Subscribe:

Pages

Saturday, January 1, 2011

வள்ளுவரும் அவ்வையும் ஹைக்கூ முன்னோடிகள்! நாமொழிப்பயிற்சியே இவர்களது இலக்கு

துளிப்பாக்கள் அல்லது சுருக்கு இலக்கியம் எனப்படும் ஹைகூ கவிக்கலைக்கு வித்திட்டவர்கள் வள்ளுவரும் அவ்வையுமே!
நாமொழிப்பயிற்சியே இவர்களது இலக்கு!!
அதுவும் அவர்களிருவரும் இக்கலையை, மொழி-பண்பாடு இரண்டையும் கற்பிப்பதற்காகவே உருவாக்கினர் - பயன்படுத்தினர் என்பது வெளிப்படை

தமிழ் என்று சொன்னாலே இனிமை! தமிழ் என்று உச்சரிக்கும் போது, அது கடினமில்லாமல் நாவைத் தடவிக்கொடுத்து வருடிச்செல்லுகிறதே அந்த  மென்மை. அது ஒரு பேறு. ஒரு மொழியின் பெயரில் இத்தனை இன்பம் கிடைக்கமுடியும் என்றால் அந்த சிறப்பு தமிழுக்கு மட்டுமே. சொல்லிப்பாருங்கள்: "தெலுங்கு", "கன்னடம்", "மலையாளம்" "குஜராத்தி" "பஞ்சாபி", "ஒரியா",  "ஜேப்பனீஸ்",  "ஸ்பேனிஷ்"- சொல்லிவிட்டீர்களா? இப்போது "தமிழ்" என்று சொல்லிப்பாருங்கள்.

எத்தனைத் தணிவாக, இதமாக, சுகமாக இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்!

இந்தத் தணிவும், இதமும், சுகமுமும், தமிழுக்கு மட்டுமே சொந்தம்!! தமிழைப்பேசும் நாவுக்கு என்றுமே தளர்வு வாராது. பேசப்பேச இன்னமும் பேசிக்கொண்டேயிருக்கலாம் என்ற ஆசை மட்டுமே எழும். தமிழ் மொழியின் ஒலிக்கு இருக்கின்ற இந்த இதத்தையும் பதத்தையும், பண்டைய எழுத்தாளர்கள், ஒரு முதலீடாகவே கருதினார்கள்!  தமிழைப் படிக்கும் வாக்கில், தமிழைப் பேசும் வாக்கில் - படிக்கின்ற, பேசுகின்ற - நாவைச் சொடுக்கெடுத்து, நாப்பயிற்சி தருவதிலே அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள். அந்நாளைய இலக்கியம் யாவிலும் மொழிச்செறிவு மட்டுமின்றி, ஒலிநயம் நிறைந்ததான சீரானதொரு மரபு அமைந்திருந்ததை நாம் காணமுடியும். வாய்விட்டுப் படிக்கும் அல்லது பாடும் வகையில் ஆக்கப் பெற்றிருக்கும் இந்த இலக்கியங்களின்  இலக்கு நாமொழிப்யிற்சி தருவதேயாகும்.

இவ்வாறான நாப்பயிற்சி தருவதில் தலைசிறந்து விளங்கும் எளிதான இலக்கிய நூல்களைத் தந்தவர்கள் இருவர்: திருவள்ளுவர் மற்றும் அவ்வை. அவ்வையின் ஆத்திச்சூடியும் கொன்றை வேந்தனும், மற்றும் வள்ளுவனின் திருக்குறள் ஆகிய மூன்றுமே பண்டைய ஹைக்கூக்களாகும்.

ஆத்திச்சூடி, தமிழின் உயிர் எழுத்துக்களை நினைவில் நிறுத்தும் படியான வகையில், ஒற்றைவரியில்  எழுதப்பட்ட மழலைப்பாடல் போன்றதோர் தோற்றத்தைக் கொடுத்தாலும்,  அதன் கருத்துச்செறிவு ஆழ்ந்துணரத்தக்கது. பிள்ளைப்பருவத்திலேயே, உயர்வளச் சொற்களை அறிமுகம் செய்வது கல்வியின் அடிப்படையென்பதை அவ்வையின் வரிகள் தெற்றென விளக்கும். கொன்றைவேந்தனில் அவ்வை உயிர் எழுத்துக்களோடு நின்றுவிடாமல், உயிர்மெய்யெழுத்துக்களையும் சேர்த்துக் கொள்ளுகிறார்; ஆத்திச்சூடியைபோன்றே கொன்றைவேந்தனும் ஒற்றைவரியில் அமைந்த பாடல் தொகுப்பாகும். இதில் பொதிக்கப்பட்டிருக்கும் பொருளோ மாக்கடல் அளவு! இதோ அவ்வையின் வரிகளைப் பாருங்கள்! பருகுங்கள்!!

ஆத்திசூடி    

அறம் செய விரும்பு
   
ஆறுவது சினம்    

இயல்வது கரவேல்    

ஈவது விலக்கேல்    

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்

ஓதுவது ஒழியேல்    

 ஒளவியம் பேசேல்

அஃகஞ் சுருக்கேல்

கொன்றை வேந்தன்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று

4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

8. ஏவா மக்கள் மூவா மருந்து

9. ஐயம் புகினும் செய்வன செய்

10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை

15. காவல் தானே பாவையர்க்கு அழகு

16. கிட்டாதாயின் வெட்டென மற

17. கீழோர் ஆயினும் தாழ உரை

18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி

23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை

27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு

28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு

29. சீரைத் தேடின் ஏரைத் தேடு

30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

31. சூதும் வாதும் வேதனை செய்யும்

32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு

34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

40. தீராக் கோபம் போராய் முடியும்

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்

43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு

46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது

47. தோழனோடும் ஏழைமை பேசேல்

48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்

49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை

50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு

52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி

53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு

54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

55. நேரா நோன்பு சீர் ஆகாது

56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்

57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்

58. நோன்பு என்பது கொன்று தின்னாமை

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்

61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்

62. பீரம் பேணில் பாரம் தாங்கும்

63. புலையும் கொலையும் களவும் தவிர்

64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்

66. பேதைமை என்பது மாதர்க் கணிகலம்

67. பையச்சென்றால் வையம் தாங்கும்

68. பொல்லாங்கு என்பது எல்லம் தவிர்

69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

71. மாரி அல்லது காரியம் இல்லை

72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

77. மேழிச் செல்வம் கோழை படாது

78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

80. மோனம் என்பது ஞான வரம்பு

81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை

89. வைகல் தோறும் தெய்வம் தொழு

90. ஒத்த இடத்து நித்திரை கொள்

91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்


இந்த வரிகளை உச்சரிக்கும் எவருக்கும் நாவில் ஏற்படும் சுகானுபவத்தைச் சொல்லி மாளாது.

அடுத்ததாக வள்ளுவம்: ஒன்றே முக்காலடியில் உலகப்பொது நியதியைப் பளிச்சென்று வள்ளுவன் எடுத்துக்காட்டிய பாங்கு - அவனது சொல்லாட்சி ஆகியன நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.  சொல்லப்போனால், அவ்வையின் ஒற்றைவரிக்கு ஒரு ஊக்கசக்தியாக அமைந்தது வள்ளுவனின் ஒன்றே முக்கால் வரிகளெனலாம்.

"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்." என்று அவ்வை பாராட்டுவதைகாணீர்.

அவ்வையின்* காலத்தைச் சேர்ந்தவரன வள்ளுவர், 1330 குறட்பாக்களில் உலகமுழுமையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான பொதுமறையைப் பொதித்துப் போனாரென்றால் அந்தச் சாதனைக்கு தமிழ்மொழியின் வளமும் சொல்திரட்சியுமே காரணமாகும்.

ஒரு கவியின் கவிதைகள் வெற்றிபெறுவதற்கு அவர் எடுத்துக்கொள்ளுகிற பொருள் காரணமா? அல்லது சொல்லாட்சி காரணமா? என்று பார்த்தால், முன்னதைப் பின்னது வெல்வதைக்காணமுடியும். ஒரு எழுத்தாளரின் சொல்லாட்சி, அவன் கையாளுகின்ற மொழியின் சொல்வளத்தை ஒட்டியே அமையமுடியும். இது இயற்கை. ஒரு மொழியில் செல்வாக்கான சொல்வாக்கு இருப்பது உறுதியாகின்றபோது, அம்மொழியைக் கையாளுகின்ற கவி, தனது தனித்துவத்திறமையினாலும், அவர் எடுத்தாள்கின்ற பொருளின் தன்மையை ஒட்டியும், அமரத்துவமான படைப்புக்களை ஆக்கித்தருகிறார்.     

சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது என்பது  மொழியைக்கையாளுவதில் ஒரு தனித்துவக்கலை. இது எவருக்கும் சுலபமாக வந்து விடாது. சொல்வளம் எவருக்கு இருக்கின்றதோ அவர் மட்டுமே சுருக்கமாக எதனையும் சொல்லமுடியும், எழுதமுடியும். இக்கலையில் தமிழ் விற்பன்னர்கள் அல்லது முன்னோடிகள் எவரென்றால் வள்ளுவரும் அவரைத்தொடர்ந்து அவ்வையுமே. சொல்லப்போனால், இவ்விருவரும் வாழ்ந்த காலத்தை வைத்துப்பார்க்கின்றபோது, உலக அரங்கிலுமே இவர்கள் இருவரும் சுருக்க இலக்கியத்தின் முன்னோடிகளாக அமையக்கூடும்.

இந்தகலைக்கு சற்றேறக்குறைய ஒப்பீடாக, பின்னாளைய, ஜப்பானிய ஹைக்கூ கலையைக் கூறலாம். மூன்று வரிகளில் 17 சொற்களைக்கொண்டு
5-7-5 என்று வரிசைவாரியாகச் சொற்களை அடுக்கும் கலைதான் ஹைக்கூ.
இதில் இன்று பல்வேறு மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன என்றாலும், ஹைக்கூவிற்கு என்றுமே மவுசு உண்டு ஏனென்றால், அது ஒரு ஒரு சுருங்கச் சொல்லும் கலை.

ஹைக்கூ கவிகளாகட்டும், ஹைக்கூ வாசகர்களாகட்டும் திருவள்ளுவருக்கும், அவ்வைக்கும் அவர்கள் நன்றிக்கடன் பட்டவர்க்ள்.
பல இடங்களில், பல வலைதளக் சேவைகளில், ஹைக்கூ எழுதும் கலையைப் பயிற்றுவிக்கிறார்கள். இப்பயிற்சிகளில் வள்ளுவர் பற்றியும். அவ்வை பற்றியும் சொல்லித்தருதல் இன்றியமையாததாகும். திருக்குறள், ஆத்திச்சூடி,கொன்றைவேந்தன் ஆகியனவற்றை எடுத்துக்காட்டுக்களாகக் காட்டி இப்பயிற்சியைத் தருவார்களேயானால், அது சிறந்த பலனைத்தரும் என்பதில் ஐயமில்லை.

------
*ஒன்றுக்கு மேற்பட்ட அவ்வையார் வாழ்ந்தனர்; அவர்கள் காலம் வெவ்வேறு என்கிற விவாதங்களை ஒதுக்கிவிட்டு, இக்கருத்தை அணுகலாம்.

அவ்வைமகள்

0 comments:

Post a Comment