். வாலாஜா அறிஞர் அண்ணா பெண்கள் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கிறார். அந்த சமயம் நான் எனது பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். 

பக்கத்து வீட்டில் ஏகப்பட்ட கலாட்டாவாக இருந்தது. எக்கச்சக்கமான வால்யூமில் ஆங்கிலப் பாடல், அதற்கேற்றார்ப்போல இளம்பெண்கள் அரைகுறை உடையில் நாட்டியம் எனத் தெருவே அதிர்ந்த கதையாய் அங்கு ஒரு சத்தம். 

என் பாட்டி வீட்டு ஜன்னல் வழியாக அடுத்தவீட்டை ஆர்வத்துடன் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். பாட்டி ஒரு அதட்டல் போட்டார். "அந்த அறுதல்களைப் பார்த்தைய்னா, ஒனக்கும்  மரை கழண்டு, கிறுக்குப் பிடிக்கும். ஜன்னலை மூடு. ஸ்ரீரங்கத்து ஒலக்கை மாதிரி ஒருத்தி இருக்காப்பாரு அவ தான் இதுகளுக்கு லீடர். பட்டண த்துலேந்து வந்து அவ இங்க பண்ற ரவுசு தாங்கல"

நான் ஜன்னலை மூடும் முன் கடைசியாக அந்தப்பெண்ணைப் பார்த்தேன். நெடு நெடு வென வாட்டம் சாட்டமான பெண்.  ஸ்ரீரங்கத்து உலக்கையை நான் பார்த்ததில்லை. பாட்டி சாடிய பெண் அவள் தான் என்று மட்டும் புரிந்தது. உயரத்திற்கேற்ற   பருமனா  அல்லது பருமனுக்கேற்ற உயரமா என்று 
புரியவில்லை. கருப்பு நிறம். அச்சசல் ஆண் உருவம். டி ஷர்ட்டில் பிதுங்கிய எடுப்பான மார்பகங்கள் மட்டுமே பெண் என்று சொல்லின. 
ஜன்னலை மூடினாலும் அவள் உருவம் மட்டும் மனதிலேயே நின்றது. 
அடுத்த நாள் கோயில் சென்று திரும்பும்போது வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அவள் வாசலை நான் தாண்டும்போது என்னை அழைத்தாள். அறிமுகம் செய்து கொண்டாள். என்னைப் பற்றி அறிந்துகொண்டாள்.

சென்னையில் எனது வீட்டுக்கு அருகில் அவளது தாத்தாவின் பங்களா  இருப்பதைக் கூறினாள்.   எனது முகவரியை வாங்கி கொண்டாள். வீட்டிற்குள் நுழையும்போது ஒரு குற்ற உணர்வாக இருந்தது. பாட்டியிடம் அனுமதி வாங்காமல் அப்பெண்ணிடம் பேசியிருக்கக் கூடாது என்று தோன்றியது. . அதுவும் முகவரி தந்தது பாட்டிக்குத் தெரிந்தால் வானத்துக்கும் பூமிக்கும் அல்லவா குதிப்பார் பாட்டி!  நல்ல காலம் பாட்டி அடுக்களையில் பிசியாக இருந்தாள். பாட்டியிடம் சொல்லிவிடவேண்டும் என்று நாக்கு துடித்தது. ஆனால் அப்பெண்ணை பாட்டி வைவதைக் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை.

வாலாஜா கல்லூரியில் ஆண்டுவிழா எனது உறவுப்பெண் ஒருத்தி என்னை அழைத்துச் சென்றாள். அங்கு வடிவைப் பார்த்தேன். மேக் அப் சகிதம் தனது  குழுவுடன் தயாராகிக் கொடிருந்தார். ஒரு ஆங்கில நாடகம் அவர் இயக்கத்தில் .அரங்கேறப் போகிறது. 

என்னைப் பார்த்த மட்டில் ஓடிவந்து அழைத்துச் சென்றார். "இதப்பாரு உண்மையைச்  சொல்லட்டுமா? நானே ஒன்ன இன்வைட் பண்ணனுன்னு நெனச்சேன். ஒங்க பாட்டியப்பாத்தா எனக்கு பயம். சாரி!!

சரி! எனக்கு ஒண்ணு  சொல்லு!
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தெறமை இருக்கும். எனக்கு டிராமா, பாட்டு --- நீ என்ன செய்வ? 

நானா? 
நல்லா பேசுவேன்! எந்த தலைப்பு கொடுத்தாலும் சமாளிப்பேன்!

இன்னொரு பெண் ஓடி வருகிறாள். ஏய் வடிவு அந்த தலப்பா பொயட் - யாரு அவரு இப்ப இருந்தா நம்பளப் பாத்து என்ன சொல்லுவார்னு பேசச்சொல்லு.

பேசுகிறேன் ---

"ஆணைப் போல் உடையணிந்து ஆணுக்குப் பெண் நிகரெனக் காட்டி சுற்றித் திரிந்தலையும் ஹிப்பிகளாய்ப் பிறழ்வதற்கோ உமக்காய் மன்றாடினேன் - போராடினேன்?" -- எனது  கர்ச்சிப்பு

அத்தருணம் வடிவின் கண்களில் நீர்ப் பனித்ததை அறிந்தவர்கள் நானும் வடிவும் மட்டுமே.            

அடுத்தடுத்து ஏ பி நாகராஜன் தோட்டத்திற்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்க்க நேரிடும் வடிவு. நான் எஸ் ஐ இ டி கல்லூரியில் படிக்கும்போது, சாலையில் நான் நடந்து செல்ல - திடீரென என் பக்கத்தில் காரை நிறுத்தி விசாரிக்கும் வடிவு -   

நந்தனம் டவர்ஸ் அருகில் நான் ஒரு நாள் டூ வீலரில் போக, என்ன என்ன ஓவர் டேக் பண்ணப் பாக்கறியா? என்ற மிரட்டலுடன் கேட்டுவிட்டுப் போன வடிவு.

கள்ளம் கபடமில்லாமல் மிக எளிமையாக நடந்துகொள்ளும் வடிவு.

ஆங்கில உச்சரிப்பிலும் புலமையிலும் தூள் கட்டும் வடிவு.

என்னை விட வயதில் மூத்தவர்  எனினும் மரியாதை தந்து எட்டத்தில் வைக்க முடியாத வடிவு.

நிறைய படிக்க வேண்டும் என்று உள்ளுக்குள்ளே ஓராயிரம் கனவுகள் வைத்திருந்த வடிவு.

இயற்பெயருடனேயே நடிக்க வந்த வடிவு.


திரைப்படத்துறையோடு தனக்குப் பரம்பரைத் தொடர்பு இருந்த போதிலும் அலட்டிக்கொள்ளாத வடிவு. 
நடிப்புகலவாத நடக்கை கொண்ட வடிவு.
 
நான் சந்தித்துப் பழகிய பெண்களுக்குள் என்னை அதிகம் சிந்திக்கவைத்த வடிவு. 
இக்கணம் என்னுள் எழும் வாசகம்: "ஆயிரம் கோடி மலருண்டு - அவளோ அபூர்வ  ஒற்றைச் சம்பங்கி!"
 

 
 
    

       



 


         

Sunday, May 29, 2011

ஓடம் நதியினிலே! ஒருத்தி மட்டும் கரையினிலே!!

ஓடம் நதியினிலே! ஒருத்தி மட்டும் கரையினிலே!!
  
ஜார்ஜியா மாநிலத்தையும் தென் கரோலினா மாநிலத்தையும் பிரிப்பது போல ஓடும் சவானா நதி  - படகுப் போக்குவரத்துக்குப் பெயர் போனது. வணிகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வந்து போவதும். சுற்றுலாப் படகுகள் உல்லாச உலா வருவதும் கண்கொள்ளாக் காட்சி. இப்படகுப் போக்குவரத்தைப் பார்க்கும்போது, சென்னை பக்கிங்காம் கால்வாயில் படகுப்போக்குவரத்தை நாம் பாதுகாத்துப் பராமரித்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும்.

ஆந்திர மாநிலம் வழியாக ஒரிசா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தித் தந்த  பக்கிங்காம் கால்வாயில், உப்பு வாணிகம் வெகு ஜோராய் நடந்ததாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அந்தக் கால்வாயைப் பார்க்காமல் நான் எங்கும் செல்ல முடியாது - அடையாறு நமது பேட்டை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்தக் கால்வாய் ஆக்கிரமிப்புக்களால், குறுகிப் போனதும், குப்பைக்கூளங்களால் அடைசல் கண்டு போனதும், மாடி ரயில் வந்ததால் ஒட்டுமொத்தமாய் மேடிட்டுபோனதும் நானறிந்தவை.
     

இங்கு சவானா நதியைப் பார்த்த மாத்திரம், இதே போன்ற ஆழமும் இதே போன்ற அகலமும் தானே நமது பக்கிங்காம் கால்வாய்க்கும்!! அதைக்  காப்பாற்றத் துப்பில்லாமல் விட்டுவிட்டோமே என்று மனம் நொந்து வெந்து போனது. 
சவானா நதி அத்தனை அழகாய் இருக்கிறது. நதியின் கரை சென்னையின் மெரீனா கடற்கரையை நினைவுபடுத்துகிறது. கரை நெடுகிலும் சிலைகள். மண்ணின்  மணத்தையும் மானத்தையும் ஒருங்கே பறை சாற்றும் சிலைகளின் அணிவகுப்பு இங்கே!!

அவற்றுள்  பிளாரன்ஸ் என்ற பெண்ணின் சிலை பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். சவானா நதியின் மீது பயணம் போன தனது காதலனின்  வரவை எதிர்ப்பார்த்தபடி   கரையின் மீது காத்திருக்கும் பிளாரன்ஸ், தான் நிற்கும் இடம் காதலனுக்குத் தெரியவேண்டுமென்பதற்காக தனது துப்பட்டாவை  வீசுகிறாள். 
ஆனால், வந்த படகில் காதலன் இல்லை. 

இனி வரப்போகும் படகுகளில் காதலன் வருவான் என நின்ற இடத்திலிருந்து துளியும் நகராமல்,  துப்பட்டாவை வீசியபடி நிற்கிறாள் பிளாரன்ஸ். அவள் இவ்வாறு நாற்பத்து  நான்கு ஆண்டுகள் நின்றது சரித்திரம் காட்டும் சான்று, 

ஓடங்கள் நதியினில் ஓட, தான் மட்டும் ஒருத்தியாய், தூக்கிய கைகளில் வீசிய சீலையும், ஒத்தாசைக்கு ஒரு நாயுயமாக இரவும் பகலுமாககே காதலனுக்காய்க் காத்த்திருக்கிறாள் பிளாரன்ஸ். இக்காட்சி காண்பவர் மனதைப் பிசைகிறது.     

ஆடாது அசையாது  நிற்கும் பிளாரன்ஸ்  சிலையைக் காணும்போது "ஓடம் நதியினிலே -- "ஒருத்திமட்டும் கரையினிலே" என்ற பாட்டை நம் வாய்  முணு முணுக்கும்.


 

Tuesday, May 17, 2011

வேதியியலில் எங்கள் உறவுப்பாலம்

வேதியியலில் எங்கள் உறவுப்பாலம்  

டாக்டர்  ஷவாண்டா மில்ஸ் - ஜார்ஜியா கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் வேதியியல் இணைப்பேராசிரியர். அமெரிக்க வேதியியல் சபையின்  "சிறந்த விஞ்ஞானி"  விருது பெற்றவர். 

பழக இனியவர்; உதவி செய்தலுக்கு நல்ல உதாரணமாய் இருப்பவர். 
வேதியிலில் பெண்களின் ஒத்துழைப்பு எனும் அமைப்பின் வாயிலாக,  தொழில் ரீதியான உறவு கொண்டு ஒருவருக்கொருவர் சார்பாய், அனுசரணையாய், இயங்கி வருகிறோம். 

இருவருக்குமே வேதியியல் என்றால் உயிர். ராக்கெட்டுகள் முதல்  வேதமாகங்கள் வரை அனைத்தையும் அலசுவோம். கொஞ்ச காலத்திற்கு முன்பு நான் எழுதிய வேதியனும் வேதிகனே என்ற என் தமிழ்க் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யச் சொல்லிக்  கேட்டு மகிழ்ந்த எளிய அறிவியல் பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. 
 
Dr R என்று என்னை மென்மையாய் இரத்தினச் சுருக்கமாகக் கூப்பிட்டு என்  உள்ளம் கவர்ந்த காரிகை டாக்டர் மில்ஸ். 
 

Sunday, May 15, 2011

வெற்றி அன்னையே! அம்மா!! நீவிர் தான் எங்களின் தாய்!!!



வெற்றி அன்னையே! அம்மா!! நீவிர் தான் எங்களின் தாய்!!!

அன்னையர் தினப் பரிசாக வந்தது  போல இருந்தது  தமிழகத் தேர்தல் முடிவுகள்! அம்மா மீண்டும் நம்மைப் பராமரிக்கும் அரியதொரு பொறுப்புக்கு அதிபதியாகிறார். 

ஜெயலலிதா மீண்டும் பதவியில் அமர்வது  - ஆட்சிமையை மீண்டும் துவங்கபோவது - என்ற ஏகப்பட்ட சடங்குகள் - தொடரப்போகின்றன.

நம் மக்களில் பெரும்பாலோர், இந்தச் சடங்குகளில் எவ்வித ஈடுபாட்டையும் காட்டவில்லை என்பது உறுதி. 

இந்தப் பரபரப்புக் களேபரம் அடங்கி,  இயல்பாய் வாழும் வாழ்வு என்று துவங்கும் என்றே  அவர்கள் ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறார்கள்.

ஜிகினா பளபளப்பில், மதியிழந்து, ஓட்டுப் பொறுப்பில் கோட்டை வீட்ட நிலை மீண்டும்  ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்துபவர்களே ஏராளம் பேர்.
 
தொடர்ச்சியாய் ஏறும் விலைவாசியால், தொடர்ந்து சரியும் வாழ்க்கைத்தரம், ரௌடி அரசியல், பாதுகாப்பற்ற நிலையில் அல்லாடும் இளம் பெண்கள், களைய முடியாத ஊழலுடன் கல்விக் கூடங்கள், முறைமைகள் இல்லாத வேலை வாய்ப்புக்கள், வசிக்க இயலாத வீடுகள், தாகம் தணிக்காத் தண்ணீர், போக்கிடம் இல்லாத முதியவர்கள், போக்கிரித்தனத்தில் இளைஞர்கள், நலிந்து போன கிராமங்கள், நரகமாய்ப் போய்விட்ட நகரங்கள், அம்மா இல்லாத வீடுகள், கும்பல் கூடும் ட்யூஷன், மக்கள் சங்கிலியாய் ரேஷன் கடை கியூ,------

நீளும் இந்தப் பட்டியல், நம் அன்னையின் கண்ணில் புலப்படட்டும்.

அவரது போன பதவிக் காலத்திற்கும், இப்போதைய பதவிக் காலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை  அன்னை அறிவாராக. மிகக் குறிப்பாக, அவருக்கு வயது முதிர்ந்திருக்கிறது. எனவே அவருக்கு விவேகம் முதிர்ந்திருக்க வேண்டும் என்று எவருமே எதிர்ப் பார்க்கிறார்கள்.

அவரது போன பதவிக்காலத்தைக் காட்டிலும், இந்தப் பதவிக் காலத்தில், நம் மக்கள் மிக அதிகமான பரிதவிப்புடன் காணப்படுகிறார்கள். அதிகமான இல்லல்களுடன்  ஒவ்வொரு மணிநேரத்தையும் எப்படியோ நகர்த்தி வருகிறார்கள்.  அவர்கள் உள்ளம் முழுவதும் காயம், அவர்கள் உடல்களில், தொய்வு, களைப்பு, பலவீனம், இயலாமை. அவர்களுக்கு எவ்விதத்திலும் தொல்லை தராதவாறு அம்மாவும் அவரது சகாக்களும் நடந்துகொள்ளட்டும்.

அம்மா இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு 
இணையாக அமரப்போகும் எதிர்க் கட்சிக்கு அரசியல் வரலாறு இல்லை. அனுபவம், இல்லை, முதிர்ச்சி இல்லை. 

ஆனால் இவரை ஒத்த ஜிகினா பளபளப்புடன், இவரை விஞ்சும், யதார்த்த  சூட்சுமத்தைக் கையாளும் திறமையுடன், வன்முறைக் கிளர்ச்சிகளுக்கு வித்திடும் நோக்குடன் வளைய வரும் தன்மை எதிர்க் கட்சியிடம் இருக்கிறது.  அம்மாவின் ஒரு சின்ன சொற்குற்றம் கூட மாநில அளவில்- தேசிய அளவில் - பெரும் கொந்தளிப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம்.

இந்நிலையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும், அரசியல்  நடத்தப் போகிறார்களா அல்லது போட்டா போட்டி போட்டுக் கொண்டு  ரகளை செய்யப் போகிறார்களா என்று மக்கள் மனக் கலவரத்துடன் காணப் படுகிறார்கள் என்பதை   அம்மா புரிந்து கொள்ளட்டும். 


அம்மா முன்னெப்போதும் இருந்திரா முதிர்ச்சியுடனும், பொறுமையுடனும், கண்ணியத்துடனும், கடமை நோக்குடனும், கவுரவத்துடனும், அரசை நடத்திச் செல்ல  வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அம்மா இதனைச்  செய்தாக வேண்டும்.

தமிழில் பேசாத முதல்வர் என்று முந்தைய  ஆட்சியில் பட்டம் வாங்கிகட்டிக் கொண்டத்தை, அம்மா மறந்து விடக் கூடாது, இன்று காலை கூட, காரில் இருந்தபடியே  நிருபர்களிடம் ஆங்கிலத்தில் பேசியதை உலகமே  கண்டது. தமிழால் பேசி மட்டுமே  தமிழக அரசியலில் சாதிக்க முடியும் என்பதை  காமராசர் முதல், அண்ணா  - கலைஞர் - ஈறாக -  நல்ல அரசியல் தலைமைக்கு எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. தமிழ்த்தாய் வாழ்த்துச் சொல்லி  மட்டுமே அரசு விழாக்கள் தொடங்க முடியும் என்று சட்டம் போடும் அரசின் தலைவி தமிழைப் புறக்கணிப்பதை  - தமிழன்னை பொறுக்கமாட்டாள் - மன்பதை மன்னிக்காது.     

தோழி நாடகமும், வளர்ப்புப் பிள்ளை சாகசங்களும், முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசுவதும், ஆடம்பரங்களும் விடுத்து, திடீர்ப் புரட்சி உடைகளும், அலங்கார அணிகலன்களும் தவிர்த்து,  படாடோபம் இல்லாது எளிமையாய் நடந்து கொண்டால் அன்னை அரியணைக்குப் பெருமை சேர்ப்பார். அன்றேல் நினைத்துக் கூடப் பார்க்க முடியா நெருக்கடிகளை அவரும், அவற்றால் தமிழக மக்களும் சந்திக்க நேரிடும்.

இன்று அன்னைக்குத்  தேவைப்படுவது: வேகமல்ல - விவேகம். உணர்ச்சி அல்ல முதிர்ச்சி.  முகஸ்துதிகள் அல்ல- இடித்துரைப்பு. 


 வாழ்வா சாவா என்கிற நிலையில் பற்பல குடும்பங்கள் தத்தளிக்கின்ற வேலையில்  காட்சிக்கு எளியவராய் - கடுஞ்சொல் அல்லாதவராக இருந்தால் மட்டுமே அன்னை மக்களின் மனதில் அமருவார்.  தமிழக மக்கள் மாற்றாந்தாயை நம்பும் விருப்பமில்ல்லாதவர்கள்.

 இன்று ஒன்று மட்டும் தெரிகிறது; மக்கள் முன்னைப்போல, பொறுமையுடன் அரசியல் வாதிகள் கூத்தை வேடிக்கைப பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.  சாது மிரண்டால் காடு  கொள்ளாது  என்பது  போல அவர்கள் ஆக்ரோஷத்துடன் கொதித்து எழுந்து விட்டால் --  அரசுகளில் பாடு அதோகதிதான்.

மக்கள் கொதித்தெழும் அந்தப் பிரளயம்  நியாயமானது என்றாலும் அது  வெகு பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் பதவியில் அமரப் போகும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்,  தன்னடக்கத்துடன், பணிவுடன், தமிழக மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்பது அவர்களது தலையாய கடமை. சொல்லப் போனால் மக்கள் முன்னே இவர்கள் இரந்து பெற்ற ஓட்டுக்களால் மட்டுமே இவர்களுக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது!!  இது மக்கள்  போட்ட "பிட்சை " என்பதனை இவர்கள் இருவரும் கணந்தோறும் எண்ணிப் பார்க்கட்டும். 

ஜெயலிதா என்றால், அதர்மத்தை வென்ற அன்னை என்பது பொருள்.
அம்மா தனது  பெயரையும் தமிழகத்தின் பெயரையும்  காப்பாற்றுவாராக!

விஜய காந்த் என்றால் வெற்றி விரும்பி என்று பொருள். ஐயா!! உங்கள் பெயருக்கேற்றாற் போல் நீங்கள் இயங்கி வருவதை மக்கள் அறிவார்கள்!

நினைத்ததைச் சாதிக்கும் திறன் படைத்த நீங்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றவாறு, வன்முறைக்கு வித்திடாத அரசியலையும், ஆளும் கட்சிக்கு பலமாய்  இருந்து, நல்ல பல செயல் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தை உயர்த்துவதை  மட்டுமே நினையுங்கள்.  முதல்வராக வேண்டும் என்ற உங்கள் உள் நினைப்பை மக்கள் அறியாதவர்களா என்ன?

ஆட்சிமைப்பொறுப்பில் வருவது  பெண் என்பதில் உமக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. உம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் அவர் மூத்தவர் என்பது அடிப்படையாகும்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாரதியின் வழி வந்த நீங்கள், உமது பொறுப்பை நழுவவிடமாட்டீர்கள் என்று தமிழக  மக்கள்  எதிர்ப்  பார்ப்பது இயல்பே!!  உமது சொல், சிந்தை, செயல் இவை மூன்றிலும் இறுக்கத்தை விடுத்து,  இணக்கத்தை இணைத்து  மக்கள் விரும்பியாக நீங்கள் உருமாற்றம் - உளமாற்றம்  அடைய  வேண்டும். தலைவனாக நடிப்பதற்கும், தலைவனாக நடப்பதற்கும் லட்சக்கணக்கான வித்தியாசங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறியாதவரா  என்ன?


தமிழகம் தரணியில் தனிப்பெரும் கவுரவம் பெறுவதற்கு ஜெயலலிதாவும் விஜயகாந்துமான நீங்கள் இருவரும் பொறுப்பேற்று  நடப்பீர்களாக!!

வாழ்க தமிழகம்!!        


   

 

Thursday, May 12, 2011

வண்ண வண்ணச் சேலைங்க!! வசதியான சேலைங்க!!

வண்ண வண்ணச் சேலைங்க!! வசதியான சேலைங்க!!

இந்தியா தொடர்பான விழா என்று வந்துவிட்டால், விழா நடக்கும் இடத்தில் ஒரு குட்டி பஜார் வந்து விடும். 

அங்கே என்ன கிடைக்கும்? 
எல்லாம் கிடைக்கும்.
கல்வி, கலை, ஆன்மிகம், மருத்துவம். என எல்லாமே அதில் அடக்கம். 

மிகக் குறிப்பாக, நம்மூர் உடுப்புக்களும், அணிகலன்களும் இங்கு மாபெரும் அணிவகுப்பையே நிகழ்த்தி விடும்.

க்வின்னட் பன்னாட்டுக் கலையரங்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய  விடுதலை விழா பிரம்மாண்டமானதொரு விழாவாகும்.

செல்லும் வாயெல்லாம் சேலை என்பதை என்னால் இயன்ற அளவுக்குக்   காப்பாற்றி வருகிறேன்.

கடந்த விடுதலை விழாவிலிருந்து சில காட்சிகள் !!






 
  

Saturday, May 7, 2011

நம்பிக்கைப் பெண்மணி : டாக்டர் பத்மினி சர்மா


அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில்: திரு சந்த் குப்புசாமி, திரு ஆனந்த் தங்கமணி, டாக்டர் பத்மினி சர்மா, திரு சேக்கிழார், நான்   
  
 நம்பிக்கைப் பெண்மணி
 
எத்தனையோ வேலைக்கு நடுவிலும் என்னைப் பற்றி நினைக்கும்  - டாக்டர் பத்மினி சர்மா

நெல்லின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் படியாக தனது பெயரை Paddy Sharma  என மாற்றியமைத்துக் கொண்டவர். கேட்காமலேயே உதவி புரிபவர். தமிழ்ச் சமுதாயத்திற்கும், இந்தியச் சமுதாயத்திற்கும் அயராது  பாடு பாடுபடுபவர். 

எத்தனையோ வேலைக்கு நடுவிலும் என்னைப் பற்றி நினைக்கும் பெண்மணி. மனம் விட்டுப் பேசுவதற்காய் இவர் தேடும் ஒரு சில ஜீவன்களில் நானும் ஒருத்தி என்பது இவர் எனக்கு அளித்திருக்கின்ற நம்பிக்கை ஊற்று.

சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சி மாநகரைப் பூர்வீகமாய்க்  கொண்டவர். செல்லுமிடமெல்லாம் தமிழில் பேசுமாறு தமிழர்களை வேண்டிக் கேட்டுக்கொள்ளும் இவரது தமிழ்ப்பற்று போற்றுதற்குரியது, 
 

இவரது மணிவிழாவின் போது இவருக்கு நானளித்த கவிமாலை.

 பாடிகள் நிறைந்த வடவாற்காடு ஆங்கு
பாடிப்புகழ்போந்த கச்சி கோயிலம்பதி
பாடிப்பரவிய வேதமாகமங்கள் அவை விளங்குறப்
பாடிய அறவோர் குலமுறை இசைப்
பாடிய ஆடியில் ஆயில்யத்தாரகை முறைப்
பாடிய வகையினில் பத்மினி பிறந்தனள்
பாடிய பாட்டும் சொல்லிய எழுத்தும் வாய்ப்
பாடிய கணக்கும் வாய்த்த பாங்கினில் வியப்
பாடிய வாய்களும் விரிந்த கண்களும் எதிர்ப்
பாடிய பேர்களும் வளரவே உயர்ந்தனள்; அவர்
பாடிய வண்ணமும் சாடிய வன்மமும் இவள் மனம்
பாடிய வண்ணத்தில் எருவாய்ச் சிறந்திட வாழ்வைப்
பாடிய ஆன்றோர் மணிவாசகத்தில் உளம் உறுதி
பாடியே நின்றது; யாங்கும் கல்விகேள்விகள் தேடியே ஓடினள்
பாட்டிடை மேவிய தொண்டைமண்டலம் சிறப்புடைப்
பாடலம்பதிகளின் அருமை அறிந்தனள்; சிறப்புறு 
"
பாடி"யைத் தனது பெயருடன் இசைக்கவே இவள் இசைந்தனள் 
பாடிஎனும் சர்ம நாமம் தானேசூடினள்; தன்மண்ணிசைப்
பாடியே கிளம்பினள், பாரெங்கும் பறந்தனள், உயர்ந்தனள்
பாடிசர்மா என்றாக்கிய காதல்; கடிமண இணக்கம்
பாடிய பாங்கில் குழலும் யாழும் பிறந்தனப் பேரெழ, வசைப்
பாடிய வாய்களில் புகுந்து புறப்பட்டு இவள் சாதனை
பாடிய சரித்திர முத்திரை; வழுக்குப் பாறையின் அழுக்கைப்
பாடியே வீணாய்ப்போக இவள் விழையா நெஞ்சினள் திறம்
பாடியே சாடுவேன் பிறருயர்வுற வேண்டின செய்குவேனெனப்
பாடிசாண்டிலர்சர்மா நிறுவனம் எழுப்பினள்; ஆன்றோர்
பாடிய கூற்றை வழிமொழி செய்து திரைகடலோடி திரவியம் தேடினள்
பாட்டும் பொருளும் பொருளால் பயனும் கூடிட வேண்டினள்; மன்பதைப்
பாடிப்புகழும் சட்டம், கணினி, கல்வித்துறைகளில் வேலைவாய்ப்
பாடித்திரட்டித் தந்தனள் பல்லோர் பயனுற; அவர் பணத்தையும்
பாடிமனத்திடத்தையும் பாடிடும் பாக்கியம்வழங்கினள் தன்
பாடுகள் மூலம்; எளிமைக்கு எளிமை; வலிமைக்கு வலிமை; கட்டுப்
பாடுகள் நிறைத்து உழைப்பை மிகுத்தினள்; பிறர் படும்
பாடு நினைந்து தன் வலியைமறந்து, தூக்கம், ஓய்வு, உணவு துறந்து
பாடுபடுவதொன்றே என்பணியென ஓடியோடி உழைத்தனள் தேவி
பாடும் பல்லுள்ளங்கள் இவள் பல்லாண்டு வாழ்கவென அவருடன்
பாடும் கொள்ளுவர் இவள் நூராயிரத்தில் ஒருத்தியெனஉலகோர்
பாடும் அறுபது ஆண்டுகள் இவளின்று காணுதல் அற்புதம்தெய்வதம்
பாடும் உன்னதப் பெண்ணிவள் வாழ்க்கையோர் வெற்றிக்களஞ்சியம்
பாடும் கடல்கள் வாழும் வரைக்கும் மாதிவள் வாழ்வு நிலை நிற்கும்! நூலோர்
பாடிய தத்துவம் தழைக்கும்; வீரப்பெண்ணிவள் வாழ்வின் புகழ்விள்ங்கும்!    திசைப்
பாடிடும் கதிரவன் ஒளிமழை போலே அம்மை செயல்திறன் என்றும் சிறந்திடட்டும்!
பாட்டிடைப் புரவலர் பட்டியலில் பாடியின் பெயரும் சிறப்பும் நிலை பெறட்டும்! கவி
பாடிய பாரதி காட்டிய பெண்ணிவளென்றே தரணியோர் போற்றிக்களிக்கட்டும்! நலம்
பாடியே நெஞ்சம் அமைதிகொண்டாடிட ஆண்டவன் நிறையருள் புரியட்டும்!
பாடி வாழிய! நின் சாதனை வாழிய! நின் குடியும் குலமும் தழைத்து வாழிய! எங்கள்
பாடி வாழிய! நின் சிந்தை வாழிய! நின் உறுதியும் தீரமும் நிலைத்து வாழிய! தமிழ்மகள்
பாடி வாழிய! நின் புது நோக்கு வாழிய! நின் திறமைகள் யாவும் செழித்து வாழிய!




அந்த நெலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்

அந்த நெலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்

 
 இப்படி பாடியக் காட்டக் கூடாதாம்!
சட்டைக்கு அளவு வேணும்!
 சட்டத்தில் சரியாய் மாட்டிக்கொண்டாய்!!

 என் அம்மாவின்  பிறந்த நாள்!
எல்லோருக்கும் சொல்லிவிடு!!

உனக்குப்பின்னால் என்ன இருக்கு?
 பூரிக்கட்டை விலை ரொம்ப ஏறிப்போச்சு!! 

 ஷூட்டிங் முடியும் வரை  அப்படியே அசையாமல் இரு!
 உனக்குக் களங்கம்  என்று ஊரெல்லாம் பேச்சு!
துடைக்காமல் விடுவேனா?

 வெள்ளரி பத்தைக்குக் கீழே ஏகப்பட்ட கிராக்கி!! 
 தக்க சிறு பிறைநுதலும் தரித்த பெரும் கோல் நுனியே! 
 அமாவாசையும் கூடாதாம்!! பௌர்ணமியும் கூடாதாம்!! 
 காஷ்மீர் கொள்ளை போகுதுன்னு
கருத்தாய்ச் சொல்லும் சுட்டிப்பெண்ணே! 
 நில்லு! குமிழி எவ்வாறு உருவாகுதுன்னு சொல்லிட்டு நகரு!!
 உனக்கு வண்ணம் பூசச் சொன்னர்கள்!மஞ்சளும் இஞ்சியும் பின்னால் வருகின்றன!!

 ஏய்! விட்டுராதடி! அவ்வைப்பாட்டிக்கு ஏதாச்சும் ஆயிடப் போகுது!
 லேண்டான வேகம்!
 பாட்டி கொஞ்ச நேரத்தில   சரியாயிடுவாங்க!
 பவர் கட் கஷ்டத்துக்கு ஒன்னப்போல
ஒத்தாசைப் பண்ண யாரால முடியும்?
 கையிலப் பட்ட நேரத்துல துள்ளுதே!


புவியீர்ப்பு விசை இல்லேன்னு  நியூட்டன் சொல்லலியா?
 நிலா வேகத்துக்குச சரியா நகரு! பிடிச்சுக்கிட்டே வீட்டுக்குப் போயிடலாம்!!

 வாடா மச்சான்! நம்பளையா கெலிக்கப்பாக்கரே?
கையில இருக்கறது  ஏன்  ஆளுடா!   
 பூலோகத்தில் யாரும்  பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்பேன்!! 
 எந்தன் விரல் நுனியில் உன்னை  சுற்றிவிட ஆசை!!
  இப்படியே முழுசா இரும்மா!
நீ பாட்டுக்குத் தேயறதும் வளர்றதும்!
ஸ்டெடி இல்லாத பொம்பளன்னு பேசிக்கறாங்க!!

 இத்தனைக் கச்சிதமாய் இருப்பாய் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!! 
 உன்னைத் தொட்டுக்கிட்டுத் தான்  ஏம் பொண்ணு  சாப்பிடுவாளாம்!!
 நானும் ஒரு ஹெர்குலஸ் தான்!!
சூரியனுக்குத்தான் நேரம் காட்டத் தெரியுமாம்! எனக்கு வெட்கமாப் போச்சு!! 














சென்னையிலிருந்து ஆத்ம ராமன் அவர்கள் அனுப்பிவைத்திருந்த அருமையான படங்கள்! தலைப்பு மட்டும் என்  உபயம்!!