Subscribe:

Pages

Sunday, September 4, 2011

ஊடகத் தமிழ்: திரைப்படப் பாடல் வரியில் தமிழ்ச் சிலம்பம்

ஊடகத் தமிழ்: திரைப்படப் பாடல் வரியில் தமிழ்ச் சிலம்பம்

தமிழுக்கு இருக்கின்ற சொல்வளம் பற்றிப் பேசி மாளாது. இருப்பினும்
ஊடகத்திலே தமிழைப் பயன்படுத்துவது வசதியாக இல்லை என்பதாக ஒரு சாரார் எப்போதுமே குறைகூறி வருகிறார்கள். அது மட்டுமல்ல; ஊடகங்களிலே சரியான தமிழ் வழக்கு இல்லை என்பது போலவும் கூட பலரும் கருத்து கொண்டிருக்கிறார்கள்.

ஊடகம் என்பது பொதுமக்களுக்கான விரிந்து பரந்துபட்ட நுகர்வுத் தளமாகும்; வெகு இயல்பாக - வெகு எளிமையாக -- வெகு வீரியமாக - "கற்றல்" எனும் நிகழ்வை மக்களது சிந்தையிலே விளைக்கின்ற சிறப்பான பணியை ஊடகங்கள் செய்து வருகின்றன. இதில் பிற மொழிகளுக்கு இருக்கிற வல்லமையும், வசதியும் தமிழுக்கு உண்டு எனபதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சொற்கள் என்பவை ஆயுதங்கள் போன்றவை; அவற்றை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதுதான் அவற்றின் விளைவாக மாறுகின்றது. சொற்களை நாம் எவ்விதம் தெரிவு செய்கிறோம் -- அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதிலே தான் அச்சொற்களின் ஆற்றல் வெளிப்படுகிறது என்பது அனைத்து மொழிகளுக்கும் உள்ள ஒரு விதி. இவ்விதி தமிழுக்கும் பொருந்தும். இந்நிலையில் ஊடகத்தில் தமிழ் வெற்றிபெற வேண்டுமென்றால், ஊடகத் தமிழில், சொற்களை எவ்விதம் கையாளுவது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும் என்பது முக்கியமாகின்றது.

தமிழை ஊடகத்தில் எவ்வாறு வெற்றிகரமாகக் கையாளுவது என்பதை ஊடக அன்பர்களுக்குக் கற்றுத்தர வேண்டுமென்றால் அதற்கு வெகு வலிமையான எடுத்துக்காட்டுக்கள் வேண்டும்.

இத்தகைய எடுத்துக் காட்டுக்களை எங்கு சென்று நாம் தேடுவது?

இதற்கு நாம் அதிக தொலைவு போக வேண்டியதில்லை. ஊடகத்திலேயே இதற்கு நிறைய எடுத்துக் காட்டுகள் உள்ளன. தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள் இவ்விதமான பயிற்சிக்கு மிகுந்த உதவியாக அமையக்கூடும். மக்கள் மனத்திலே ஆழமாகப் பதிந்திருக்கிற திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு, அவற்றின் வாயிலாக நாம் சிறப்பான - சரியான - தமிழ் மொழிப் பயிற்சியை வழங்க முடியும்!!

ஒரு எடுத்துக் காட்டாக, "பணம் என்னடா பணம் பணம்" என்கிற புகழ் பெற்ற திரைப்படப் பாடல்வரியை எடுத்துக் கொள்வோம். இவ்வரியை இரு நிலைகளில் ஆய்வு செய்வோம்:

(I) வடிவ மாற்றமில்லாமல்
(II) சிறு மாற்றம் செய்து

இந்த இரு நிலைகளிலும், இந்த ஒற்றை வரி எத்தனை வெவ்வேறான பொருள் நயத்தையும், சுவை நயத்தையும் தருகிறது என்பதைக் காணுங்கள்!!

(I) மாற்றமேதும் செய்யாமல் மூன்று வகையான பொருள் நயம் பிறக்கின்றது


(1) பணம் என்னடா பணம் பணம்? -- உன்னிடத்தில் பணம் இருந்து விட்டால் அது பெரிய விஷயமா? என ஒருவன் மற்றொருவனைப் பார்த்துக் கேட்பது!

(2) என்னிடத்தில் இல்லாத பணமா? என ஒருவன் மற்றொருவனைப் பார்த்துக் கேட்பது!

(3) நான் பார்க்காத பணமா? என ஒருவன் மற்றொருவனைப் பார்த்துக் கேட்பது! (ஒரு காலத்தில் நிறைய பணம் வைத்திருந்தவன்; இப்போது பொருளாதாரத் தாழ்வு கொண்டுள்ளவன் தன்னை நையாண்டி செய்யும் மற்றொருவனைப் பார்த்துக் கேட்பதாக இதனைக் கொள்ளலாம் அல்லது பணத்தால் அவதியுற்று பணத்தால் என்ன பயன் என்கிற வெறுப்பில் இன்னொருவனைப் பார்த்துக் கேட்பதாகவும் கொள்ளலாம்.)

(II) என்னடா என்பதை எண்ணடா என மாற்றி உச்சரிக்கிறபோது

மூன்று வகையான பொருள் நயம் பிறக்கின்றது

(1) பணம் எண்ணடா பணம் பணம்! -- பணத்தை எண்ணு (எண்ணிக்கையைக் கணக்கிடு) என்று இன்னொருவனைப் பணிப்பது.

(2) பணம் "எண்"ணடா பணம் பணம்! -- இன்னொருவனைப் பார்த்து, "பணம் என்பது எண்ணே!" எனத் தெளிந்துரைப்பது.
இங்கு, "எண்" என்கிற பகுதிக்கு வலிவு தந்து உச்சரிக்கிறோம்; அதனால், பணம் என்பது அதன் மீது பொறிக்கப்பட்டிருக்கிற எண்ணின் மதிப்பே என்கிற பொருள் கிடைக்கிறது.

(3) பணம் எண்ணடா பணம் பணம்! -- பணத்தைப் பற்றி எண்ணம் கொள் என்று இன்னொருவனைப் பார்த்து அறிவுரை சொல்வது.

ஊடகத் தமிழ் ஊடகத்திற்காக மட்டுமல்லாமல், பொதுவான தமிழ்க் கல்வி மற்றும் பயிற்சிக்கும் இலகுவானதாக அமைகின்றது என்பது கண்கூடு.

இங்கு காட்டப் பட்டுள்ள மொத்தம் ஆறு சூழல்களுக்கும் உகந்த படத்தைப் பக்கத்தில் போட்டு, நமது ஆரம்பக் கல்விப் பாடத்தில் ஒலி-ஒளிக் கல்வியாக தமிழ்ப் பயிற்சி தந்தோமேயானால், அவ்விதப் பயிற்சி, பிற வழிமுறைகளைக் காட்டிலும், கூடுதலான கல்விப் பயனை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

நமது அம்பராத்தூணியில், இவ்விதமான படங்களைப் போட்டு ஏற்கனவே தனித் தனிச் சூழல்களாக விளக்கியுள்ளேன். காண்க.





0 comments:

Post a Comment