Subscribe:

Pages

Tuesday, November 22, 2011

தோழமையில் வல்லினமும் புள்ளினமும் - குழந்தை இலக்கியச் சிந்தனைகள்

govikanna.blogspot.com

யானைகள் பாடும் பாப்பா பாட்டு: குழந்தை இலக்கியச் சிந்தனைகள் 
 
தோழமையில் வல்லினமும் புள்ளினமும்   -

அன்னம்  - கொக்கு - நல்ல நாரை!
இவை யானைகட்குத் தோழரடி பாப்பா!!  

என யானைகள்  பாடுவதுபோல் தோற்றம் தரும் இந்த அரிய வண்ணப்படம் -
தோழமை என்று வந்துவிட்டால் எவரே பெரியவர்? எவரே எளியவர்? எனக் கேட்கிறது!!

"Parenthood" எனப்படும் பெற்றோர் கடமையை இந்த யானைகள் செவ்வனே செய்கின்றன!! குழந்தைகட்கு சமுதாயச் சிந்தனையை  முதலில் போதிக்கவேண்டியது பெற்றோர்கள் தாமே!!    காலுக்கடியில் ஒளிந்தபடி பெற்றோரின் விளையாட்டைக் கவனிக்கும் அந்த யானைக்குட்டிகளுக்கு - பய உணர்ச்சி  விலகி - முன்வந்து  - பிற உயிரினங்களுடன் தோழமை காட்டும் தைரியமும் - பண்பாடும் - கடமையும் இயல்பாகவே உருவாகுமன்றோ !!

யானைகட்கும் அன்னப் பறவைகட்கும்  இடையே உள்ள இந்த நட்பார்வம் ஒரு ஆத்மார்த்தத் தோழமை என்பதை யானைகளின்  கண்களில் வெளிப்படும் களிப்பிலிருந்து மட்டுமா காண்கிறோம்?  அன்னப் பேடைகளின்
சிங்காரத் தோரணையிலும் அல்லவா இந்தத் தோழமை வெளிப்படுகின்றது? 

குட்டிக்கரணம் போட்டுப் புரண்டு விளையாடி - யானையின் ஸ்பரிசத்திற்கும் - குறும்புக்கும் இலக்காகும்  மூன்று  அன்னங்கள்  - யௌவன கர்வத்தோடு - யானை கெஞ்சட்டும் எனக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொள்ளும் மற்றொரு அன்னமுமென  - இந்தக்  காட்சி - இறைவனின் படைப்பில் - விந்தையும் விசித்ரமும் ஒன்றா இரண்டா என  நம்மை மீண்டும் சிந்திக்க வைக்கின்றது!!

இத்தருணத்தில், ஒரு பிரபலமான குழந்தைப் பாட்டு நினைவுக்கு வருகிறது!

ஆனை ஆனை

அழகர் ஆனை


அழகரும் சொக்கரும்


ஏறும் ஆனை


கட்டுக்கரும்பை


முறிக்கும் ஆனை


காவேரித் தண்ணியைக்


கலக்கும் ஆனை

கட்டுக்  கரும்பை

பறிக்கும் ஆனை


தெருவெல்லாம் சுற்றி


ஓடும் ஆனை


குட்டி ஆனைக்குக்


கொம்பு முளைச்சுதாம்


பட்டணமெல்லாம்


பறந்தோடிப் போச்சாம்
---
இப்பாடலின் கற்பனை  வளம் பாராட்டுக்குரியது!!

கனமான யானைக்குட்டிக்கு - பறக்கவேண்டும் என்கிற ஆசை வருகிறது என்றால் - அது சும்மா வந்து விடாது -  வலிய விலங்குகளான யானைகள் - மெல்லினங்களான புள்ளினங்களோடு நட்பு கொண்டு - சேர்ந்து விளையாடிக் கூடி வாழும் சமூக உறவுகளால் மட்டுமே சாத்தியமாகும்!!

மனிதர்களிடையே  குடிமை - கூட்டுறவு - சமரசம் ஆகியவை இன்றியமையாதவை -  இவற்றைப் போதிப்பது என்பது கல்வியின் அடிப்படைக் கடப்பாடு!! இப்பண்புகள் - குழந்தைப்பருவத்திலேயே விதைக்கப்படாலன்றி - முழுமையான பயன் தரா!! இவ்வகையில் குழந்தை இலக்கியங்கள் மிகுந்த கவனத்தோடு படைக்கப்படவேண்டும் என்பதை படைப்பாளிகள் எவருமே கருத்தில் கொள்ளவேண்டும். 

சரி - சரியான வகையிலே குழந்தை இலக்கியத்தைப் படித்துவிட்டால் மட்டும் போதுமா? அது குழந்தைகளைச் சென்று  அடைந்துவிடுமா? - என்றால் "இல்லை."  

ஏனெனில்  - குழந்தைகளுக்கும் குழந்தைகள் இலக்கியத்திற்குமிடையே பெற்றோரும் - ஆசிரியர்களும் - ஊடகங்களும் வழிமறித்து நிற்கிறார்கள்!!
இந்த மூவரின் பலம்/பலவீனம் - பொறுப்பு/பொறுப்பிலாப் போக்கு ஆகியவற்றால் மட்டுமே  - குழந்தை இலக்கியத்தின் பயன்பாடு அமையப் பெறுகிறது.

குழந்தை இலக்கியங்கள் மிகச் சரியான வழியிலே குழந்தைகளைச் சென்று சேரவேண்டுமென்றால் -  பெற்றோர்களும் - ஆசிரியர்களும் - கொஞ்சம் கூடுதல் சிரத்தைஎடுத்து - இலக்கியம் கூறும் - கூறவரும் சேதியைச் சிந்தாமல் சிதறாமல் - பொத்தி எடுத்துக் குழந்தைகட்கு வழங்கவேண்டும் என்பது அடிப்படை.     

இந்த போதனா முறையிலே - சிறப்பான வண்ணப்படங்கள் - மிகச்சரியான எடுத்துக் காட்டுக்கள் - தேர்ந்தெடுத்த வாசகங்கள் - போதிப்பவரின் குரல் - தொனி - முகபாவனைகள் - உடல் அசைவுகள் - ஊடகங்களின் வலிமை - சார்பு ஆகியன முக்கியமானவை.     

குழந்தைகள் மனிதகுலத்தின் வித்துக்கள் என்ற அசைக்க முடியா விதியை மனத்திலே பதியவைத்தபடி பெற்றோரும் - ஆசிரியர்களும் - ஊடகங்களும் செயல்படுவரேயானால் -  நம் நாடு என்னும்  தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகளாக  நம் குழந்தைகள் - நல்ல குழந்தைகளாக  - வல்லக் குழந்தைகளாக உருவெடுப்பது நிச்சயம்!!   

0 comments:

Post a Comment