Subscribe:

Pages

Friday, November 11, 2011

அவ்வை ஷண்முகிகள்: வேதிகம் தெரிந்த வேதக் கிளிகள்

அவ்வை ஷண்முகிகள்:வேதிகம் தெரிந்த வேதக் கிளிகள்
படத்திற்கு நன்றி https://encrypted-tbn2.google.com/images
மோனம் என்பது ஞான வரம்பு!!- சொல்லாமல் சொல்லும் கிளிகள்!!

வாயை  இருக்க மூடிக்கொண்டு ஒருவித விவேகக் கர்வத்தோடு அமர்ந்திருக்கும் இந்தக் கிளிகள் வெறும் கவர்ச்சிக் கிளிகள் அன்று - இவை ஞானக் கருவூலங்கள். இவற்றை வேதிகம் தெரிந்த வேதிக்கிளிகள் என்றழைக்கலாம்!! 

இவ்வாறு  நான் சொல்வதற்குக் காரணம்?

பலவர்ணக் கிளிகள் அல்லது மாகாக்கள் (macaw) என்று அழைக்கப்படும் இக்கிளிகள் தமது உடல் வண்ணத்திற்கு மட்டும் பெயர் போனவை அல்ல.  இவை உண்ணும உணவாலும் பெயர் போனவை. நச்சு  மரங்களின் , மலர், பழம் மற்றும் கொட்டைகளை இவை சக்கை போடு போடுகின்றன. அதுமட்டுமல்ல - நச்சுப் பலகாரம் முடிந்த பின்னர் - களிமண் கட்டிகளையும் தேடிப்போய் உண்ணுகின்றன. இச்செயலை "Clay Lick" என்கிறார்கள்.
களிமண்  விருந்து
படத்திற்கு நன்றி http://en.wikipedia.org/wiki/Macaw

உணவின்  நஞ்சை முறிக்கவே  இக்கிளிகள் களிமண்ணை உண்ணுகின்றன எனவே வெகுகாலம்  நம்பப்பட்டு  வந்தது. ஆனால் சில பிரதேசங்களில் வாழும்  மாக்காக்கள்  நச்சுக்  கொட்டைகளை உண்டபோதும்  களிமண்ணை  உண்ணுவதில்லை! இதிலிருந்து,  நச்சை முறிக்க இவைகளுக்கு களிமண் தேவையில்லை என்பது தெரியவந்தது.

களிமண்  உண்ணும் மாக்காக்கள், கலவிசெய்த்து முட்டையிடும் முன்னரே அதிகமான அளவு களிமண் கட்டிகளை உண்ணுகின்றன என்பது அடுத்துத் தெரிய வந்திருப்பதால், மாக்காக்கள், முட்டை வலுவாயிருக்கத் தேவையான சோடியம் மற்றும் கால்சியம் அயனிகளைக் களிமண்ணிலிருந்து பெறுகின்றன என்ற வாதமும் எழுந்துள்ளது. 

ஆக, மாக்காக்கள் பற்றிய ஆய்வு இன்னமும் தொடர்ந்த படியே!!

இதில் எனக்குத்தோன்றுவது என்னவென்றால்-

உடல் வண்ணத்தை வைத்துப் பார்த்தால், இவற்றின் உடல் வண்ணத்திற்கு, இக்கிளிகள்  உண்ணும்  நச்சுக் கொட்டைகளே காரணமாக  இருக்கவேண்டும்!!

ஏனெனில் விஷமுள்ள ஜந்துக்கள் கவர்ச்சியான வண்ண நிறத்துடன் இயற்கையாகவே அமைத்திருப்பதை  நாம் பார்க்கிறோம்.எடுத்துக் காட்டாக விஷப் பாம்புகள் - விஷத் தவளைகள் ஆகியனவற்றைச் சொல்லலாம்.   




படங்களுக்கு நனறிwww.google.com

ஆயினும் பிற விஷ ஜந்துக்களிளிருந்து மாக்காக்கள் வித்தியாசப் படுவது என்னவென்றால் இவை பறவைகள்! மேலும் இவை விஷ ஜந்துக்களின் வகையில் சேர்க்கப்ப் படாதவை!!

விஷஜந்துக்கள்  நஞ்சை உடலில் சுரப்பதால் உடல்வண்ணம் அடைவதைப்  போல, மாக்காக்கள்  நஞ்சை உண்டு தம் உடலில் சேர்த்துக் கொள்ளுவதால் வண்ணம் பெறுகின்றன என சிந்திக்கத்  தோன்றுகிறது. 
   
எனவே மாக்காக்கள்,தாம் உண்ணும் உணவின் நஞ்சை உடலின் வண்ணமாகப் பரிமாற்றம் செய்து கொள்ளுகின்றன என்கிற சித்தாந்தத்தை முன்வைக்கலாம் எனப் படுகிறது!!

மாக்காக்கள் பற்றிய ஆய்வில் இன்னமும் விடை  பெறவேண்டிய  கேள்விகள்  உள்ளன -

(1) இவை நச்சிலாக் கனிகளைக் கொத்த நேரிட்டால் - கொத்தப் பட்ட கனிகள்  நஞ்சாகுமோ? (கிளி கொத்திய பழங்கள் மிக ருசியாக இருக்குமென்று நம்மில் பலபேர் கிளிகொத்தியப் பழங்களுக்காய்  ஆலாய்ப் பறப்பதுண்டு!!)


(2) இக்கிளிகளின் எச்சில், சிறுநீர், மலம்  போன்ற எச்சங்களில்  ஒரு வீரியம் நிறைந்த வேதிப் பொருள் அமையப் பெற்றிருக்குமோ?

(3) அந்த வேதிப் பொருள் விஷமுறிவுத்தன்மை  உடைய - மருந்துப் பொருளாகப் பயன்படுமோ?

---
இவ்வினாக்களுக்கான விடைகளுக்காக நாம் கொஞ்சம் காத்திருப்போமாக!

ஆனால் ஒன்று மட்டும் உறுதி -
இக்கிளிகளுக்கு நிறைய விவேகம் உண்டு - மனிதர்களோடு  இயைந்து இயங்க வல்ல தன்மை உண்டு என்பது  இங்கு நான் இணைத்திருக்கின்ற  தொடர்பில் காணப்படும் வீடியோவிலிருந்து  புரியும்.

http://www.youtube.com/watch?v=Rb2OaubK9KY&feature=player_embedded 


இத்தருணத்தில், இங்கு   தமிழ் மரபில் கிளி காட்டும் சிந்தனையைக் கொஞ்சம் பார்ப்போமா?

பஞ்ச பூதங்களின் வல்லமையைக் குறிக்குமாறு அமையப்பெற்ற மெய்வண்ணத்தோடு விளங்கும் பஞ்சவர்ணக்கிளிகள்  பரமேசனின் தேவியான பார்வதியின் அம்சமாம்!!     - இதோ பாருங்கள்!!

எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை
                         ஆயினும்உன்
ஐவண்ணத் துள்ளே அடங்குமே - மெய்வண்ணம்

பார்க்கும் பொழுதில்உனைப் பார்ப்பதிஎன்பார்
                             என்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்
(கண்ணிகள் : 7-8)

மன்மதனுக்கு வாகனம் கிளியாம் - இதோ சான்று  --

மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல்
செலுத்திய கால் தேரை முழுத் தேராய் - பெலத்து இழுத்துக்
கொண்டு திரி பச்சைக் குதிராய்.....
(கண்ணிகள் : 4-5)



இதுமட்டுமா? நாரைவிடு தூது போல - கிளிவிடு தூது எனும் மரபு அன்றைய நாளிலே இருந்தது என்பதை நம் பைந்தமிழ் இலக்கிய ஏடுகள் எடுத்து இயம்பு கின்றன.

மேலும் உருவில் சிறியதாய் இருப்பினும் கிளியானது, திருமாலின் வாகனமான்  கருடனை ஒத்தப் பெருமையும், செல்வாக்கும் கொண்டது எனவும் இலக்கியம் கூறுகின்றது.:

தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோர் யார்-உள்உணர்ந்த

மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டம்அறப்
பாலனத்தாலே பசி தீர்ப்பாய்-மேல் இனத்தோர்

நட்டார் எனினும் நடந்துவரும் பூசைதனை
விட்டார் முகத்தில் விழித்திடாய்-வெட்டும் இரு

வாள் அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய் உறவில்
லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய்-கேளாய்

இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய
திருவடிகள் வீறுஎல்லாம் சேர்வாய்
                                                                                                              (கண்ணிகள் : 18)


மீனாட்சியின் தோளில் அமர்ந்திருக்கும் கிளி - தனக்கிருக்கும் செல்வாக்கைக் காட்டவில்லையா? 

 (இங்கு எடுத்துக்காட்டாக வழங்கப்பட்டுள்ள பாடல்களின் மூலம்  அழகரின் கிள்ளைவிடு தூது.)
மலைவாழ் மகளிர் தினைப் புனங்களில் கிளியோட்டி தினைப் புனத்தினில் விளைந்த முற்றிய தினைக் கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.

“களைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்புனக்கிளி படியும் பூங்கட் பேதை” (குறுந். 141 1-2)
 
களைப்பூவினைப் பறித்து மாலைதொடுத்தாலும், தினைப் புனத்தில் கிளி ஓட்டுதலும் மலைவாணர் மகளிரின் விளையாட்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

கிளிகளுக்கு  நல்ல மதியூகமும்வருவதி முன்னுரைக்கும் வல்லமையும் உண்டு என நம் முன்னோர் நம்பிவந்திருக்கின்றனர் என்பது  கிளிஜோசிய முறையிலிருந்து உணர்கிறோம்!!


ஆதிகாலம் தொடங்கி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்திவந்திருக்கிற கிளிகள் பார்க்கவும் - ரசிக்கவும் - பழகவும் - பேசி - மகிழவும் மட்டுமல்லாது  விஞ்ஞானிகளாக - மெய்ஞானிகளாக நம்மை  புதிய சிந்தனைகளில்  வழிநடாத்திச்செல்ல  ஆசான்களாகவும் விளங்குகின்றன  என்பது வெளிப்படை.
 
தேடிப் பார்த்தால் கிளிகள் பற்றிய செம்மார்ந்த சேதிகள் நிறையவே இருக்கும் போல் தோன்றுகிறது!! மேலும் பல சிந்தனைகளுடன்  மீண்டும் நாம் சந்திப்போம்!!   

உங்களிடமிருந்து விடை பெறுமுன்  --
தமிழ் இணையதளப் பல்கலைக் கழகம்வெளியிட்டுள்ள  கிளி பற்றியதொரு வினாவும் அதற்கான் விடையும் என்னைக் கவர்ந்தன. நீங்களும் பயனடையலாமே!

வினா: கிளியின் வேறு பெயர்கள் இரண்டைக் குறிப்பிடுக
.விடை: தத்தை, வன்னி ஆகிய இரண்டும் கிளியைக் குறிக்கும் வேறு   
பெயர்களாகும். (http://www.tamilvu.org/courses/degree)
 

0 comments:

Post a Comment