Subscribe:

Pages

Friday, April 29, 2011

நள்ளிரவு பயங்கரம்: சுழற்றி வீசிய சூறாவளி

நள்ளிரவு பயங்கரம்: சுழற்றி வீசிய சூறாவளி 

நேற்று இரவு தூங்கிக்கொண்டிருக்கிறோம். எச்சரிக்கை சைரன் வாசலில் பெரிய அளவில் ஒலிக்கிறது. பாதுகாப்புப் பகுதிகளுக்கு நகர்ந்துவிடுமாறு எமக்கு அறிவுறுத்தல். வாரிச்சுருட்டி எழுந்து நான் படக்கென ஜன்னலின் "ப்ளைண்டை" திருகித் திறக்க வெளியிலோ மழை.  இடிஎன்றால் அப்படியொரு இடியை நான் வாழ்க்கையில் கேட்டதில்லை - அப்படிப்பட்ட  மின்னலைப் பார்த்ததில்லை. 

இரண்டு குழந்தைகளையும் இழுத்து அணைத்துக்கொண்டு , மவுனமாய்க் கிடந்தேன். பிரார்த்தனையைத்தவிர வேறு எந்த உபாயமும் தெரியவில்லை.  

ஒரு மைல் அகலத்திற்குச் சுருண்டு எழுந்துவரும் சூறாவளியை டிவியில் காட்டிக்கொண்டே  இருந்தார்கள். வினாடிக்கு வினாடி அது எவ்வாறு நகருகிறது என்பது அங்கே காட்டப்பட்டது. எங்கள் வீட்டிற்கு மிக அருகில் அது நெருங்கிவருகிறது. கண்களைக் கெட்டியாக மூடிக்கொண்டு, குழந்தைகளை இன்னமும் நெருங்கிப் பிடித்துகொண்டு கவிழ்ந்து படுத்துவிட்டேன். எண்ணம் முழுவதும் ஊழிக்கூத்தாடிய சிவனின் நாட்டியாஞ்சலி தான். "சிவ சிவ என்றிட   தீவினை மாளும்" என்கிற ஒற்றைவரி மட்டுமே நாவில் தொடர்ந்து வந்தது. 

விஞ்ஞானம் எங்கு நின்று விடுகிறதோ அங்கிருந்து தொடங்குவது மெய்ஞானம் என்றார் கண்ணதாசன்.  என் அறிவுக்கு எட்டிய  வரையில் இயற்கையின் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் விஞ்ஞான வழிமுறைகள் இல்லை. விஞ்ஞானம் எனைக் கைவிட்டது. ஆனால் எனைக் கைவிடாது தொடர்ந்தது மெய்ஞானப் பிரார்த்தனை மட்டுமே. எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை.

விடிந்ததும் சேதி. எங்கள் மாநிலம் ஜார்ஜியாவில் தான் மிகக்குறைவான உயிர்ச்சேதம். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது. நன்றி பெருமானே!!
 


 

  






0 comments:

Post a Comment