Subscribe:

Pages

Sunday, April 24, 2011

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்: சாயி பாபா

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்: சாயி பாபா  

புரியாத புதிர் என்பார்கள்
புதிர் புரியாததா? புதிரைப் புரியாதவர்களா? 

சாயி பாபா எனும் இந்த அபூர்வமனிதர் புரியாத மனிதராகப் புகழுடம்புடன் வாழ்ந்து, எல்லோரைப்போலவே "இயற்கை"  எய்தியிருக்கிறார்.

அரசியலா, அறிவியலா, ஆன்மீகமா என்கிற பேதங்கள்  கடந்து  எவரும் மோகம் கொள்ளும் வசீகரத்தை இவர் எங்கனம் கற்றார்? - எவ்வாறு பெற்றார்?

நீண்ட அங்கியா? மூண்ட தலைமுடியா? கண்கட்டிச் சித்து விளையாட்டுக்களா?
இதில் எது இவருக்கு இத்தனை அங்கீகரிப்பை வளர்த்துவிட்டது?

ஜாம்பவான்களும் சாமானியர்களும் எது கண்டு இந்தமனிதரிடம் ஓடினார்கள்?
மாபெரும் மக்கள் கூட்டத்தைத் தனக்காய்த் திரட்டும் அரசியல் தலைவர்கள், எது திரட்ட இவரிடம் யாசகம் செய்தார்கள்?
தெளித்த திருநீற்றுக்கும், உமிழ்ந்த லிங்கத்திற்கும், விரற்கிடையில் உருவப்பட்ட ஒல்லிச் சங்கலிக்கும், ஆலாய்ப் பறந்தவர்கள்

பசுமை நிறைந்த வயல்களையும் 
வறுமை மறந்த ஜனங்களையும் 
உழைக்க விரும்பும் மனங்களையும் 
உத்தம அரசியல் தலைமையையும் 
பருத்த பசுவின் மடிகளையும்
கருத்த மேகக்குவியலையும்   
கற்பு துறக்காப் பெண்களையும்
கடமை வழுவா ஆண்களையும் 
நிலை நடுங்கா பூமியையும் 
குலை நடுங்கா குடும்பத்தையும் 

ஏன் கோரவில்லை?  ஏன் கோரவில்லை? 
எவரும் கோராமலே வரம் தரும் சாமி எனப் பெயர் பெற்றவராயிற்றே!
நல்லதொரு சமுதாயத்திற்கு இவையெல்லாம் தேவை என பாபா  அறியாதவரா என்ன?

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற  வாழ்வதற்கே!
எனக் கடவுளிடம் கதறினானே பாரதி - அந்தக் கதறல் இவர்முன் திரண்ட  மக்களின் காதில் ஒலிக்கவில்லையா?

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எவரின் பின்னோ ஓடிநிற்கும் போக்கில், கேட்கவேண்டியவற்றை எவரேனும் ஒழுங்காய்க் கேட்டிருந்தால் 
எவரிடம் என்ன வல்லமைஇருக்கிறது என்று எப்போதோ புலப்பட்டிருக்கும் அல்லவா?

கரிசனத்திற்கும், விமரிசனத்திற்கும், கடவுளை ஒத்த வழிபாட்டிற்கும். கர்த்தாவான சாயி பாபாவின் மகிமையைக் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.  


     


   


 
 
 







0 comments:

Post a Comment