Subscribe:

Pages

Saturday, November 12, 2011

தமிழ் ஆசானுக்கு வணக்கம்

தமிழ் ஆசானுக்கு வணக்கம் 



தமிழ் எனும் ஊற்றைப்
பருக வைத்த என் தந்தை
தமிழுக்கு வலிமை
உண்டென்ற என் தாய்

வீட்டில் பேசவும் பழகவும்
தமிழ் மட்டுமே  என்ற
விடாப்பிடி முதியோர்
என் முதல்  ஆசான்கள்
இல்லப் பேழையில்!! 


ஊராயிரம் சுற்றி ஓர்
நிலைவந்த வாகில்
எட்டாம் வகுப்பில்
தமிழ் சொன்னனன்  ஆசான்
மாணிக்கவாசன் என்பார்
மணிவாசகன் என்பேன்
செய்யுளை இசைத்தனன்
சொல் வகை பிரித்தனன்
பொருள் நயம்  உரைத்தனன்
என்னை  அறிந்தனன் தமிழ்
அள்ளி வழங்கினன்

உரையா? செய்யுளா?
கதையா? காப்பியமா?
அவன் போதித்த  பாங்கு
இன்னமும் என் குருதியில்
ஆசான் என்றால் இவனன்றோ எனப்
பாசம் விதைத்துப் பாடம்
நடத்தினன்! இலக்கணம்
இயம்பினன் - இலக்கியம்
காட்டினன் - வேளாளர்
குலத்திடைத் தோன்றிய
மாமணி - அவன் எளிமையில்
கிறங்கி நான் நெஞ்சகம்
நைந்தேன்! என் துஞ்சலும்  
துள்ளலும் தமிழே ஆனது

பேச்சுப் போட்டியா!
கட்டுரைப் போட்டியா?
பட்டிமண்டபமா?
வரவேற்புரையா?
தமிழ்  மன்றக் கூட்டமா?
நான் இல்லாமல்
எதுவும் இல்லையெனும்
படியே எனை உருவாக்கினன்!!

கல்லூரித் தமிழில்
மணிவாசகிகள் - வேதா,
அவாந்திகா  என - முதல்வி
ராஜம் கிருஷ்ணன்  முன்னிலை
வந்தேன்! தமிழ்மன்றச் செயலராய்
என்னை வார்ப்படம் செய்து
பம்பரம் போல் சுழற்றித் தூக்கிய
வித்தக வேங்கை! ராஜம்
தமிழ் மட்டுமா ஊட்டினாள்?
கடும் உழைப்பில் நான்
திண்மை குன்றா வண்ணம்
சோறும் கறியும்
பரிந்து ஊட்டினாள்!!  


நானும் வளர்ந்தேன்!
என் தமிழ் ஆர்வமும் வளர்ந்தது!
தொடர்ந்தேன்  மேற்கல்வி
சென்னைப் பல்கலைக் கழகத்தில்
ஆங்கே கண்டேன்  ஒரு தமிழ்ப்ப் புலி
ஈ ஆர் பி சண்முக சுந்தரம்!
அறிவியல் ஆய்விலும்
தமிழ்ப் பயிர் வளர்த்தனன்!!
அவனது  கண்களில்
பொங்கிய தமிழ்த்
தீயில் நான் மெருகேறினேன் !!

கடல் கடந்தேன்! பன் மொழித்
தேசங்களில் வலம் வந்தேன்  
கற்றேன் பிற மொழிகள்
பெற்றேன் பல திறமை!!
ஆயினும்
என்னுள் ஊற்றாய்
தமிழ்! என் தங்கத் தமிழ்!!


என்னை நன்றாய் ஆசான் செய்தனர்
மன்பதை மகிழத் தமிழ் செய்யுமாறு
ஆசான் இல்லா வித்தை இல்லையே!
விவேகமும் பொறுப்பும்
என்னுள் ஒருங்கே விளைத்த
என் ஆசான் அனைவர்க்கும்
வணக்கம்! வணக்கம்! வணக்கம்!!  

சொல்லால் நன்றி
போதாதென்பதால்
தமிழ்ப் பணியால்
அவர் உளம் மகிழச் செய்குவேன்!! 
என்னுயிர்ப் பயணம்
தமிழே ஆகுக!!
என் இறுதிச் சொல்லும்
தமிழே ஆகுக!!

அவ்வைமகள்  
 
நன்றி )படம்) plrinternetmarketing.com

0 comments:

Post a Comment