Subscribe:

Pages

Friday, July 22, 2011

பாரதி: மனிதகுல மறுமலர்ச்சியாளர்களில் உலகின் மிக இளைய தீர்க்க தரிசி!

பாரதியின் சிந்தனை
பாரதியின் சிந்தனை எனும் தலைப்பில் அட்லாண்டாவில் நமது தமிழ் நண்பர்களுக்கிடையே எனது உரை




கன்னலெனத்தகும் இன்னமுதத்தமிழ்
வண்டமிழ் முத்தமிழே

கல்விகலைகளை அள்ளி வழங்கிடும் வெள்ளுடை
கலைமகளே

முக்கடல் தீண்டும், மலையுடைகொள்ளும் என்னருந்தமிழகமே!

பாருக்குள்ளே- நல்ல நாடே எனதுயிர் தாயகமே

இச்சபையிடை அமர்ந்து ஆசி அளிக்கும் திறமிகு சான்றோரே!
என்னில் மூத்தோரே!
என்னையொத்தோரே!
என்னில் இளையோரே!

உம்மை வணங்கி, இயற்கை வணங்கி இனிதே துவங்குகிறேன்!
பாரதியின் சிந்தனை எனும் முத்தாய்ப்பானதொரு தலைப்பில்!

இத்தலைப்பில், எனது சிந்தனையின் தீவிரத்தில் நான் திரட்டிய கருத்துக்களின் அடிப்படையில்

பாரதி ஒரு பொறுப்பு மிகுந்த தேசியப்பாதுகாவலன்!
மனிதகுல மறுமலர்ச்சியாளர்களில் உலகின் மிக இளைய தீர்க்க தரிசி!
உலகின் ஒப்பற்றதொரு அறிவியலாளன் - விஞ்ஞானி

எனும் முத்தான மூன்று குணாதிசயங்களை இச்சபையில் பதியவைக்கிறேன்!

இந்த மூன்று நிலைகளிலும் பார்த்தால்-

தொண்ணூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தாலும் சாதிக்கமுடியாததை தன் ஆயுளான முப்பத்தொன்பதே ஆண்டுகளில் சாதித்த அதிசய மனிதன் பாரதி.
இந்த சாதனை அவனது உயர்சிந்தனையின் வெளிப்பாடு;
தனது ஒரே சொந்த மூளையின் இயக்கத்தின் இடையே அவன் பிழிந்தெடுத்தக் கற்பகச் சாறு அது!
சிந்தனைச்சேற்றிலே அவன் இட்ட தரமான வித்துக்களின் நெற்றுக்கள் அவை
எண்ணமெனும் இயந்திரத்தில் அவன் அரைத்தெடுத்த வித்தக விழுது அது!
தமிழர்சமுதாயம் தரணியில் என்றும் சிரஞ்சீவியாய் வாழுமென அவன் நிறுத்திவிட்டுச்சென்றிருக்கிற விழுதுகள் அவை!

கவிஞன் நானோர் காலக்கணிதம் என்பதனை ஞானவாசகமாய்க் கொள்ளுவது நம் வழக்கம்; ஆனால், கவிஞன் நானோர் திரிகால ஞான விஞ்ஞானியென
வாழ்ந்துகாட்டி தனது சிந்தையின் பெற்றியைத் திடமாய்ப் பதிவு செய்து போயிருக்கிறவன் பாரதி!

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று!"

இது ஆருடம் அல்ல! கணிப்பு அல்ல!! எதிர்பார்ப்பு அல்ல!!
உரமேறிய உறுதி!
குருதியில் சுரமேற்றும் உத்தமக்களியாட்டம்!

நடக்கபோவது இது தான் என்பதனை உரைக்க அமானுஷ்ய சக்தி வேண்டும்!
தீர்க்கதரிசி என்பது கதாபாத்திரம் அல்ல; எவரையும் காப்பியடித்தோ அல்லது சிறப்புப்பயிற்சிகளுக்குச்சென்றோ அதனை அடைந்துவிடமுடியாது;
அது ஒரு சுயவேள்வி!
சொல் - செயல் - சிந்தனை என மூன்று நிலையிலும் தன்னைத்தானே சமுதாயமெனும் குடத்திலிட்டுப் புடம் போட்டுப்பார்க்கும் அக்கினிப்பரிட்சையது
அந்த வேதனை எத்தனைக்கடுமையானது எத்தனைக்கொடுமையானது என்பதனைச் சிந்தனைச் சிற்பிகள் மட்டுமே அறிவர்.

ஆக, காலம்கடந்த சிந்தனையென்பது மனிதர்களிடையே அரிதானதொரு குணாதிசயம்!
எவரொருவருக்கும் அது எளிதில் வாய்க்கப்பெறாது
பரம்பொருள் எனும் இறையருள், தேர்ந்தெடுத்த சில நபர்களுக்கு மட்டும் - இடம், பொருள் ஏவல் பார்த்து வழங்குகின்ற சிறப்பானதொரு வரப்பிரசாதமாகும் அது

அத்தகைய பிதாமகர்களின் எண்ணிக்கை உலகில் மிகவும் குறைவு
அந்தக்குறைச்சல் எண்ணிக்கையிலும் மிகக்குறைவானவர்களே - மிகவும் இளையவயதில். தன் வயதிற்கும், தான் வாழ்ந்துவந்த காலசமுதாயத்தின் தன்மைக்கும் நேரெதிரான சிந்தனைப்புரட்டலில் தன்னை ஈடுபடுத்திகொண்டிருக்கிறார்கள். அந்த மிகக்குறைந்த எண்ணிக்கையான நபர்களில் பாரதியும் ஒருவன்!!!!

அதுவும் பாரதி தோன்றி, வளர்ந்து, வாழ்ந்த காலம் மிகச்சரியானதொரு - நெருக்கடியான காலகட்டமாகும்!

அதற்கு முன்பு - அதற்குப்பின்பு அதாவது இப்போது என்கிற இரு நிலைகளிலுமே இந்திய சமுதாயம் அத்தனை நெருக்கடியில் சிக்கிக்கொள்ளவில்லை.

அன்று மிகக் காட்டமான, வீரியமான, ஆற்றல் மிகுத்த உந்து சக்தி மக்களுக்குத் தேவைப் பட்டது!!


தேவைப்பட்ட நேரத்தில், என்ன தேவையோ அதை மிகச்சரியாகத்தரவென்றே நம்மிடையில் தோன்றியவன் பாரதி!


அது மட்டுமல்ல அவனையொத்தவர் பிறந்தாரும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை எனும் அளவுக்கு அவன் செய்து காட்டிப் போயிருக்கிறான்!!

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்-

Brainstorming என்று நாம் சொல்லுகின்ற சிந்தனைப் புரட்டலில், தற்போதைய நிலையைப்பற்றின முழுதான, பார்வை, புரிந்து கொள்ளல், கணிப்பு ஆகியன வேண்டும். இந்த ஒட்டுமொத்த ஞானம் மட்டுமே விஷன் (Vision) என்கின்ற எதிர்கால ஆராய்ச்சிக்கு ஒருவனை இட்டுச்செல்லமுடியும்.

இவ்வகையில் பாரதிக்கு குழந்தைப்பருவம் என்கிற இளம்பிராயத்திலேயே அதிகமான தேர்ச்சி இருந்தது எனலாம். அப்போதே அவருக்கிருந்த கூர்மையான அறிவாற்றலும் மொழிவளமும் இத்தேர்ச்சிக்குத்துணையாய் இருந்தன என்றால் அது மிகையில்லை. தமிழ் மொழியை வளர்ப்பது முதல், விடுதலை வேட்கை, ஆன்மீகம், தாம்பத்யம், பெண்கள் முன்னேற்றம் எனப்பல பரிமாணங்களிலும் மிகப்பொறுப்பானதொரு கவியாய் - தலைவனாய் - குடிமகனாய் - எனப் பலபரிமாணங்களிலும் உயரிய சிந்தனை செய்து தனது முத்திரையைப்பதித்துச் சென்றிருக்கிறவன் பாரதி.

தனது தனிப்பட்ட வாழ்விற்காகத் தனிமனிதர்கள் சுய நலச்சிந்தனையோடு வாழ்வது இயல்பு. சமுதாயத்திற்காக, உலகிற்காக, பிரபஞ்சத்திற்காக, சுய நலத்தோடு வாழ்ந்த சான்றாண்மை பாரதிக்கு மட்டுமே உண்டு.

இது என் மொழி, இது என் மாநிலம், எனக்கனல் தெரிக்க வீராப்புடன் பேசிய வீரபாண்டியன் பாரதி; பொங்கியெழுவது அவன் குலஒழுக்கமல்ல. பரம்பரைச்சொத்தும் அல்ல; பிறப்பால் அவன் மன்னனும் அல்ல; மறவனும் அல்ல; சண்டையென்றால் என்னவிலையென்று கேட்கும் சாத்வீகமான பார்ப்பனன்; ஆனால் மறவனாய் - மன்னனாய்த் தகிக்கிறான்; கொதிக்கிறான்; பொங்கியெழுகிறான்;

எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினிலே ஒரு பக்தி பிறக்குது மூச்சினிலே!

எத்தனை அருமையாய்க்கேட்கிறான் பாருங்கள்
அந்த வேகத்திலே விவேகம் மேலோங்கியுருக்கிறது
சுவாசத்திலும் கூட தேச பக்தியையும் பிதா பக்தியையும் இழைத்து நெய்கிறான் கவி பாரதியென்றால்
சொல்விற்பன்னத்தில் தமிழை அலங்கரிப்பது அவனது இலக்கு அல்ல
அவன் இங்கே பயன்படுத்தியிருக்கிற ஒவ்வொரு சொல்லிலும் நிறைய சூட்சுமம் தெரிகிறது!!

நாட்டையும் நதியையும் தாயாக பாவிப்பது நம் மரபு.
ஆனால் மேலை நாட்டவர்களின் நிலையோ வேறானது.
நாட்டையும் நதியையும் ஆண்பாலாக - தந்தையாகப்பவிப்பது அவர்கள் வழக்கம்

அவரவர்களுக்கு அவரவர் பாஷையிலே சொன்னால் தான் புரியும் என்பார்கள்
பாஷை என்பது மொழியல்ல; அது பேச்சுவழக்கு
நம்மைப் பிடித்திருப்பவனோ பரங்கியன்!!

பரங்கியரின் வழக்கு மொழியில் அவனுக்கு உரைக்குமாறு சொல்லவேண்டும் என்ற தீர்மானத்தோடு தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் அவன் உரைத்திருப்பது
அவனது கடைமை உணர்ச்சியையும், பொறுப்புணர்ச்சியையும் காட்டுகிறது!


பாரதி கூறுகிறான் - காக்கைக்குருவி எங்கள் ஜாதி என்று
அதுமட்டுமா? இன்னமும் ஒருபடி மேலே சென்று
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
என்று கூறுகிறான்

இன்றைக்கு
Biodiversity
Conservation of Biodiversity

என ஏதேதோ பேசுகிறோம்!

மேடையறிப்பேசுகிற காரணத்தினாலேயே நாம் சொல்லுகிற எல்லாவற்றையும் அரங்கேற்றி விட்டதாய் நினைப்பவர்கள் நாம்!

ஆனால் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரில்லாத்தொகுதிகளையும் கூட எங்கள் கூட்டம் என்று பாரதி அன்றே கூறியது சிறப்பான அறிவியல் அணுகுமுறை!

ஒவ்வொரு உயிரும் - அது தாவரமோ அல்லது விலங்கோ அதற்கென்று ஒரு பொருத்தமான வசிப்பிடம் உள்ளது. இதனை அறிவியலில் நிஷ் என்கிறோம் இது முதல் நிலை சிறு வசிப்பிடம், அடுத்த நிலையில் விரிந்த வசிப்பிடத்தை ஹேபிடட் என்கிறோம்.

உயிரில்லாப்பொருட்களான, மண், கல், நீர், காற்று இவற்றைப் - பற்றி வாழ்பவையே தாவரச்சங்கமம் முதலான விலங்குத்தொகுதிகள். வசிப்பிடங்களில்லாமல் எந்த உயிரினம் வாழமுடியும்?

வானும், மண்ணும், கடலும் அன்றி இங்கே எவ்வுயிரும் சாத்தியம் இல்லையல்லவா?

உயிர்வகை-உயிரிலா வகை - இவையிரண்டும் ஒரு விதையின் இரு வித்திலைக்ள் போன்றவை என்பதையும், உயிரிலாப்பொருட்கள் யாவும் பிற உயிர்களும் மனிதனின் கூட்டாளிகள் எனவும்
எளிதாய் - இயல்பாய் - எவ்வித ஆரவாரமும் அலட்டலும் இல்லாமல் போகிறபோக்கில் பாரதி சொல்லிப்போயிருக்கிற பாங்கு நம்மை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் வியக்க வைக்கிறது.

அவனது ஊழிக்கூத்தும் கூட பிரபஞ்சத்தின் இயக்கத்தை விளக்கி எங்கே விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அங்கிருந்து தொடர்வது மெய்ஞானம் என்கிற உண்மையைப்பறை சாற்றிவிட்டுச்சென்றிருக்கிறது!!

இவ்வுரையின் எனது அடக்கத்தை ஒரு மீள்பார்வையாகப் பார்க்கிறபோது

பாரதி ஒரு பொறுப்பு மிகுந்த தேசியப்பாதுகாவலன்!
மனிதகுல மறுமலர்ச்சியாளர்களில் உலகின் மிக இளைய தீர்க்க தரிசி!
உலகின் ஒப்பற்றதொரு அறிவியலாளன் - விஞ்ஞானி

என்பதை மீண்டும் வலியுறுத்தி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன்

வணக்கம்

0 comments:

Post a Comment