Subscribe:

Pages

Sunday, January 9, 2011

ஸ்மைலி ஃபேஸும் கலைஞரும்: சிலேடை

ஸ்மைலி ஃபேஸும் கலைஞரும்: சிலேடை

அமெரிக்கா வந்த புதுசு; ஆறு பேராகச் சேர்ந்து வீடெடுத்து, வாழ்ந்துவந்த ஆரம்ப நாட்கள் அவை.

வேலையில் அமர்ந்து. கொஞ்சம் செட்டிலாகி, ஒரு கோடை - ஒரு குளிர்க் காலம் என, ஒரு ஆண்டின் மொத்தத் தன்மைகளையும், புரிந்து கொள்ளாமல், கார் வாங்காமல், குடும்பத்தைக் கொண்டுவரவேண்டாம் என நாங்கள் அனைவருமே விவேகமாய் (?) முடிவெடுத்து, ஒவ்வொரு நாளையும் மிகுந்த கவனத்துடன், ஓட்டிக்கொண்டிருந்தோம்.

எங்களது பொறுப்பான நடவடிக்கைகளுக்கு, தமிழகத்தில், வீட்டிலுள்ளவர்கள் அதிகப் புரிந்து கொள்ளல் காட்டவில்லை!

அமெரிக்கா என்பது ஏதோ சொர்க்கபூமி போலவும், இங்கு ஏதோ சுலபமான வாழ்க்கை போலவும், இந்த சுகங்களை, அவர்களை விட்டு, இங்கு "புருஷனோ" அல்லது "பெண்டாட்டியோ" அனுபவிப்பது போலவும், அதீதக் கற்பனைகளில், தமிகழகப் பதியும் பார்த்தாவும் இருப்பதான நிலையிருந்த காலம் அது. இங்கு நாய் படும் பாடு நமதென்பது நமக்கு மட்டும் தானே தெரியும்! அதையும் கூட அவர்களுக்குச் சொல்லிவிடமுடியாது.  உடனே, இத்தனைக் கஷ்ட்டப் படறதுக்கு அங்க ஏன் போவணும்!  ஒழுங்கா வீடு வந்து சேரு எனக் கட்டளையிட்டு, ஊரில் தமுக்கடித்துவிடுவார்களே என்கிற ஐயம் வேறு இருந்தது.

நை நை என்று பிச்சியெடுக்கும், மனைவியை வைத்துக்கொண்டு இங்கு ஒரு, கணவன் கஷ்டப்பட்ட விதத்தை நேரடியாகப் பார்த்துப் பரிதாபப் பட்டவள் நான். காலிங்க் அட்டை வாங்கிப் போட்டு, மணிக் கணக்கில் மனைவியோடு கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார்.

மனைவி அங்கிருந்து ஒரு மிஸ்ட் கால் கொடுப்பார், உடனே போனை எடுத்துக் கொண்டு போய் அவரது அறையில் கதவை மூடிக்கொண்டு, பேச ஆரம்பித்து விடுவார்.

அறைக்குள் அடக்கம் ஒடுக்கமாகப் பேசுவதாக அர்த்தம்! ஆனால், அவர் பேசுவது, வீட்டில் இருக்கிற  அத்தனைப் பேருக்கும் மிகவும் தொந்திரவாக இருக்கும். வீட்டைத் தாண்டியும் கேட்கும்.

அமெரிக்காவில், எல்லா வீடுகளுமே இலேசான பைன் மரத்தால் கட்டப் பட்டவை. நடமாடுவது, பேசுவது எல்லாமே பளிச்சென அக்கம் பக்கத்தினருக்குத் தெரிந்துவிடும்.

போன் என்றால் சதா சர்வ காலமும் போன் என்கிற கணக்கில் அவரது போக்கு இருந்தது. போனில் சார்ஜ் தீரும் வரைக்கும்,  பேசுவார். சார்ஜ் போட்டு மீண்டும் தொடருவார்.

ஆக, அந்த ஒருத் தனி நபரால், வீட்டில் நிம்மதி இல்லாமல் போனது. இதை ஒருவர் அவருக்கு நேரடியாகவே சொல்லிவிட்டார். வீட்டில் அத்தனைப் பேருக்கும் பொதுவான போனை அவர் மட்டுமே பயன்படுத்துகிறார்; பிறருக்கு, அவர் வாய்ப்பு கூடத்தருவதில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. சமைப்பது, வீட்டைப் பெருக்கித் துடைப்பது, குப்பை வெளியேற்றுவது போன்ற பொதுப் பணிகளில், அவர் முழுமையாக ஈடுபடுவது இல்லையெனவும் சொல்லப்பட்டது. அவர் அறைக்குச் சென்ற தேனீர்க் கோப்பைகள், நிரந்தரமாக (கழுவப்படாமல்) அங்கேயே அவருடன் வசித்துவருகின்ற நிலைமையும் அவருக்கு உறைக்கும்படியாக இயம்பப் பட்டது. இருப்பினும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, வீட்டிற்கு வெளியே போய், வீட்டைச்சுற்றி நடந்து கொண்டே பேசலானார்.

வீட்டிலிருந்து அதிகமான சத்தம் வருகிறது - வீட்டைச் சுற்றி சிகரட் துண்டுகள் காணப்படுகின்றன - என அக்கம்பக்கத்தினர் புகார் தந்ததால், லீஸ் அலுவலகத்திலிருந்து, வீட்டிற்கு எச்சரிக்கை நோட்டீஸ் வந்தது. நூறு டாலர் அபராதமும் விதித்திருந்தார்கள். இதனால் வீட்டில் ஒரு கொந்தளிப்பு எழுந்தது. கட்டுண்டோம் - பொறுத்திருந்தோம் - காலம் மாறுமென - இனி காலத்தை நான் மாற்றப் போகிறேன் என வீரச் சபதமிட்டார் திண்டுக்கல்லைச் சேர்ந்த மறவர் - தேவர்

அபராதத்தை அவர்தான் கட்டவேண்டும் என்று முடிவானது. இதை அவருக்குத் தெளிவாகச் சொன்னதோடு அல்லாது, போனில், வளவளவென்று பேசாமல், சுருக்கமாகப் பேசுமாறு வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவியுங்கள் -  ஒரு மாற்று யோசனையாக, கம்ப்யூட்டர் வழியாக, நாங்கள்  உறங்கிய பிறகு, தலையில் ஹெட் போனைப் போட்டுக்கொண்டு, தாழ்வாகப் பேசி "சேட்டிங்க்" செய்யுங்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. ஒருவர், தன்னிடமிருந்த ஹெட் போனை, "நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" எனத் தானமாகவே வழங்கி விட்டார்.

"இன்று நிம்மதியாகத் தூங்கப் போகிறோம்" என்கிற நிம்மதிப் பெருமூச்சுடன். கட்டையைக் கீழே போட்டு உறக்க ஆரம்பித்திருப்போம் - "ஏண்டீ! இது கூடத்தெரியலியாடி! அதோ கலைஞர் பொம்மை கிட்ட கீது பாருடீ! அதய அமுக்குடீ!"

யாகூ மெஸேஞ்சரில், மனிதர் - குறையாத குரலில், பெண்டாட்டிக்கு, சேட்டிங்க், கற்றுக் கொடுக்கிறார்; மணி இரவு 12 - அங்கே வீட்டு வேலை முடித்துவிட்டுக் , குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெண்டாட்டிக்குச் சேட்டிங்க் வரத் தோதான நேரமாம். 

"இவனெல்லாம் திருந்தவே மாட்டான்" என்று வெகுண்டெழுந்தார் தேவர். அடுத்த நாளே வேறு வீடு பார்த்து, "என்னுடன் வருபவர்கள் வாருங்கள்" என்றார் -  பாதி வீடு காலியானது. வேறு மாகாணத்திற்கு மாறத் திட்டமிட்டிருந்த நாங்கள் ஒரு சிலர் மட்டும்,  இரண்டு மாதத்தில் கிளம்பப் போகிறோம், இங்கிருந்தே கிளம்பிவிடலாம் என முடிவெடுத்து, அங்கேயே சிறிது காலம் தங்க வேண்டியதானது.

இத்தனைப் பேர் சென்ற பிறகும் கூட, தன்னால் பிறருக்கு எத்தனைத் தொல்லை என்பதனைப் பொருட்படுத்தாமல், இந்த நபர், தான் செய்வதை மட்டுமே சரியாகச் செய்வார். ஒவ்வொரு இரவும்,  அந்தக் கலைஞர் பொம்மை கிட்ட அமுக்குடீ என்றவாறு கொஞ்சம் கூடக் கூச்சப்படாமல், சுக்கு, சொகம், சுகந்தீ, ராசாத்தி என மனைவியைக் கொஞ்சலுடன் அழைத்தபடி அவர் சேட்டிங்கில், உரையாடி வந்த அந்தக்  காலங்களை என்னால் மறக்கமுடியாது.

அப்பாவியான அந்த மனிதர் செய்வது அனைத்தும் கோமாளித்தனமாக இருக்கும்; இருப்பினும், கண்ணாடிபோட்ட ஸ்மைலி ஃபேஸில், அவர்  கலைஞரை அடையாளம் கண்டு, சென்னையிலிருந்த மனைவிக்கு, கலைஞர் முகத்தை வைத்துச் சேட்டிங்க் கல்வி வழங்கியதை நினைக்கும் போதெல்லாம் எனக்குச் சிரிப்போடு ஆச்சரியமும் வரும்.

உண்மையில், கண்ணாடி போட்ட  ஸ்மைலி ஃபேஸ்,  அச்சசல், கலைஞர் முகம் போன்று தானே இருக்கிறது! இது நமக்குத் தோன்றவில்லையே!! அவருக்கு மட்டும் இது பளிச்செனத் தெரிந்திருகிறதே!! என்று நான் எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன்!!

எளிமையான பார்வைக்கும் கூட நிறைய ஆற்றல் இருக்கிறது என்கிற வெளிச்சம் அவரிடமிருந்து நான் பெற்றது!!

பிறரால், கண்டிக்கப் பட்ட, புறக்கணிக்கப்பட்ட அந்த மனிதருக்கும் கொஞ்சம் பிரகாசமான மூளை இருக்கத் தான் செய்கிறது என்று நான் அடிக்கடி நினைக்குமாறு செய்தது அவர் செய்த சிலேடை!

0 comments:

Post a Comment