Subscribe:

Pages

Friday, November 11, 2011

உன் நினைவே என் மூச்சு!!

உன் நினைவே என் மூச்சு!!

பார்த்தது -படர்ந்த்தது
தொட்டது - தொடர்ந்தது
நடந்தன யாவும் இன்னமும் சத்யம்!
நாம் பேசிய முதல் நாளே சொன்னேன்
"உன் நினைவே என் மூச்சு" என்று
அன்று சொன்னது சொன்னது தான்
அது இன்னமும் சத்யம்!!

கூடித் திரிந்த அந்தப்
பசுமை நினைவுகள்
ஒன்றா இரண்டா?
அவற்றைச் சேர்த்துச்
சாறு பிழிந்து
அந்தத் தைலத்தால்
என் உள்ளத்து ரணங்களை
ஓயாமல் ழுவிக்கொண்டிருக்கிறேன்
புற்றாய் மாறாமலிருக்க!

விரும்புகிறேன் என்று சொன்னபோது
ஏற்றுக்கொண்ட நான்
விலகுகிறேன் என்றபோதும்
ஏற்றுக் கொண்டேன்!!
அது தான் காதலின் தர்மம்!!

அழுதாய் உண்மையோ பொய்யோ!!
உன்னால் முடிந்தது - நான்?
அழவில்லை - அழுது
காதலை அமங்கலமாக்க
விரும்பவில்லை


அழுது அரற்றிவிட்டு
ஒரு நொடியில் அனைத்தையும்
உதறவும் மறக்கவும்
உன்னால் முடிந்ததே!!
காதல் பறிபோனதைவிட
காதலை, கால்தூசிபோல் உதறிய
உன் ராட்சசம் தான்
அதிக நடுக்கம் தந்தது!!


அன்பு காட்டி
ஆக்கிரமிப்பு செய்து
ஆட்டிப் படைத்துவிட்டு
அம்சமாய்க் கழன்றுகொள்ள
இது என்ன வேடிக்கை விளையாட்டா?


உன் காதல் பயிற்சிக்கு
நானா கிடைத்தேன்?
காதல் பீடத்தில்
நான் பலிக்கிடாவானேனோ?

நம்மைப் பிரிப்பார் எவரும் இல்லை
என இறுமாப்புடன் இருந்தேன்!!
பிரிவினை நீயன்றி வேறெவர் செய்தார்?
நீ முடிந்த பின்னல் வலை
நீ வெளியே நான் உள்ளே!!

நீ செய்த சாகசங்களும்
சாமர்த்தியங்களும்
அப்பப்பா!! விடுவித்துக் கொள்ள
இத்தனைத் தயாரிப்பா?
எங்கு கற்றாய் இந்த வித்தையை?

உன்னால் முடிந்ததைச் செய்ய
என்னால் முடியவில்லை நம்
காதல் சத்யம் எனும்
வேதம் மட்டுமே என்னுள்!

"புழுவாய்த் துடித்தேன்"
என உன்போல்
பொய் சொல்ல மாட்டேன்
ஆயிரம் சிலுவைகளின் வேதனையை
என் ஒற்றை இதயத்தில்
தாங்கினேன்!!
நம் காதல் சத்யம்!!


காலம் உடுத்திய காதல் மூப்பு! நெஞ்சக்
கலத்துள் மூண்ட அணையா நெருப்பு
வயதும் ஆண்டும் ஆற்றாத் துயரம்
"பார்க்குமிடமெல்லாம்
நீக்கமற நிறையும்"
மறையா நினைவுகள்
நான் இன்னமும் உயிரியாய்
உனக்காய் உண்மையாய்!!
காரணம் -உன் நினைவே என் மூச்சு!!


















அவ்வைமகள்

0 comments:

Post a Comment