Subscribe:

Pages

Sunday, January 9, 2011

காணாமல் போன கணவன்

காணாமல் போன கணவன்

ஏர்ப்போர்ட்டில் இறங்கி செக் அவுட் முடித்து வெளியே வந்தாள்!
அவன் அவளுக்காகக் காத்திருப்பான் என்பது அவளுக்குத் தெரியும்.
வருமாறு சொன்னவள் அவள் தானே!
அவன் கண்டிப்பாய் வந்திருப்பான்!! காரியவாதி!!

அமெரிக்க பேங்க்கில் இருக்கும் பணம் அவனுக்குத் தேவை! தொடர்ந்து - கெஞ்சி- கெஞ்சி - இமெயில் அனுப்பியிருந்தான்! கார்ட் வேண்டுமென்று -
அவனது டெபிட் கார்ட் இவளிடம் இருந்தது! ஏர்ப்போர்ட்டில், நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளுமாறு இமெயில் அனுப்பியிருந்தாள்!

அவன் சும்மா வரமாட்டான். பெண்டாட்டியைக் கூட்டிகொண்டு வந்திருப்பான் என்றும் அவளுக்குத்தெரியும்.

எனவே தான் குழந்தையைப் பாலூட்டி, நன்றாகத் தூங்கவைத்த பின்னரே ஏர்ப்போர்ட்டிலிருந்து வெளிவந்தாள்!

அந்த முகத்தை, இந்தக் குழந்தை பார்த்துவிடக் கூடாது என்பதிலே அவள் உறுதியாக இருந்தாள்.

எதிர்ப்பார்த்தது போலவே, ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்தான்.   
திடீரெனக் கல்யாணம் நடந்தது; அழைப்பு அனுப்பமுடியவில்லை என்றான். அவன் பெண்டாட்டி, முகத்திலிருந்து கால் வரை ஏதேதோ மாட்டிக்கொண்டிருந்தாள். ஏர்ப்போர்ட் வருவதெற்கென்றே, அவசர அவசரமாக ஃபேஸியல் செய்து கொண்டு வந்திருப்பது தெரிந்தது.
பொருத்தமிலாத, உயர்விலை சுடிதார் அணிந்திருந்தாள். செயற்கையாகச் சிரித்தாள்.வயிறு மேடிட்டு, கர்ப்பம் துவங்கியிருப்பதைக் காட்டியது. இதுவும் கூட அவள் எதிர்ப்பார்த்தது தான்.


உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? என்று அவனைக் கேட்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு!

டாக்சி கூப்பிடட்டுமா? என்றான். வேண்டாமெனத் தலையசைத்தாள்!!
டெபிட் கார்டை நீட்டினாள்! அதற்கெனவே காத்துக் கொண்டிருந்தவன் போல படக்க்கென வாங்கிக் கொண்டான்.

எங்கே போவணும்? என்றான்.
நீங்கள் கிளம்பலாம் என்றாள்.
அவர்கள் நின்றார்கள்.  இவள் கிளம்பினாள்!!

கிளம்பும் முன் அவன் முகத்தை அழுத்தம் திருத்தமாக ஆழ்ந்து பார்த்தாள்.
தூவெனத் துப்பவேண்டும் என நா குழைந்தது - கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்!

தள்ளு வண்டியில் குழந்தை இலேசாக அசைந்தது. படுக்கென வண்டியைத் தள்ளி வேகமாய்க் கடந்து  போனாள்.

அவன் இவளைத் தொடர்வான்; குழந்தை அவனைப் பார்த்து விடக் கூடாது! வண்டியை இன்னமும் வேகமாகத் தள்ளினாள்.

அம்மா! ஆட்டோ வேணுமாமா? வயதான ஆட்டோக் காரர்.
ஏறினாள்! அவனும் அவனது மனைவியும், பிளாட்ஃபார்மில் நின்று இவளது ஆட்டோவையே கவனிப்பது கண்ணாடியில் நன்றாகத்தெரிந்தது!

"முதுகெலும்பில்லா மனிதர்கள்" அவளது வாய் முணுத்தது. என்னம்மா சொன்னீங்க? எங்கம்மா போகணும்? என்றார் ஆட்டோக் காரர்.

ட்ரைடெண்ட் என்றாள். ஓட்டலில் தங்கிக் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, என்ன செய்வது என்பது குறித்து திட்டமிடவேண்டும் என்பது அவளது யோசனை!

பழைய நண்பி, ஜெயாவை போனில் கூப்பிட்டாள்!
விஷயத்தைச் சொன்னாள்!

பின்னாடிக் குழந்தைப் பெரியவனாகி அப்பாவைக் கேட்பானே அப்போது என்ன சொல்வாய்? என்றாள்

"அமெரிக்காவில் காணாமல் போய்விட்டார் என்பேன்"

 அது பொய் இல்லையா?

அங்கு என்னைக் கோவிலில் தாலி கட்டித் திருமணம் செய்து, குழந்தை பெற்று, இதோ வந்துவிடுகிறேன் என்று இந்தியா வந்தது - அங்கு வேறு மணம் புரிந்து கொண்டது- இவையெல்லம் நியாயம்? நான் உண்மை சொன்னால் -- அதைப் பொய் என்கிறாயே!

அவன் சூழல் எதுவோ?
அவன் தரப்பிலும் நியாயம் இருக்கலாம் அல்லவா?

இவ்வாறு பேசிப்பேசித்தான் தவறுகளை நிலைப் படுத்துகிறோம்!
படித்த, வயதுவந்த ஒரு ஆணும் பெண்ணும், ஒப்புக்கொண்டு, ஏற்படுத்திய உறவை ஆண், தனது சுயவசதிகளுக்காக, விலக்கிக்கொண்டுவிடலாம்!
கணவன் - தந்தையெனும் இருபெரும் பொறுப்புக்களைக் கைவிடலாம்!
ஆனால் பாதிக்கப்பட்டப் பெண், குழந்தையெனும் பாரத்தைச் சுமந்து கொண்டு, இதைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்? இதுதானே நீ
சொல்லுவது?

படித்திருக்கிறாய்! சட்டப்படி நடவடிக்கை எடு!
நன்றாய் சொன்னாய்!
படித்திருப்பதால் தான் நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!

பிறகு வேறு என்னதான் செய்யப் போகிறாய்?

சட்டத்தை நானே ஆக்கித் தீர்ப்பையும் அளித்துக் கொள்ளுகிறேன்!
என் வாழ்வில் கணவனாக வந்தவன் காணாமல் போனானே! அவன் காணாமல் போனவனாகவே இருக்கட்டும்!

அதே பல்லவியா?

ஜெயா! பொய்யே உருவான, பொறுப்பில்லாத ஒரு மனிதனைக் காட்டி, "இவன் தான் உன் தந்தை என்று என்குழந்தையை அசிங்கப் படுத்த விரும்பவில்லை."

அப்ப ஆம்பளைத் துணையில்லாமயே வாழ்ந்துடுவியா?

நான் என் கணவனுக்காக இப்போது ஆசைப்படவில்லை! ஆத்திரப்படவில்லை!!  நான் இப்போது வேகப்பட்டால் அது என் குழந்தையைப் பாதிக்கும்!

எனக்குத்தெரிஞ்ச நல்ல வக்கீல் இருக்காங்க, வா பாக்கலாம்!

என் கணவன், என்னையும், குழந்தையையும் புறக்கணித்தான், என்பதற்காக, நான் கோர்ட் கேஸ் என்று நாயாய் அலைய விரும்பவில்லை, மலிவானப் பத்திரிகைகளில் எனது சுயமதிப்பை இழக்கவில்லை!!
மாறாக என் குழந்தையின் மீது முழு கவனத்தையும் செலுத்தி வளர்க்கப் போகிறேன்!

டெபிட் கார்ட் உன்னிடம் இருந்தது; பின்னும் உனக்குத் தெரியும் என்கிறாய்! மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அவனைப் பழிவாங்கியிருக்காலாமே! ஏன் கொண்டுவந்து கொடுத்தாய்!

அந்த எச்சிற்காசும், பாவப்பட்டப் பணமும் எனக்கும் என் பிள்ளைக்கும் தேவையில்லை!  அவனே எனக்குப் பணம் தந்துவிலகியிருந்தாலும் கூட நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன். அது மனைவி எனும் - தாய் எனும் தகுதிக்கு இழிவு. அவனது காசுக்காக அவனுக்கு நான் மனைவியாகவில்லை.
அவனது காசை அவனிடமே வீசிவிடவேண்டும் எனவே நினைத்தேன்!


அப்ப, அவன் செய்த தவறுக்கு என்ன தண்டனை?

தவறைச் செய்துவிட்டு, வெகுநாள் எவரும் நன்றாக வாழமுடியாது என்கிற இயற்கைச் சட்டத்தை மதிக்கிறேன்!

அப்ப இப்படியே இருந்திடப் போறயா?
என் குழந்தை பெரியவனாவான்!
நல்ல தந்தை அவனுக்கு வேண்டுமெனில், அவனே எனக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமையை  வழங்குவான்.

இப்படிபேச உனக்கு வெட்கமாயில்லை?

உடம்பு கூசாமல் ஒரு ஆணால் மறுமணம் செய்துகொள்ள முடிகிறபோது, ஒரு பெண்ணாலும் அதனைச் செய்யமுடியும்! இந்த பதிலை உனக்கு ஒரு நாள் என் பிள்ளை கூறுவான்! நான் அந்தப்பொறுப்பை அவனிடமே விட்டுவிடுகிறேன்!

நடக்கின்றதாகப் பேசு!
காலம் மாறும்!
நான் மனைவியல்ல!! தாய்
பார்க்கலாம் ஜெயா!

0 comments:

Post a Comment