Subscribe:

Pages

Wednesday, June 22, 2011

கதை போச்சு! கவிதை வந்தது!!

கதை போச்சு! கவிதை வந்தது!! 



வசந்த மலரில் வெளிவந்த கதை அதைப் படித்த மாத்திரம் என்னுள் கிளம்பிய கவிதை  
 கதை 

காலையில், வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட சிறு மனஸ்தாபம்  வேலைக்குச்  சென்ற  கணவனை பாதித்த விதம்

சிறு சண்டை, சிற்றுண்டியின் போது...
அதற்குப்பின் அவள் பேசவில்லை..!

வழக்கமான செயல்கள் செய்தாள்..!
வாஞ்சை இல்லாதவள் போல் வழியனுப்பினாள்..!

அவள் எதிரெ கடுகடுவென்றே இருந்தேன்! ஆனால்
போகும் வழியெலாம் நினைந்து புன்னகைத்து ஊர்ந்தேன்..!

வழக்கத்திற்கு மாறாய் சீக்கிரம் வீடு வந்தேன்..!
உணவுப்பெட்டியை "டங்கென" வைத்தேன்

வாங்கிய மல்லிகையைக் கோபத்தோடு கொடுத்தேன்..!
கோபம் குறையாதவளாய் வாங்கிக் கொண்டாள்..!

"கிளம்பு..! கோயிலுக்கு போகலாம்..!" என்றேன்..!
 ஆச்சரியக்குழப்பம்! கேள்விப் பார்வை..!

"காலையின் நீதானே.." என்பதாய் நானொரு பார்வை..!
ஏதோ சொல்ல அவள் உதடுகள் முயன்றன-- ஏனோ

என் கண்கள் பார்த்துத் தானே நிறுத்தினாள்..! அவள்
கண்ணில் - உள்ளூரப் புன்னகை உதித்தலின் அறிகுறி..!

புரிதலை அதற்கு மேல் மறைக்க முடியாமல்
பொய்க்கோபம் தோற்றது..!

எனக்குப் புன்னகை தானே வந்தது! வெடுக்கென விரைந்தாள்
கலாச்சாரக் கட்டுகளுக்கள் உடைத்துக் கட்டியணைத்தாள்!!

"இது நாள் உன்னோடு இருந்ததின் பொருளென்ன?" என்பதாய்...
கவித்துவமாய்த் திரும்பி என் தோளில் புரண்டாள்..!

எஞ்சியவை இரவுக்கென்றதாய் அவள் கண்கள் கிறங்கின!
என் கண்களும் அதனை ஆமோதித்தன!!


-----
கவிதை


கணவன் வேலைக்குச் சென்ற நிலையில் அப்பெண்ணின் மன ஓட்டம்

  



நீயென் உயிரடி! என்று ஓயாமல் சொன்ன குரல்
எங்கிருந்து வந்தாயென வாய்க்குவாய் கேட்ட மொழி
சிறையெடுத்துத் தேரேற்றி இல்லத்திலே பொருத்திவைத்து
குறியது தப்பாமல் அரங்கேற்றம் நிகழ்த்திவிட்டு
ஊனுயிர் அத்தனையும் மொத்தமாய் வாங்கிவிட்டு 
வேறெங்கும் நான்செல்லா நிலைப்பாடாய்க் குடியேற்றி
இறையோன் முன்னிலையில் மாங்கல்யம் அணிவித்து 
ஒருவட்டில், ஒருபோர்வை, ஒரு நோக்கம், ஒரு சிந்தை
ஒருகணமும் பிரியாமல் உடலுயிரில் கிளைத்தநிலை
பகலிரவு தெரியாமல் பொழுதெல்லாம் கிடந்த வகை
வெளியுலகம் காணாமல் நாள்கணக்காய் பிணைந்த கலை
உயிரிலும் கருவிலும் பயிர்-கதிர் வளர்த்த கதை
நீயெனக்கு நானுனக்கு என்பதொன்றே நிலைப்பாடாய்
கண்ணுக்குள் மணியதனாய் ஒளிவார்த்துக் காத்த படி
போன இடமெல்லாம் ஒன்றாய் வளையவந்து
ஒளிவுமறைவின்றி உணர்வுகளைப் பரிமாறி- நீ
வைதாலும், வைத்தாலும், நீயேயென் யாவுமென
உனக்காய் மட்டுமே நான் உண்மையில் வாழ்வதனைப்
புரிந்தும், தெரிந்தும், துன்புறுத்தல் செய்வது ஏன்? 
உமது சொல்லும் செயலுமே உமக்கு  முதலுரிமை - அதற்காய்
என்னை "படக் படக்" என ஏசுவதேன்?
இன்று காலை  நான் செய்த தவறென்ன?
எனக்கு எத்தனை வலி என்று உனக்குப் புரியும் போய் வா!

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)










0 comments:

Post a Comment