Subscribe:

Pages

Saturday, July 9, 2011

காதல் கவிதை எழுதினதால் எவனையோ காதலிக்கிறேன் என்றார் -- மரணம் பற்றிய கவிதை எழுதியதால் -- நான் இறந்து விட்டேன்!

காதல் கவிதை எழுதினதால் எவனையோ காதலிக்கிறேன் என்றார் --
மரணம் பற்றிய கவிதை எழுதியதால்  -- நான் இறந்துவிட்டேன் என்றல்லவா பொருள்? 



பெண்கவிஞர்களுக்கு ஒரு அவஸ்தை இருப்பதை அறிந்தேன்.

பல சமயங்களில் -  அவர்களது படைப்பாற்றலை அவர்களது குடும்ப அங்கத்தினர்களே கொச்சைப் படுத்துவது   நடக்கிறது என்பதையும்
சில பெண் கவிஞர்களின்  கணவன்மார்கள், காதல் கவிதை எழுதியதாலே  மனைவிமார்கள் மீது வீண் சந்தேகம் கொண்டு கொடுமைப் படுத்துவதும் உண்டு என்பதையும் அறிந்த போது மனம் நொந்தது.

அற்புதமான கவிதைகள் எழுதும் பெண் கவிஞர் அவர்; முத்தாய்ப்பான காதல் கவிதை ஒன்றை எழுதினார். எழுதியதோடு நின்று விடாமல். அதனைத் தனது  சில  தமிழ் நண்பர்களுக்கும் அனுப்பிவைத்தார்.
 
அவர்களிடமிருந்து பாராட்டுக்கள் வந்து குவியத் தொடங்கின. ஒருவர் அக்கவிதை தனக்காகவே எழுதப்பட்டதைப் போல் உணர்ந்ததாக எழுதியிருந்தார்.

இதனைக் கண்டார் அப்பெண்  கவிஞரின் கணவர்; தனது   மனைவிக்கும் அந்த நபருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக உருவகம் செய்து,  கற்பனை வளத்தில் பலவற்றை இட்டு கட்டி  அப்பெண்மணியை, அத்தனைத் துன்புறுத்தியிருக்கிறார். அடித்து வீட்டைவிட்டுத் துரத்தியிருக்கிறார் குழந்தைகளுடன்.

"இவரிடமிருந்து இப்போதெல்லாம் கவிதைகள் வருவதில்லையே" என நான் கரிசனத்துடன் காலம்  கடத்தி வருகின்றபோது, அவரை எதேச்சையாகச் சந்திக்க நேரிட்டது.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த அச்சம்பவத்தால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட நிலையில் தனியாக வாழ்ந்துவரும் அவர்  சொன்னார்:

 "காதல் கவிதை எழுதினதால் எவனையோ காதலிக்கிறேன் என்றால் --
மரணம் பற்றிய கவிதை எழுதியதால் -- நான் இறந்துவிட்டேன் என்றல்லவா பொருள்?  அவ்வண்ணமே இறந்தேன்  - கவியையும் மறந்தேன்!!"

0 comments:

Post a Comment