Subscribe:

Pages

Sunday, January 15, 2012

செரியாக் கல்வி : சிறையில் செரிந்தது


செரியாக் கல்வி : சிறையில் செரிந்தது





செரியாக் கல்வி : சிறையில் செரிந்தது







என் முது நிலைக் கல்வி - வேதியியலில்!! இதில் க்வாண்டம் மெக்கானிக்ஸ் பிரிவில் முதலில் வந்த பாடம் "பெட்டியில் ஒரு வஸ்து" (Particle in a Box) என்பதாகும். முழுவதும் கணித வரையறையின் அடிப்படையிலான பாடம் இது.  இதை எதற்காகப் படிக்கிறோம் -- படிக்க வேண்டும் என்று புரியவில்லை. பேராசிரியர் மட மடவென்று எழுதித்தள்ள - எந்திரங்களைப் போல அச்சசல் காப்பியடித்துக் கொண்டிருந்தனர் மாணவ-மாணவியர்.   கேள்வி கேட்பார் எவருமில்லை.
அந்தப் பணியை நானே செய்யலாமே எனத் தோன்ற, கேட்டும் விட்டேன்.
"இந்த   Particle in a Box ஐ நாம் ஏன் படிக்க வேண்டும்? வேதியலிலோ அல்லது நமது தினப்படி வாழ்விலோ  இது எவ்வாறு பயன்படுகிறது? எடுத்துக்காட்டுக்கள் தந்தால் நீங்கள் நடத்துவதைப் புரிந்து கொள்ள முடியும்."  
எனது வெளிப்படையான இந்தக் கேள்வியை ஆசிரியர் பொறுப்பான முறையிலே ஏற்றுக் கொள்வார் என்று தான் நான் எதிர்ப் பார்த்தேன்!  மாறாக  அவர் முகம் சிவந்து வெடிக்க ஆரம்பித்து விட்டார். எம் ஸ் சி என்பது ஆரம்பப் பள்ளியா? ஊட்டி விடுவதற்கு? எடுத்துக் காட்டுக்கள் இல்லாமல் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி இல்லாதவர்கள் இந்த வகுப்பிற்கு வரத்தேவையில்லை – என்றார்.
இவ்விஷயம் அன்றோடு நின்றுவிடவில்லை. அந்த அரையாண்டு முழுக்க என்னை அவர் ஒரு வைரியாகவே பாவித்தார். Internal Assessment என்று சொல்லப்படுகின்ற உள் நிலை மதிப்பீடு ஒவ்வோன்றிலும் கை வைத்தார்.  தன்னாலியன்ற ஒவ்வொறு வகையிலும் என்னை வகுப்பில் அவமானப் படுத்தினார். “மனமே பொறு” என்கிற ஒரே வைராக்கியத்தின் மூலம் அந்த அரையாண்டை நகர்த்தினேன்.  
புரிந்துகொள்ளாமல் வெறும் மனப்பாடப் பயிற்சியின் மூலமே அந்தப் பாடத்தை நான் தேர்வில் வெற்றி கொண்டேன்.  
சொல்லப்போனால், நான் இளம் அறிவியல் படிக்கும்போதே, இயற்பியல் வேதியலில் ஆய்வு நடத்தி அத்துறையில் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று ஆசைப் பட்டேன். அந்த ஆசையை வேரோடு பிடுங்கி எறியும் அளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது இப்பேராசிரியரின் கற்பித்தலும் அவர் மாணவர்களை நடத்திய விதமும். இத்தனைக்கும் நான் இளம் அறிவியல் படிப்பில் பல்கலைக் கழக “ரேங்க்” வாங்கியிருந்தவள். முதுநிலைக் கல்வியின் போது கல்லூரியின் வேதியியல் கழகம், தமிழ் மன்றம், உள்ளிட்ட பல அமைப்புக்களில் பொறுப்பான பதவியும் வகித்து வந்தவள். எனக்கே இத்தனை அவதி என்றால் பிற மாணாக்கர்களின் நிலை பற்றி என்ன சொல்ல?       
புரிந்து கொள்ளாமலேயே என் மண்டைக்குள் ஒரு பாடத்தைப் பதித்தது எனக்குள் மாபெரும் சுமையாக இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல பல ஆண்டுகள் “செரியாத” கல்வியின் சுமையால் வாடினேன் வருந்தினேன்.
பல ஆண்டுகள் சென்றன; சிறையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதற்காக, ஒரு சமூகப் பணி குழுவோடு ஒரு நாள் மைய சிறைச் சாலை சென்றேன். முதல் சிறை அறையின் முன், குழுவாகச் சென்று நிற்கிறோம். அந்த வினாடி, “he is a perfect particle in a box”  என வாய்விட்டுக் கூவினேன்.  அனைவரும் என்னைப் பார்த்து, “என்ன ஆச்சு?’ என்றார்கள்.
“பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தத்திற்கு, நடைமுறையில் ஒரு எடுத்துக்காட்டை, சிறைக்குள் இருந்த நிலையில் அந்த மனிதன் எனக்குத் தந்தான்.

“பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தத்தில் வரும் சில மொழிவழக்குகள் சிறைக் காட்சியில் மட்டுமே எனக்கு விளங்கின. “Boundary Conditions” “Degrees of Freedom” “escape impossibility” “solution to the problem is trivial” “the particle moves in a straight line until it reflects from wall.
சிறை வாயிலில் எனக்கு அறிவியல் ஞானம் பிறந்தது. “பெட்டியில் வஸ்து” எனக்குப் புலப்பட்டது. எட்டாக் கனியென இருந்த  க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தம் உள்ளங்கை நெல்லிக் கனியானது.
இதனைத் தொடர்ந்து,  “பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தத்திற்குப் பல எடுத்துக் காட்டுக்கள் இருப்பது பளிச்சிட்டது: கூண்டுக் கிளி, கருவறையில் இருக்கும் சிசு, தொழுவத்து மாடு என உதாரணங்கள் உதிர்ந்தன.
இந்த எடுத்துக் காட்டுக்கள் வாயிலாக “பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெகானிகல் சித்தாந்தத்தை எனது பேராசிரியர் அன்று விளக்கியிருந்தால் அந்த சித்தாந்தத்தைக் கற்றுக்கொள்வது எளிதாயிருந்திருக்கும்.
நான் சேவை செய்வதற்காக, சிறைச் சாலை சென்ற காரணத்தால் மட்டுமே கிடைத்த ஞான தீட்சை இது. இவ்வகை ஞானம் பெற என்னுடன் படித்த இன்னபிற மாணாக்கர்கள் என்ன செய்திருக்க முடியும்? சரியாகச் சொல்லித் தரப்படாத செரியாக் கல்வியால் அவர்களில் பெரும்பாலோர் வேதியியலை ஒதுக்கி விட்டு வேறு துறைகளுக்குச் சென்று விட்டார்கள். மொத்தம் 18  பேரில் நாங்கள் மூவர் மட்டுமே அறிவியல் துறையில் ஆய்வுப் பணியில் இருக்கிறோம்!!.
எதனை எவ்வாறு சொல்லித் தரவேண்டுமோ, அதனை  அவ்வாறு மாணாக்கர்களுக்குப் புரியுமாறு, கற்பித்தல் என்பது ஆசிரியரின் கடமையல்லவா?  இதற்காகத்தானே அவர்கள் பணியமர்த்தப்பட்டு சம்பளமும் வழங்கப் படுகிறார்கள்?
நடைமுறையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே சில நல்ல ஆசிரியர்களைப் பார்க்கிறோம் (இவர்களில் பெரும்பாலோர் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் அல்லர்). கற்பித்தலைக் கடமை எனக் கருதாது கடனே எனக் கருதும் ஆசிரியர்களே வெகுபலராயிருக்கிறார்கள் (இவர்களில் வெகு பலருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது!)
“குருவில்லா வித்தை சிறக்காது” என்கிற வாக்கை ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியபடி, கற்பித்தலின் பால் பற்றுதல் இல்லாது பணியாற்றும் ஆசிரியர்களைப் பார்க்கும் போது, “பிச்சைப் புகினும் கற்கை நன்றே!” என்கிற வாசத்தை மறு பரிசீலனைச் செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது.               
ஒன்று எவ்வாறு சொல்லித்தரப் படுகின்றதோ அதுவே அது எவ்வாறு கற்றுக் கொள்ளப் படுகின்றது என்பதை முடிவு செய்கின்றது. இவ்வகையில், நாம் நமது கல்வியின் நிலையை சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது என்பது முக்கியமாகின்றது!   
குறிப்பு:    
In physics, the particle in a box (also known as the infinite potential well or the infinite square well) is a problem consisting of a single particle inside of an infinitely deep potential well, from which it cannot escape, and which loses no energy when it collides with the walls of the box. In classical mechanics, the solution to the problem is trivial: The particle moves in a straight line, always at the same speed, until it reflects from a wall.