Subscribe:

Pages

Saturday, September 17, 2011

காக்கைச் சிறகினிலே தொங்கல் லாலா!!

காக்கைச் சிறகினிலே தொங்கல் லாலா!!

அணிகலன்களில் புதுமையும் புரட்சியும் வருவது இயற்கைதான்.
இயற்கையாய் நிகழும் இப்புரட்சியில் இயற்கைக்கு இடம் இருக்கும் என்றால் அதனை முதற்கண் வரவேற்பது நம் கடமையன்றோ?

இபோதெல்லாம் அமெரிக்கப் பெண்களின் காதுகளில், காக்கைச் சிறகுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தனியாகவோ அல்லது பிற சிறகுகளை இணைத்தோ இறகுத் தொங்கட்டான்களை அவர்கள் அணிந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.





Fund Raising எனப்படும் நிதித் திரட்டலுக்காக இவ்விதத் தொங்கட்டான்கள் உருவாக்கப்பட்டு விற்கப் படலாயின. கனமில்லாமல், இலேசாக இருப்பது, மிகுந்த கவர்ச்சியாக இருப்பது, புதுமையாக இருப்பது, விலை குறைவாக இருப்பது, என்கிற நான்கு விஷயங்களில் இவ்விதத் தொங்கட்டான்கள் வெகுப் பிரபலமாகி விட்டன. இது போன்றே கழுத்தில் அணிந்து கொள்ளும் இறகு அட்டிகைகளும் தயாராகின்றன.

இறகுக் கவர்ச்சியில் இவர்கள் ஒரு படி மேலே போய் மயிலிறகால் ஆன தொங்கட்டான்கள் மற்றும் அட்டிகைகளின் பால் இப்போது பிரியம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்!!

ஆனால் அமெரிக்காவில் மயில்கள் இல்லை.* எனவே இவர்கள் பிரியப்படும் மயில் தொங்கட்டான்களுக்கு வேண்டிய மயில் இறகுகள் இங்கு இல்லை. ஆனால் இந்தியாவில் மயிலிறகுகள் ஏராளம் தாராளம்!!


இவ்வகை அணிகலன்களைச் செய்ய தொழிற்கூடங்கள் தேவை இல்லை. அதிக முதலீடும் தேவை இல்லை. இல்லங்களில், பெண்கள் தமது வீட்டு வேலைகளை முடித்தபின் மிகும் குறைந்த அளவேயான உபரி நேரத்திலேயே இவ்வகையான ஆபரணங்களை சுலபமாகவும் தரமாகவும் தயாரிக்கலாம். ஓவ்வொரு இல்லங்களிலும் தயாராகும் அணிகலன்களைச் சேகரித்து, முறையாகப் பிரித்து லேபல் ஒட்டி, "விற்கும் தயார் நிலை"க்குக் கொண்டுவர ஒரு மைய நிர்வாகம் வேண்டும்.

இதனை எளிதாக்கி கொண்டால் நமது மயில்கள் இறகு விரித்து உலகை வலம் வருவது நிச்சயம்.


சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் வகையறாக்களில் கவனம் குறைந்து இயற்கைக்கு மாறும் இப்போக்கு நம் மனதுக்கு மட்டுமின்றி இப்புவிக்கும் இணக்கமான செயல் தான். இந்தியாவின் பூர்விக வாசியான மயில்கள் உதிர்க்கும் இறகுகள் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் காதுகளை, கழுத்தை அலங்கரிக்கும் என்றால் இதைவிடவும் பெருமை உண்டோ?

இது போன்றே நம் நாட்டில் உள்ள பல்வேறு பறவைகளின் வண்ண வண்ணச் சிறகுகளைக் கொண்டு (கோழி இறகுகள், வாத்து இறகுகள் உட்பட ), பலவிதமான அணிகலன்களைத் தயாரிக்கலாம்!! ஒத்தாசைக்கு , சிப்பிகள், கொட்டை ஓடுகள், ஜிமிக், வண்ணக் கற்கள, மணிகள் போன்றவற்றையும் இணைத்துக் கொள்ளலாம்.



நம்மூர் அணிகலன் தயாரிப்பாளர்கள் உலக அலங்காரப் பொருட்களில் ஏற்பட்டுள்ள இந்தத் தேவையை கவனத்தில் கொண்டால் நல்லது. வணிக லாபம் மட்டுமன்றி அந்நியச் செலாவணியையும் ஈட்டித்தரவல்ல நல்லதொரு
தொழிலாக இது அமையக்கூடும்.

*குறிப்பு: இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வீக வாசியானது மயில். அமெரிக்காவில் மயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவ்வளவே. உயிரியல் பூங்காக்களிலும், சில தனியார் பண்ணைகளிலும் மயில்கள் வளர்த்துப் பராமரிக்கப் பட்டு வருகின்றன. தாமாக மயில்கள் வாழும் பிரதேசங்கள் இல்லை; வடக்கு அமெரிக்காவில் சில இடங்களில் வலிய குணங்கள் நிறைந்த காட்டு மயில்கள் வாழ்வதாகக் கூறுகிறார்கள்.