Subscribe:

Pages

Monday, January 10, 2011

ஆலயத்தில் பிறந்த அறிவியல் புரட்சி!

ஆலயத்தில் பிறந்த அறிவியல் புரட்சி!

ஒரு கருத்தின் மீது வாதம் என்று வந்துவிட்டால், அதனது அறிவியல் பக்கத்தை ஒருவரும், அதன்  ஆன்மீகப் பக்கத்தை இன்னொருவருமாக அலசுவது வழக்கம். வகுப்பில் மாணாக்கர்களாகட்டும், வீட்டில் பிள்ளைகளாகட்டும், பெரியவர்கள் எதையாவது சொன்னால், "சயண்டிஃபிக்கா ப்ரூஃப் பண்ணு" என்றே சவால் விடுவார்க்ள்!

விஞ்ஞானம் எங்கு நின்றுவிடுகிறதோ அங்கிருந்து தொடர்வது மெய்ஞானம் என்றே பாமரர்களின் கவியான கண்ணதாசனும் சொன்னார்.

ஆக, அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரணியில் செயல்படுவதான நிலைமையே நிலவி வந்ததானதொரு காலக் கட்டத்தில்,  அறிவியல் பலம் தந்து ஆன்மீகத்தையும்,  ஆன்மீக உரமிட்டு அறிவியலையும் ஒருசேர வளர்த்து, மாபெரும் புரட்சியை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் நிகழ்த்திப் போந்தவர் குன்றக்குடி அடிகளார்.

இவர் செய்து காட்டியிருக்கிற புரட்சி இன்று குன்றக்குடி எனும் கிராமத்தை, இந்திய தேசிய வரைபடத்திலே, முக்கியப் புள்ளியாகக் காட்ட வைத்திருக்கிறது. அரசியல் ஜாம்பவான்களாகட்டும், அறிவியல் ஜாம்பவான்களாகட்டும், குன்றக்குடிக்கு வந்துபோவதைப் பெருமையாகவும், கடமையாகவும் கருதினர் என்றால் அவர்கள், அடிகளாரால் - அவரது சீரிய பணியால் எத்தனைக் கவரப்பட்டிருப்பார்கள் என்பது விளங்கும்.

சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல் என்கிற நான்கு நிலைகளிலும், அவர் குறைகாண முடியாத, முற்போக்குத் தீவிரவாதியாக இருந்தார். எளிமை - தூய்மை - கடமையுணர்வு -  நம்பகத்தலைமை ஆகிய நான்கு குணங்களிலும் குன்றம் போல உயர்ந்து நின்றார்!

1984ல், தேசிய அளவிலான, அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களின் மாநாடு   காரைக்குடியிலே கூடப்படுகிறது; மாநாட்டு மேடையிலே புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானிகள், நாட்டின் நிதியமைச்சர், தமிழக அமைச்சர்கள், அரசாங்கப் பெரும்புள்ளிகள் வீற்றிருக்கிறார்கள், இவர்களுக்கு  நடுவிலே கம்பீரமாகக் காவியுடையில் அடிகளார்! அவரது முறை வந்தபோது, அவர் ஆற்றிய ஆங்கில உரை, நாமொழி வித்தகர் என்று பட்டம் பெற்றவரான நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பேச்சை ஒன்றுமில்லையென்றாக்கி விட்டது. அறிவியலும், ஆன்மீகமும் எவ்வாறு ஒன்றை ஒன்று இட்டு நிரப்புவனவாக இருக்கின்றன - நாணயத்தின் - இரு பக்கங்கள் போல - ஒரு வித்தின் இரு வித்திலைகள் போல - முகத்தின் இரு கண்கள் போல என எடுத்துக்காட்டுக்களுடன் அவர் விளக்கிய பாங்கை, இருக்கையின் நுனிக்கு வந்து - உள்வாங்கிகொண்டனர் மாணாக்கர்கள்; தேசக்கட்டமைப்பிலே ஆன்மீகத்திற்கும், அறிவியலுக்கும் இருக்கின்ற தனித்தனிப் பணிகளையும், கூட்டுப் பணிகளையும், அவர் கூறுபோட்டு விளக்கியபோது, அமைச்சர், எழுந்து நின்று கைதட்டத் துவங்க, மேடையிலிருந்த அனைத்துப் பிரமுகர்களும் எழ, கீழே அரங்கத்தில் வீற்றிருந்த மாணாக்கர்களும், இன்னபிறரும், எழுந்து நிற்க, அந்த அரங்கத்தில், பாரதமே எழுந்து நின்று புதியதொரு பயணத்தைத் தொடங்கப் புறப்பட்டது புரிந்தது.

தேசத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்திருந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு அன்று ஏற்பட்ட  உணர்வு நிலையை மாணவியாக அம்மாநாட்டிற்குச் சென்றிருந்த நானறிவேன்! அன்றொரு நாள், காந்தியைக் கண்டு எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்களாம் உலகத் தலைவர்கள். அந்தக் காட்சி என் மனத்திரையில் ஓடியது.

சுதேசி என்கிற காந்தியக் கொள்கையை, குன்றக்குடி திட்டத்தில் இணைத்த நவீன காந்தியாகவே அடிகளார் விளங்கினார். சுதேசி அறிவியல் இயக்கம் என்கிற எளிமையான சித்தாந்தம் கொண்ட வலிமையானதொரு இயக்கத்தை நிறுவியவர் அடிகளார். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது - தேசத்தை கிராமங்களிலே  வலுப்படுத்தவேண்டும் என்கிற காந்தியத் தீவிரம் அடிகளாரது அசைவுகள் ஒவ்வொன்றிலும் வெளிப்பட்டது!

முதல் நாள் மாநாட்டின் போது, பிற்பகல் குன்றக்குடியைச் சுற்றிப்பார்ப்பது, அங்கு நடக்கும் அறிவியல் பணிகள், தொழிற்கூடங்கள் பற்றி அறிந்து கொள்வது - இரவு குன்றக்குடி மடத்தில், அடிகளாரைச் சந்திப்பது, அனைவருக்கும் மடத்தில் உணவு என்று ஏற்படாகியிருந்தது. மற்ற சாமியார்களைப் போல அடிகளார் ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டிருப்பார், ஒவ்வொருவராகச் சென்று வீழ்ந்து வணங்க அடிகளார் ஆசி வழங்குவார் என்றே பல மாணாக்கர்களும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இதிலே, கிறித்துவ, முகமதிய மாணாக்கர்கள், மடத்திற்குள் நுழையமாட்டோம் என முடிவு செய்து, வெளியே நிற்கலாயினர்.

உள்ளே மாணாக்கர்கள், தரையின் மீது அமர்ந்திருக்கிறார்கள்; அடிகளார், தன் கையில் இருந்த மாணாக்கர்களின் பட்டியலிலிருந்து, முகமதிய, கிறித்துவ மாணாக்கர்களின் பெயரை வாசித்து அவர்களைத் தன்னிடம் வருமாறு கூப்பிடுகிறார் - "அவர்கள் உள்ளே இல்லை - வெளியே" என்று பதில் வருகிறது. 

"மதம் அல்லவா வெளியே நிற்கவேண்டும்! மாணாக்கர்கள் அல்லவே!" என அடிகளார் தனக்கே உரித்தான அழுத்தத்தில் கூற, கைத்தட்டல் குன்றத்தின் பாறைகளில் எதிரொலித்து விண்ணைப் பிளந்தது.

"வெளியே நிற்கும் மாணவர்களுக்கு உள்ளே வரும் உரிமையுண்டு; அந்த உரிமையை நீங்கள் மறுக்கிறீர்களா?" என அடிகளார் கேட்கிறார் - "இல்லையே" என உள்ளிருக்கும் அனைவரும் ஒட்டுமொத்தமாய்க் குரல் கொடுக்கிறார்கள்."

வெளியே நின்றவர்கள் உள்ளிருப்பவர்களொடு ஒன்றாய் இணைகிறார்கள். காந்தியடிகளின் மதபோதனை சித்தாந்தத்தைப் பிசகின்றி நடத்திக்காட்டிய ஒரு மாவீரனை அன்று மடாதிபதியின் உருவத்திலே காணமுடிந்தது. கத்தியின்றி - இரத்தமின்றி சத்தியப்போர் வென்ற அஹிம்சாவாதியைக் கண்டு தமிழ்த் தெய்வமாம் குன்றக்குடிக் குமரனும் குளிர்ந்திருப்பான்  என்பதில் ஐயமில்லை!

ஆணோ பெண்ணோ எந்த ஒரு மனிதருக்கும், மூன்று விஷயங்கள் அடிப்படையாகும்: மொழி பக்தி; தேசபக்தி, தெய்வ பக்தி. இவை மூன்றையும், தனது வாழ்வில் குன்றாதுக் கடைபிடித்து,  ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து போயிருப்பவர் அடிகளார். இதிலே முன்னுதாரணம் என்பது என்னவென்றால் - மிகையினும் குறையினும் தீங்கு செய்யும் மருந்தைப்போன்றது மதம் என்கிறதான உறுதியான விழிப்புணர்வுடன், அவர் இயங்கிய - பிறரை அவர் இயக்கிய - பாங்கு  சரித்திரம் முன்னெப்போதும் கண்டிராத ஒன்று.

அன்று - மடத்தில் அடிகளார் - தனது பேச்சுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை; குன்றக்குடி திட்டம் மற்றும் சுதேசி அறிவியல் இயக்கம் ஆகியனபற்றி சுருக்கமாகப் பேசிவிட்டு, மாணாக்கர்களுக்கு ஒரு போட்டி அறிவித்தார். "அறிவியலும் ஆன்மீகமும் என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில பேசவேண்டும்; பேச்சுக்கான கால அளவு ஐந்து நிமிடம்."

பேச்சுப் போட்டிக்குப் பெயர் கொடுத்தவர்கள் மூவர் மட்டுமே; இவர்கள் தமது பேச்சுகாகத் தம்மைத் தயார் செய்து கொள்ளும்போது மற்ற மாணாக்கர்களைக்  குழுக்களாகப் பிரித்து, குன்றக்குடி திட்டத்தில், வேறு என்னென்ன செய்யலாம் - சுதேசி அறிவியல் இயக்கத்தை, தேசம் முழுதும் பரப்ப என்ன செய்யவேண்டும் என்று கருத்துக்கள் திரட்டவைத்தார்.

அவர் அன்று மாணாக்கர்களை ஊக்குவித்த விதம், குழுக்களுக்கு இடையே சென்று அவர்கள் செயலாற்றும் விதத்தைப் பார்வையிட்டு, நெறிப்படுத்தியவிதம், ஆகியன போதனா முறைகளில் தேர்ச்சிபெற்ற, ஒரு சிறந்த ஆசிரியராக அவர் விளங்குவதைக் காட்டியது.

பேச்சுப் போட்டிக்குப் பெயர் தந்திருந்த மூவரில் நானும் ஒருவர். குலுக்கல் முறையில் முதலில் பேச அழைக்கப்பட்டதும் நான் தான். தமிழக மாணவி நான்; வேறு இருவரும் வடமாநிலைங்களைச் சேர்ந்தவர்கள்; ஒவ்வொருவர் பேசுவதையும் உன்னிப்பாகக் கவனித்து, குறிப்பெடுத்துக் கொண்டு, இறுதியாக அவர் தொகுப்புரை வழங்கினார். மூன்று மாணாக்கர்களும் தெரிவித்த முத்தாய்ப்பான கருத்துக்களை தாராளமாகப் பாராட்டி, முரண்பாடான கருத்துக்களுக்கு அதிக அழுத்தம் காட்டாமல் விட்டுச்சென்றது, அவருக்கிருந்த உளவியல்  தெளிவையும், நிர்வாகச் சூட்சமத்தையும் காட்டியது.

என்னைப் பற்றிப் பேசும்போது வானொலிப் பெண் எனக் குறிப்பிட்டு, சென்னையில் நல்ல தமிழ் பேசும் அறிவியல் மாணவி என்றார். நான் வியந்துபோனேன்! ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு, சிவனே என்று மடத்துடன் ஐக்கியம் ஆகிவிடாமல், நாட்டு நடப்பை ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து கவனிக்கும் அவரது  அடிப்படை தர்மம் கண்டு நெகிழ்ந்தேன்; காலை நிகழ்ச்சியாக, வானொலியில், நான் அறிவியல் சபை நடத்திவந்ததை, அவர் குறிப்பிடுவது புரிந்தது;  அது மட்டுமல்லாது அகில இந்திய வானொலியின் ஒலிப்பதிவு அரங்கிலே அவரை ஒருமுறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றியும் சொன்னார்; என்னைப்பற்றி அவர் அறிந்து வைத்திருந்த நல்ல சேதிகளையும் அவர் நினைவு கூர்ந்தார் - நான் எஸ்ஐஇடி கல்லூரியில் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியது - நிறைய போட்டிகளில் - படிப்பில் பரிசுகள் வாங்கிக் குவித்திருப்பது என  அவரது பட்டியலில் பலவற்றை அவர் குறிப்பிட்டார் - அவரது  நினைவாற்றலையும், வயதில் சிறியவர்களையும் குறையாது பாராட்ட வேண்டும் என்கிற அவரது உயர்ந்த சிந்தனையையும் கண்டு வியந்து போனேன்.

சுதேசி அறிவியல் இயக்கத்தின் வெளியீடான அறிக அறிவியலில் என்னையும் ஆசிரியக்குழு உறுப்பினராக்கி - பொறுப்பளித்து, என்னுள் எழுத்துத் திறன் வளர அவர் ஊக்குவித்து வழி நடாத்திச்சென்ற தலைமையை என்னால் மறக்க முடியாது. குறிப்பாக ஒரு நிகழ்ச்சி, அறிக அறிவியலில் என்னை ஆசிரியக்குழு உறுப்பினராக்கிய புதுசு; காரைக்குடி மையமின்வேதியியல் ஆய்வகத்திற்கு அலுவலக அலுவலாகச் சென்றிருக்கிறேன். அடிகளாரை ஒரு வினாடி பார்த்தேன் அதுவும் எப்படி என்றால் அவர் விருந்தினர் இல்லத்திலிருந்து காரில் வெளியேறுகிறார்; நான் அப்போது விருந்தினர் இல்லத்திலிருந்து வெளியே வருகிறேன் நடந்து ஆய்வகம் செல்வதற்காக.

அன்று மதியம் கேண்டீனில் உணவுக்காகச் செல்லுகிறேன்; மையமின்வேதியியல் ஆய்வகத்தின் அறிவியலாளரான சுப்பையா அவர்கள்
என்பெயரிட்ட உறையைத் தருகிறார். முதிர்ச்சியான சிறு எழுத்துக்களில் அடிகளாரின் கையாலேயே என் பெயர் எழுதப்பட்டிருந்தது. அன்றே தனக்கு
சுற்றுச்சூழல் தொடர்பான அறிவியல் கட்டுரை எழுதி ஒப்படைக்கவேண்டும் எனப் பணித்திருந்தார். நானும் மிகுந்த பொறுப்புடனும், கவனத்துடனும், கட்டுரை எழுதி முடித்தேன். விருந்தினர் இல்லத்தில் அடிகளாரின் உதவியாளரிடம் தந்து அடிகளாரிடம் சேர்த்துவிடுமாறு சொல்லிவிட்டு, மையமின்வேதியியல் ஆய்வகத்தின் வெளியரங்கிலே ஏற்பாடாகியிருந்த ஒரு பட்டிமண்டப நிகழ்சிக்குச் சென்று விட்டேன்.  

கட்டுரை சமர்ப்பித்து ஒரு அரைமணி  நேரம் கூட ஆகியிருக்காது - தன்னை வந்து சந்திக்குமாறு, ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார் அடிகளார். விரைந்தேன். எனது கட்டுரையில், இருந்த வடமொழி மற்றும் ஆங்கிலப் பதங்களைக் கோடிட்டுக்காட்டி, அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களால் அவற்றை இடப்பெயர்ச்சி செய்யுமாறு சொன்னார். நான் எடுத்துக் கொள்ளக் கூடியு கால அளவையும் கூறினார். என் மூளையின், மூலை முடுக்குகளில்லாம் சுரீரென இரத்தம் ஓடியது, நரம்புகள் முடுக்கப்பட்டன!

முன்பு தெரியாத தமிழ்ச் சொற்களெல்லாம் கண்ணுக்கு முன்னே சாரியாய் வந்தன. உனக்கு நான் பயன்படட்டுமா? என்று என்னை ஒவ்வொரு சொல்லும் வினாவியது. தமிழ்ச் சொற்களை இட்டதோடு, கட்டுரையின் பொருண்மையையும், தொனியையும் கூட மாற்றினேன்! அடிகளாரிடம் சம்ர்ப்பித்தேன். கட்டுரையைப் படித்துவிட்டு அவர் என்னைப் பார்த்த அந்தப்பெருமிதப் பார்வை, "உன்னால் முடியும் பெண்ணே! பெண்ணே!" என உத்வேகம் தந்தது. அன்று அடிகளார் எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை நான் இறப்பினும் மறவேன்! நெஞ்சகம் நைந்து, நினைவில் நாள்தொறும் இந்நிகழ்ச்சியை நான் மீண்டும் மீண்டும் திரையோட்டிப் பார்க்கிறேன்.

பின்னொரு நாள், அவரைச் சென்னையில் சந்திக்க நேர்ந்தபோது, தமிழகத்தின், தலை நகரான சென்னையிலே சுதேசி அறிவியல் இயக்கத்திற்கு ஒரு அலுவலகம் வேண்டும், தகவல் தொடர்பு, ஊடகத் தொடர்பு, மற்றும் இயக்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு, சென்னை அலுவலகம் ஒரு மையமாகச் செயல்பட முடியும் என்று கூறினேன். அமைதியாகக் கேட்டார். பதிலேதும் சொல்லவில்லை; முகத்தில் ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமும் தெரியவில்லை; அவரைச் சந்திக்கப் பலபேர் காத்துக்கொண்டிருந்தார்கள்; நான் சட்டென விடைபெற்று வெளியே வந்தேன். மனதை ஏதோ நெருடியது- கிராமங்களை வலுப்படுத்த நினப்பவரிடம், நகரத்தின் வசதிகள் பற்றி அதிகப் பிரசிங்கியாகப் பேசிவிட்டேனோ என ஓயாமல் சிந்தித்தேன்.

மூன்றாவது நாள், குன்றக்குடியிலிருந்து, அடிகளாரிடமிருந்து கடிதம் வந்தது. சென்னையில் சுதேசி அறிவியல் இயக்கத்திற்கு ஒரு அலுவலகம் வேண்டும் என்கிற உங்களது கருத்து எமக்கு ஏற்புடையதே! இம்மையம் நிறுவப்பெற்றால், அதன் முழு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று நடத்தி இயக்கத்தை வலுப்படுத்தத் தயாரா? என்று சவாலானதொரு வினா எழுப்பியிருந்தார்!  - ஆட்சிமைத் திறனிலே, ஒரு சந்நியாசிக்கு இத்தனைப் பாண்டித்தியமா எனும்படியாக, அவரது தலைமைப் பண்பும் எழுத்தும் இருந்தன. ஒருவரிடத்திலே மறைந்திருக்கக் கூடிய திறமைகளைச் சற்றும் சேதப்படாமல் வெளிக்கொண்டுவருவதிலே அவருக்கு நிகர் அவரே! இதிலே அவர் வயதையோ ஆணா பெண்ணா என்பதையோ கருத்தில் கொள்ளாத விரிந்த கண்ணோட்டத்துடன் செயலாற்றினார் என்பது நாம் பின்பற்றவேண்டியதொரு கொள்கையாகும்.

இதற்கு இன்னுமொரு சான்று, சைவ சித்தாந்தம் தொடர்பானதொரு மாநாட்டை, அடிகளார் கூட்டியிருந்தார். அந்த மாநாட்டில் நான் ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்ற வேண்டும், என அவரிடமிருந்து கட்டளை வந்தது. மாநாட்டில் பங்கேற்போரின் உரைகள் தொகுக்கப் பட்டு ஒரு நூலாக வெளியிடப்படுவதாகவும் ஏற்பாடு. அன்றைய கால நிலையில், தமிழ் - சமயம் என்கிற இரண்டிலும் ஜாம்பவான்களாகக் கொடிகட்டிப் பறந்தவர்களுக்கு இணையாக, மிகவும் இளைய பெண்ணான என்னையும் மேடையேற்றிப் பேச வைத்து, "அறிவியல் காட்டும் இறையருள்"  என்ற தலைப்பிட்ட எனது கட்டுரையை, நூலில் வெளியிட்டு என்னைப் பெருமைப்படவைத்தது அவர் செய்த மாபெரும் உதவி என்பேன். நீதியரசரான தமிழ்ப் பெரியவர், எம் எம் இஸ்மாயில் அவர்களும், பலகலைக் கழகத் துணைவேந்தர் வசெ குழந்தைசாமி அவர்களும் எனது உரையையும் கட்டுரையையும் மனம் திறந்து பாராட்டினார்கள்! இத்தகையதொரு வாய்ப்பை எனக்கு அளித்தவர் குன்றக்குடி அடிகளார் அவர்களே!

அடிகளாரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொன்று, கடிதத்தை எவ்வாறு முடிப்பதென்பது. "எல்லா நன்மைகளும் சிறக்க இறையருளைச் சிந்திக்கிறேன்" என்பதாக அவரது கடிதங்களை முடிப்பார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது அனுமதியுடன், அதே வாசகத்தை நானும் எனது கடிதங்களில், மின்னஞ்சலில் இன்றளவும் பயன் படுத்திவருகின்றேன்!

அன்று அடிகளார் என்னுள் வளர்த்த தமிழ்த் தீயும், அறிவியல் தீயும் என்னுள் குன்றாமல் கொழுந்துவிட்டுப் பிரகாசிக்கின்றன. அவருக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்துவது எனப் புரியவில்லை.

அமெரிக்காவில் வசித்துவரும் நிலையில், அடிகளாரைப் பற்றிய தரவுகளை இங்குள்ள தமிழ்க்குலக் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லலாம் என நினைத்து, வலைதளத்தில் தேடினால்,  மிகவும் குறைவான அளவே தகவல் கிடைக்கிறது. விக்கிபீடியாவில் அடிகளாரைப்பற்றிய தொகுப்பு இல்லை.
மிக்கேல் நோயல் அடிகளாரைப் பற்றி இரு நூல்கள் எழுதியிருக்கிறார் அவற்றின் மின்புத்தகங்களும் வலைதளத்தில் இல்லை. சென்ற வாரம், குன்றக்குடி மடத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். இந்நிலைமையை இப்போது மடாதிபதியாய் விளங்கும், இளைய அடிகளாரிடம் நேரடியாகத் தொலை பேசி வழியாகப் பேசியிருக்கிறேன்.

மடத்தின், திட்டக்குழு அதிகாரி, வெளியூர் சென்றிருப்பதாகவும், அவர் பணிக்குத் திரும்பியவுடன் இதனைக் கவனிக்குமாறு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இப்பணியில் இணைந்து செயல்பட விருப்பமிருப்பவர்கள் எனக்குத் தெரிவித்தால் கூட்டு முயற்சியாக, அடிகளார் பற்றிய விவரங்கள், உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்லாது , பிறருக்கும் கிடைக்கும்படி செய்யலாம். ஏனெனில், அடிகளாரின் பணிகள் உலகெங்கிலும் உள்ள பல்கலைக் கழகங்களிலே ஆய்வுப் படிப்பிற்குப் பொருத்தமானவை. காந்தி, தெவே போன்ற கல்வியாளர்களோடு பல வகைகளில் ஒப்பீடு செய்யும் வாய்ப்புக்களை அடிகளாரது வரலாறு காட்டுகிறது.

இந்தக் கல்விப் பணியில் உங்களாலான உதவிகளை வேண்டுகிறேன்.

0 comments:

Post a Comment