Subscribe:

Pages

Saturday, January 22, 2011

எங்கும் எதிலும் எதிர் நீச்சல்


எங்கும் எதிலும் எதிர் நீச்சல்

விந்துப்பசையில் கோடிப்பேரை முந்திப்பாய்ந்தேன் முதல் எதிர் நீச்சல்
சந்துத்தசைக்குள் அண்டம்சினைபட நீந்திச்சேர்ந்தேன் மறுஎதிர் நீச்சல்
எந்தையும் நன்றெனன் எந்தாயும் முயன்றனள் நஞ்சுக்கலவையில் நான் எதிர் நீச்சல்
நிந்தைமழையில் ஒன்பதுத்திங்களும் நான் போட்டேன் கடுமெதிர் நீச்சல்
பந்தய நாளும்வந்தது பனிக்குடம் பிளந்தது உதிரஓடையில் என் உக்கிர நீச்சல்
அந்தயக்கதவைத்திறந்து வெளியில் குதிக்க நான் போட்டேன் பராக்கிரம நீச்சல்
முந்தை நீச்சல் முடியா நிலையினில் பிந்தைவீச்சிலும் தொடர் எதிர் நீச்சல்
கந்தைப் போர்வையில் மோவாய் நீச்சல், மார்பால் நீச்சல், முட்டி நீச்சல், முழங்கால் நீச்சல் தொடர்
உந்து நீச்சலில் நான்போட்டது தரையில் நீச்சல், தடுக்கில் நீச்சல், மடியில் நீச்சல், மலத்தில் நீச்சல்
சொந்தக்காலில் இடன்றவாகினில் கபடி நீச்சல், கரடி நீச்சல், வானர நீச்சல் -வலியோர்
ஆந்தைப் பார்வையில் நடுங்கிவீழ்ந்து நான் விரைந்தது நாட்டிய நீச்சல் - வாழ்க்கைச்
சந்தைவீதியில் சரிந்தவாகினில் நான் போட்டேன் பராசுரநீச்சல்    உளச்
சிந்தை நிலையில் ஒவ்வொரு கணமும் நான் போட்டது அமில நீச்சல்
சொந்தமும் பந்தமும் முன்னித்தள்ள நான் பிழைத்தேன் முழு எதிர் நீச்சல்
வந்ததும் வாய்த்ததும் பின்னித்தள்ள நான்  ஏறினேன் உரிமர நீச்சல்
வெந்த மனதிலும் நொந்த உடலிலும் சொந்தமென்றானது எதிர்நீச்சல் ஒன்றே
அந்தமா ஆதியா என்பதில்லாமல் எடுப்பவையாவிலும் எதிர்த்தே நீச்சல்
எந்த வழியிலும் எந்த வகையிலும் எந்தன் இயக்கம்  எதிர் நீச்சலென்றானதால்
இந்த நீச்சலா அந்த நீச்சலா எது பெரிதென்பதாய் என் நித்தியப் பாய்ச்சல்
இந்த நீச்சலில் நானே மட்டுமா எனத்திரும்பிப்பார்த்தேன் கண்ணின் வீச்சில்
அந்த வானிலும் மண்ணிலும்  கண்டேன் கடும் எதிர் நீச்சல் காட்சிகள்!
காந்தப்புலமிடை நீச்சல்  மறந்தால் விண்ணில் கோள்கள் இயங்கிட முடியுமா?
கந்தப்புகையிடை அக்கினி நீச்சல் மறந்தால் எரிமலையிருப்பது தெரியுமா?
மந்தாரைகள் காற்றில் நீச்சல் மறந்தால் மகரந்தம் பரவிட முடியுமா?
செந்நாரைகள் விண்ணில்  நீச்சல் மறந்தால் வலசை போகிடலாகுமா? இயற்கை
ஏந்திடும் தெய்வம் காட்டும் குறிகளில் நீச்சலும் பாய்ச்சலும் வெற்றியின் இலக்கணம்
காந்திடும் உள்ளம் தண்குளிர்வைக்க்காண்பது எதிர் நீச்சலின் மாபெரும் இரகசியம்  
எந்தத்துறையிலும் சாதனை இருக்கை நேரெதிர்க்கரையின் வழுக்குப்பாறை
அந்தத்துறையில் ஏறி வழுக்கை வழுக்கி ஓடிடச்செய்தல் சரித்திர முத்திரை
இந்த வாழ்வில், சோதனையாவையும் துகளாய் மாற்றிடும் நம் எதிர் நீச்சல்
மந்த மனதையும் மட்டிலா ஆற்றல் பெய்தாட்டிடும் மகத்துவம் வாய்ந்தது நம் எதிர் நீச்சல்
விந்தையல்ல வாழ்க்கையின்  உண்மை எதிர் நீச்சலே என்பது வாழ்ந்தவர் சான்று; ஞான
வேந்தராய், நாம் மாற்றம் பெற்றோங்கிட எதிரிடை நீச்சல் ஒன்றே ஊன்றுகோலாகும்!

அவ்வைமகள்


0 comments:

Post a Comment