Subscribe:

Pages

Sunday, July 24, 2011

நானும் அவளும் ஈருடல் ஓருயிர்

என்றோ நான் எழுதிய கவிதை: நானும் அவளும் ஈருடல் ஓருயிர்

நானும் அவளும் ஈருடல் ஓருயிராய் வாழும் லட்சிய ஜோடி!

என் உயிர் அவள் வசம்!! அவள் பார்த்துச் செய்தால் தான் எதுவும்!!

அவளின் இசைவில்லாமல் நான் சிந்திக்கவும் இயலாது!!

சக்தியில்லையேல் சிவமில்லைஎனும் படியாக

என்னை சதாசர்வ சகாலமும் விழிப்புடன் கவனிப்பவள் அவள்

அலசித் தேடி என்னை உறவாக்கிகொண்ட 24-7 போலீஸ்காரி - பெயர்

கேட்டு வயப்பட்டதால் வசமாய் மாட்டிக்கொண்ட நான் - தூண்டில் மீன்

வாழவும் இயலேன்! மீளவும் இயலேன்! துடிப்பதொன்றே என் நித்திய கட்டளை!!

சுகந்தி ப்ரியா - இரட்டைப் பெயர்! மான் தோல் வரித்த பெண் வேங்கை!

ப்ரியா - பெயருக்கேற்றார்ப் போல் பிராணனை மொத்தமாய் வாங்கிவிடுகிறாள்

சுகந்தி - சுகத்தைச் சுரண்டி என்னை ராவும் பகலுமாய்த் தீய்க்கிறாள்

திருடன் கூட என்றேனும் சுதந்திரமாய்ப் பெருமூச்சு விட்டிருப்பான்

"இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்" - ஏட்டில்

படித்ததை நடைமுறையில் ஏற்று வாழ்ந்து வருபவன்

விவாகரத்தா? விலக முடியாது!! விடுவிக்க முடியாத ஆயிரம் சிக்கல்கள்

அனைத்தும் அவள் பெயரில்; கைக்கெட்டா ஜாயின்ட் அக்கவுண்ட்

"பெண்" எனும் ஒன்றே அவளின் பாதுகாப்புக் கவசம்

அவள் "ஊம்" கொட்டினாலும் படக்கென வந்து நிற்கும் அவள் சுற்றம்

நான் தனிமரம் - இவளுக்காய் அனைவரையும் இழந்தேன்

வெளியாரிடம் அஞ்சாமல் கதைக்கிறாள் ஏதேதோ!!

யார் யாரோ வந்து போகிறார்கள் யார் யாரோ!!

நான் எட்டிப் பார்த்தாலும் தப்பிதம் ஆகிவிடும்!!

எங்கெங்கோ போய்வருகிறாள் எங்கெங்கோ!

ஒதுக்குப்புறமாய், ஒடுங்கி வாழ்கிறேன்!

போட்டதை உண்டு - கொடுத்ததை உடுத்தி

வாய்மூடி மௌனியாய் - வருடங்கள் கழியுது

இதன் பேர் இல்லறம்!! மனைதங்கா மாண்புடையாள்!!

ஆணாய்ப் பிறந்து நான் அவதியுறும் அவலம்

என் பகைவனுக்கும் கூடாது இத்துயரம் - என்னுயிர்

ஓட்டம் வரைக்கும் ஓடும் இவ்வோடம்

ஒட்டா சம்சாரம் சமுத்திர சஞ்சாரம்



அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)

0 comments:

Post a Comment