Subscribe:

Pages

Saturday, January 15, 2011

தமிழ்ப்பொங்கல்

தமிழ்ப்பொங்கல்

பொங்கல் என்றாலே அது தமிழர்களின் விழா என்பதனை உலகே அறியும். அறுவடைத் திரு நாளான தைப்பொங்கல் ஒவ்வொவொரு ஆண்டும் தை முதல் நாளன்று துவங்கி மூன்று நாட்கள் அனுசரிக்கப்பபடுகிறது. முதல் நாள், கதிரவனுக்கும், இரண்டாம் நாள் கால் நடைகளுக்கும், மூன்றாம் நாள், சுற்றம்- நட்பு-சமுதாயத்திற்கும் என நன்றி நவிலும் விழாவாக நமது தைப்பொங்கல் அமையப்பெற்றுள்ளது.

நம் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்கும் இயற்கைக்கூறு ஒவ்வொன்றிற்கும், நமக்கு உதவிசெய்யும், ஒவ்வொரு உயிரிக்கும்  நன்றி செலுத்தவேண்டும் என்கிறதான விரிந்துபரந்த பண்பாட்டின் முத்தாய்ப்பு தான் தைப்பொங்கல் விழா! அபரிமிதமான விளைச்சல் ஈந்து வயல் வரப்புக்களில், செழுமை கொப்பளிக்க, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற பொய்யாமொழியின் விளக்கவுரையாக மக்கள், மாடு, கன்று, கழனி, தானியம், காய்-கனி எனப் புத்தாடை புனைந்து, மங்கலப் புன்னகையோடு வலம் வரும் வைபவம் தான் பொங்கல்.

அறுவடை செய்த புத்தம்புது நெல்லைப் பயன்படுத்தி மட்டுமே சோறும் பொங்கலும் ஆக்குவது, பச்சை மொச்சை, புதிதாய்ப் பறித்த பூசனி, அப்போதுதான் பிடுங்கி வந்த மஞ்சள் கொத்து, புத்துருக்கு வெல்லம் - இவை மட்டுமே பயன்படுத்துவது, எனப் பயன்பட்டுப் பொருள் ஒவ்வொன்றிலும் தமிழ்மண்ணின் வாசனை இருக்கவேண்டும் என்ற நியதியோடு, இயற்கைக்குப் பூசனை எடுக்கும் உறுதியானதொரு தமிழ் மரபாம் பொங்கல், உலகுக் கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.
நான் சிறுமியாக இருந்த பருவத்தில், ஒரு பொங்கல் பண்டிகையின்போது என் பாட்டியைப் பார்த்துக் கேட்டேன்: "ஏம்பாட்டி! இந்த முட்டகோசைப் போட்டுப் பொறியல் செஞ்சு தாங்களேன்!" நான் கேட்டதுதான் தாமதம்! பாட்டி பொங்கியெழுந்தாள்! "என்னது? சீமக்காயப் போட்டு சமைக்கச் சொல்றியா? நாக்கு நீண்டு போச்சாக்கும்! பொங்கல் நம்ம பண்டிகை! நாட்டுக் காயை மட்டுந்தான் சமைக்கணும்! இந்த மண்ணுடீ - இதலத் தாண்டீ நம்ம அப்பன், பாட்டன், முப்பாட்டன்னு வாழ்ந்துருக்கோம்! இந்த மண்ணுலப் பூர்வீகமா வளர்ந்துவரக் காய்கறியை மட்டுந்தாண்டீ பொங்கலுக்கு உபயோகிக்கணும்! சீமக்காயச் சேர்த்தோம்னா, எரிஞ்சிகிட்டுப் போறானே சூரிய பகவான், அவன் நம்மைச் சும்மா விடமாட்டாண்டீ!"

சம்மட்டியாலடித்தது போன்று பாட்டி பேசினாள். அவள் பேசியபோது அவள் கண்ணில் கோபம் கொப்பளித்த அதே வேளையில்,  நீர் பனித்ததையும் நான் பார்த்தேன். மண் பற்று, மாநிலப்பற்று, நாட்டுப் பற்று, தெய்வப்பற்று என்பதையெல்லாம், "நாட்டுக் காய்" என்று பாட்டி சொன்ன அந்த ஒரு சொல்லே பறைசாற்றியது!  எட்டு வயதுப் பெண்ணுக்கு அன்று கிடைத்த ஞான "தீட்சை"யை எனது உயர்கல்வி - ஆய்வுப் படிப்புக்களோ அல்லது மாபெரும் கவிகளின் எழுத்தோ, தேசத்தலைவர்களின் கொந்தளிக்கும் பேச்சோ இதுகாறும் தந்ததில்லை!!

பொங்கல் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சியன்று! நமது குருதியிலும், மூச்சிலும் ஓடிக்கொண்டிருக்கிற தமிழ்மரபின் தார்மீக விழா!!  பொங்கலின் முக்கியத்துவத்தை நமது குழந்தைகள் உணருமாறு கொண்டாடுவது நமது பொறுப்பு!!
  

0 comments:

Post a Comment