Subscribe:

Pages

Sunday, March 13, 2011

எனது வண்ணப்படப் பேழையில்: சின்னி ஜெயந்த்தும் நானும்

எனது வண்ணப்படப் பேழையில்: சின்னி ஜெயந்த்தும் நானும்

சென்ற ஆண்டு, அட்லாண்டா மாநகரத்திற்கு,  தனது குடும்பத்தோடு  வருகை  தந்திருந்தவர். அவரது நகைச்சுவைச் சொற்பொழிவில் சிரிப்ப்போ சிரிப்பென்று சிரித்துச் சிலிர்த்த கையோடு, அவரைச் சந்தித்து, சிந்தனைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. எளிமை, ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் தன்மை ஆகியன புலப்பட்டன. ஒருமாபெரும்கூட்டத்தை வயிறு வலிக்கும் அளவுக்குச் சிரிக்க வைப்பது என்பது சுலபமான வேலையில்லை. சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய இந்த சிரமமான பணியை வெகுசிறப்பாகச் செய்துகொண்டிருக்கிற சின்னி ஜெயந்த்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். மனைவி மக்களுடன் இவர் பல்லாண்டு  வாழ்கவென இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

அவ்வைமகள் 

    

கட்டிடத்தொழிலாளர்களின் கடின வாழ்வு


கட்டிடத்தொழிலாளர்களின் கடின வாழ்வு

ஒவ்வொரு தொழிலும் ஒரு வகை; எந்த ஒன்றிலும் சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. குடும்பமாகக் களத்தில் இறங்கிவேலை செய்து கைநிறையக்கூலி வாங்கினாலும் ஒன்றும் இல்லையெனும் கதையாகக் கட்டிடத்தொழிலாளர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வாழும் நிலைபற்றிய கவிதை

கட்டிடக் கட்டிடக் கட்டிடமாம் அதிலொவ்வொரு
கட்டமும் கட்டமே தான்
கட்டுகள் உள்ளவர் கட்டளைக்குக்
கட்டுப்பட்டவர் கட்டிடும் கட்டிடங்கள்

கட்டிடும் கட்டிடம் எத்தனையோ சொந்தக்
கட்டிடம் என்றிடக் கொட்டிலில்லை
கட்டங்கள் கட்டங்கள் கட்டங்களாய் அவர்
கட்டமும் நட்டமும் கூடவரும்

கட்டிதட்டிக்கிளப்பிடும் ஆணுடனே
கட்டிய ஏரினில்மாடெனப்பெண்ணிருக்கும் அவன்
கட்டியதாலிக்குக் கூலியென்றோ பிள்ளைக்
கட்டுத்தட்டுடன் நித்தமும்கூடக் கூடவரும்?

கட்டுத்தலையுடன் கொண்டவன் சாய்ந்திருக்கும்
கட்டுச்சோற்றுக்கும் கூட கேடிருக்கும்
கட்டிய சேலைக்கந்தலிலே காலில்
கட்டுடன் பிள்ளை படுத்திருக்கும்

கட்டுமேத்திரிக்கு அங்கே பாசம் வரும் முன்
கட்டணம் தந்திடத்தேடி வரும்
கட்டளை கட்டளை கட்டளையே அவள்
கட்டுப்படாவிடில் பட்டினியே!

கட்டிலும் மெத்தையும் தேவையில்லை
கட்டித்தொட்டிடும் ஆசைக்கும் பஞ்சமில்லை
கட்டிடம் கட்டிடும் வேளையிலும் அவர்
கட்டுடல் எண்ணுவார் குற்றம் இல்லை

கட்டுவேலைக்கு ஆலாய்ப்பறந்திடுவார்
கட்டுக்கூலியைச் சுளையாய் வாங்கிடுவார் துட்டுக்
கட்டினைக் கண்டதும் மாறிடுவார்
கட்டை சரக்குண்டு வீழுவார் மிச்சமில்லை

கட்டுதல் வாழ்க்கையென்றானதனால் சுயவாழ்வைக்
கட்டுதல் தேவையன்றோ? சிந்தனைச் சீர்படக்
கட்டுதலை முதல்வேலையென்றேயவர் கொண்டுவிட்டால்
கட்டங்கள் மாறுதல் பெற்றுவிடும்; சட்டங்கள் சாதகமாகிவிடும்

கட்டுமானத்தின் வருமானத்திலே அவர்
கட்டும் மானம் உயர்மானமென்றால்
கட்டுத்தொழிலாளர்கள் உய்யுவர் வாழ்வினிலே அவர்
கட்டுப்பாட்டுடன் வெல்லுவர் தாழ்வினிலே!





விந்தை மனம்

விந்தை மனம்

விலகிப்போகிறவரை நினைந்து வாடும்
அருகில் இருப்பவரை விலக்கி வாட்டும்
நில்லென்றால் ஓடும்; படு என்றால் விரைக்கும்
சொல்லென்றால் இறுக்கும்; பொறு என்றால் பதைக்கும்
மற என்றால் மறுக்கும்; எண் என்றால் சுணங்கும்
முடி என்றால் இழுக்கும்; பிடி என்றால் முறைக்கும்
எழு என்றால் உறங்கும்; உறங்கென்றால் விழிக்கும்
தொழு என்றால் துவளும்; எதிர் என்றால் ஒதுங்கும்
பாய் என்றால் பதுங்கும்; படி என்றால் விடுக்கும்
ஒழியென்றால் ஒழியாது கொண்டவரைப்பழிவாங்கும்
பாழ் நெஞ்சே உன்னோடு வாழ்தல் கொடிது .

அவ்வைமகள்

Saturday, March 12, 2011

கண்கள் குளமாகுதப்பா!

கண்கள் குளமாகுதப்பா! 

ஒரு நாடு சோதனை மேல்  சோதனையாக  அனுபவித்து வருகின்ற வேதனைகள்  கல்நெஞ்சு படைத்தவரையும் கூடக் கண்ணீர் சிந்த வைக்கிறது, 
காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களும் இங்குப் பிறழ்வடைய, பிரளயம் நிகழ்ந்து, மக்கள், மாக்கள், இல்லங்கள், ஊர்களென, குவியல் குவியலாய் -- பிராந்தியம் பிராந்தியமாய் அழிவு நிகழ்ந்தேறி  இருக்கிற  - தொடர்கிற அலங்கோலம். என்னடா வாழ்க்கையிது என நம்மைச் சாட்டையிலடிக்கிறது.

இயற்கையின் ஒரு  சிறு சிணுங்கல்தான் இத்தனைக்கும் காரணம். இவ்விழப்பை இந்த சின்ன நாடு எப்படி ஈடுகட்டப் போகிறது? ஈடுகட்டமுடிவதான விஷயமும் அல்லவே! 

இக்கட்டான இத்தருணத்தில் நம்மாலான அனைத்தையும் அவர்களுக்கு நாம் செய்தாக வேண்டுமே! இது நமது கடைமையாயிற்றே!

"நிதி நிறைந்தவர் பொற்குவை தாரீர்! நிதிகுறைந்தவர் காசுகள்  தாரீர்! "   
என்றாரே அண்ணா அதுபோன்று நாம் இன்று விரைந்து உதவி செய்ய வேண்டும். உடுப்புகள், உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் தாராளமாய் அங்கு சென்று சேர வேண்டும்.

நம் ஒவ்வொருவரும் இதனைச் செய்திடவேண்டும். புறப்படுங்கள்!! தாமதிக்க நேரம் இல்லை.