Subscribe:

Pages

Monday, April 18, 2011

ஒரு மெழுகுவர்த்தியின் வேதிச் சரிதை - மைக்கேல் பாரடே

ஒரு மெழுகுவர்த்தியின் வேதிச் சரிதை - மைக்கேல் பாரடே 
இப்புத்தகம் பொதுச் சொத்தாகும், தமிழில் மொழிபெயர்க்கத் தடையில்லை. எவரேனும் இப்பணியில் முனைவார்களா?

ஞானிகள் - விஞ்ஞானிகள் - இவர்கள் எதனையும் உயர்நிலையில் நின்று பார்ப்பவர்கள்; பிறருக்குப் புரியாத உயர்நிலை மொழியில் பேசுபவர்கள் - விவாதிப்பவர்கள் என்று நாம் நினைப்பதுண்டு . நானும் கூட அவ்வாறானதொரு கருத்துடன் தான் இருந்துவந்தேன் இந்தப் புத்தகத்தைக் கேட்கும் வரை.

"எளிமை என்றால்  இதுவன்றோ எளிமை" எனும்படியாக  எழுதப்பட்டுள்ள
  இந்த  நூலின் ஆசிரியர், மைக்கேல் பாரடே .

மின்சாரமும் காந்தமும் இவரது சிறப்பு ஆய்வுத்துறைகள். அவற்றைப் பற்றிய விதிகள், விளக்கங்கள், கருவி வடிவமைப்பு என வாழ்ந்துபோனவர், எவருக்கும் தெரிந்த மெழுகுவர்த்தியைப் பற்றி எழுதியிருப்பார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அசந்து  போய்விட்டேன்.  அன்று  அவர் எழுதிய அந்தப் புத்தகம், இன்று ஒலிவடிவில் காணப்பெறுகிறது. 

சிறுவர்  முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டிப்போடும்,  எளிய சொற்கள், படிப்படியாய் வளரும் கதை என சுவாரஸ்யமாய், படிப்பவரை, "கைபிடித்து அழைத்துப்போகும்" அக்கறையுள்ள எழுத்தாளனை  நாம் அடையாளம் காண முடிகிறது. "கதைகதையாம் காரணமாம்" என்கிற இலகுவான தொனியில் பாரடே மெழுகுவர்த்தியின் கதையைக் கூறுவது, அறிவியல் கருத்துக்களை ஒருவரால் இத்தனை எளிதாகக் கூறமுடியுமா என நம்மைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ள வைக்கிறது. அவரது எழுத்துவன்மையை, ஒலிவடிவில் கேட்பது நாம் பெற்ற பேறு என்பேன்.
சொல்லபோனால், அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்தப் புத்தகம், எனவே  புத்தகத்தில் பாரடேவின் உயிரோட்டமான குரல் ஒலிப்பதை நன்றாய்க் கேட்கமுடிகிறது.     


தந்துகிக் கவர்ச்சி மூலம், மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிவதை அவர் விளக்கும்போது,  புரிநூல் திரியே மெழுகுவர்த்தியின் மதிப்பிற்குக்  காரணம் என்று பாரடே சொல்லும் பாங்கு கேட்குந்தோறும், கேட்குந்தோறும் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது. 'திரியழல் காணின் தொழுவர்; விறகின் எரியழல்  காணின் இகழ்வர்" என்ற' மாணிக்கவரிகள்  நினைவுக்கு வந்தன. கல்வி என்பது கற்றோர் மனதையாண்டு,  அவரை  நெறிப்பட வாழும் தன்மையராய் வழிநடாத்துதல் என்பது  வெற்று  ஏட்டுச்சுரைக்காய்க் கல்வியால்  வந்துவிடாது. முறுக்கிபிழிந்து, கற்ற  கல்வியின் சாரத்தைப்  பட்டறிவால் இளக்கிப் , பதனப்படுத்துகின்றபோது மட்டுமே கல்வியின் வெளிச்சம் புலப்படும் என்று என் செவிக்குள் எவரோ திருத்தமாய்ச் சொன்னதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

இதுதான் பிரவண மந்திரமா?

செல்வத்துட்செல்வம் செவிச் செல்வம் என்று சும்மாவா சொன்னார்கள்?

மெழுகுவர்த்தியின்  சரிதையைக்கேட்டு நீங்கள் என்ன உணரப்போகிகறீர்கள்?
  
கேளுங்கள்  
 
http://www.archive.org/details/chemical_history_candle_ava_LibriVox

இது இலவசச் சேவை 
       இப்புத்தகம் பொதுச் சொத்தாகும், தமிழில் மொழிபெயர்க்கத் தடையில்லை. எவரேனும் இப்பணியில் முனைவார்களா?


  
 



0 comments:

Post a Comment