Subscribe:

Pages

Sunday, May 15, 2011

வெற்றி அன்னையே! அம்மா!! நீவிர் தான் எங்களின் தாய்!!!



வெற்றி அன்னையே! அம்மா!! நீவிர் தான் எங்களின் தாய்!!!

அன்னையர் தினப் பரிசாக வந்தது  போல இருந்தது  தமிழகத் தேர்தல் முடிவுகள்! அம்மா மீண்டும் நம்மைப் பராமரிக்கும் அரியதொரு பொறுப்புக்கு அதிபதியாகிறார். 

ஜெயலலிதா மீண்டும் பதவியில் அமர்வது  - ஆட்சிமையை மீண்டும் துவங்கபோவது - என்ற ஏகப்பட்ட சடங்குகள் - தொடரப்போகின்றன.

நம் மக்களில் பெரும்பாலோர், இந்தச் சடங்குகளில் எவ்வித ஈடுபாட்டையும் காட்டவில்லை என்பது உறுதி. 

இந்தப் பரபரப்புக் களேபரம் அடங்கி,  இயல்பாய் வாழும் வாழ்வு என்று துவங்கும் என்றே  அவர்கள் ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறார்கள்.

ஜிகினா பளபளப்பில், மதியிழந்து, ஓட்டுப் பொறுப்பில் கோட்டை வீட்ட நிலை மீண்டும்  ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்துபவர்களே ஏராளம் பேர்.
 
தொடர்ச்சியாய் ஏறும் விலைவாசியால், தொடர்ந்து சரியும் வாழ்க்கைத்தரம், ரௌடி அரசியல், பாதுகாப்பற்ற நிலையில் அல்லாடும் இளம் பெண்கள், களைய முடியாத ஊழலுடன் கல்விக் கூடங்கள், முறைமைகள் இல்லாத வேலை வாய்ப்புக்கள், வசிக்க இயலாத வீடுகள், தாகம் தணிக்காத் தண்ணீர், போக்கிடம் இல்லாத முதியவர்கள், போக்கிரித்தனத்தில் இளைஞர்கள், நலிந்து போன கிராமங்கள், நரகமாய்ப் போய்விட்ட நகரங்கள், அம்மா இல்லாத வீடுகள், கும்பல் கூடும் ட்யூஷன், மக்கள் சங்கிலியாய் ரேஷன் கடை கியூ,------

நீளும் இந்தப் பட்டியல், நம் அன்னையின் கண்ணில் புலப்படட்டும்.

அவரது போன பதவிக் காலத்திற்கும், இப்போதைய பதவிக் காலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை  அன்னை அறிவாராக. மிகக் குறிப்பாக, அவருக்கு வயது முதிர்ந்திருக்கிறது. எனவே அவருக்கு விவேகம் முதிர்ந்திருக்க வேண்டும் என்று எவருமே எதிர்ப் பார்க்கிறார்கள்.

அவரது போன பதவிக்காலத்தைக் காட்டிலும், இந்தப் பதவிக் காலத்தில், நம் மக்கள் மிக அதிகமான பரிதவிப்புடன் காணப்படுகிறார்கள். அதிகமான இல்லல்களுடன்  ஒவ்வொரு மணிநேரத்தையும் எப்படியோ நகர்த்தி வருகிறார்கள்.  அவர்கள் உள்ளம் முழுவதும் காயம், அவர்கள் உடல்களில், தொய்வு, களைப்பு, பலவீனம், இயலாமை. அவர்களுக்கு எவ்விதத்திலும் தொல்லை தராதவாறு அம்மாவும் அவரது சகாக்களும் நடந்துகொள்ளட்டும்.

அம்மா இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு 
இணையாக அமரப்போகும் எதிர்க் கட்சிக்கு அரசியல் வரலாறு இல்லை. அனுபவம், இல்லை, முதிர்ச்சி இல்லை. 

ஆனால் இவரை ஒத்த ஜிகினா பளபளப்புடன், இவரை விஞ்சும், யதார்த்த  சூட்சுமத்தைக் கையாளும் திறமையுடன், வன்முறைக் கிளர்ச்சிகளுக்கு வித்திடும் நோக்குடன் வளைய வரும் தன்மை எதிர்க் கட்சியிடம் இருக்கிறது.  அம்மாவின் ஒரு சின்ன சொற்குற்றம் கூட மாநில அளவில்- தேசிய அளவில் - பெரும் கொந்தளிப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம்.

இந்நிலையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும், அரசியல்  நடத்தப் போகிறார்களா அல்லது போட்டா போட்டி போட்டுக் கொண்டு  ரகளை செய்யப் போகிறார்களா என்று மக்கள் மனக் கலவரத்துடன் காணப் படுகிறார்கள் என்பதை   அம்மா புரிந்து கொள்ளட்டும். 


அம்மா முன்னெப்போதும் இருந்திரா முதிர்ச்சியுடனும், பொறுமையுடனும், கண்ணியத்துடனும், கடமை நோக்குடனும், கவுரவத்துடனும், அரசை நடத்திச் செல்ல  வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அம்மா இதனைச்  செய்தாக வேண்டும்.

தமிழில் பேசாத முதல்வர் என்று முந்தைய  ஆட்சியில் பட்டம் வாங்கிகட்டிக் கொண்டத்தை, அம்மா மறந்து விடக் கூடாது, இன்று காலை கூட, காரில் இருந்தபடியே  நிருபர்களிடம் ஆங்கிலத்தில் பேசியதை உலகமே  கண்டது. தமிழால் பேசி மட்டுமே  தமிழக அரசியலில் சாதிக்க முடியும் என்பதை  காமராசர் முதல், அண்ணா  - கலைஞர் - ஈறாக -  நல்ல அரசியல் தலைமைக்கு எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. தமிழ்த்தாய் வாழ்த்துச் சொல்லி  மட்டுமே அரசு விழாக்கள் தொடங்க முடியும் என்று சட்டம் போடும் அரசின் தலைவி தமிழைப் புறக்கணிப்பதை  - தமிழன்னை பொறுக்கமாட்டாள் - மன்பதை மன்னிக்காது.     

தோழி நாடகமும், வளர்ப்புப் பிள்ளை சாகசங்களும், முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசுவதும், ஆடம்பரங்களும் விடுத்து, திடீர்ப் புரட்சி உடைகளும், அலங்கார அணிகலன்களும் தவிர்த்து,  படாடோபம் இல்லாது எளிமையாய் நடந்து கொண்டால் அன்னை அரியணைக்குப் பெருமை சேர்ப்பார். அன்றேல் நினைத்துக் கூடப் பார்க்க முடியா நெருக்கடிகளை அவரும், அவற்றால் தமிழக மக்களும் சந்திக்க நேரிடும்.

இன்று அன்னைக்குத்  தேவைப்படுவது: வேகமல்ல - விவேகம். உணர்ச்சி அல்ல முதிர்ச்சி.  முகஸ்துதிகள் அல்ல- இடித்துரைப்பு. 


 வாழ்வா சாவா என்கிற நிலையில் பற்பல குடும்பங்கள் தத்தளிக்கின்ற வேலையில்  காட்சிக்கு எளியவராய் - கடுஞ்சொல் அல்லாதவராக இருந்தால் மட்டுமே அன்னை மக்களின் மனதில் அமருவார்.  தமிழக மக்கள் மாற்றாந்தாயை நம்பும் விருப்பமில்ல்லாதவர்கள்.

 இன்று ஒன்று மட்டும் தெரிகிறது; மக்கள் முன்னைப்போல, பொறுமையுடன் அரசியல் வாதிகள் கூத்தை வேடிக்கைப பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.  சாது மிரண்டால் காடு  கொள்ளாது  என்பது  போல அவர்கள் ஆக்ரோஷத்துடன் கொதித்து எழுந்து விட்டால் --  அரசுகளில் பாடு அதோகதிதான்.

மக்கள் கொதித்தெழும் அந்தப் பிரளயம்  நியாயமானது என்றாலும் அது  வெகு பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் பதவியில் அமரப் போகும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்,  தன்னடக்கத்துடன், பணிவுடன், தமிழக மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்பது அவர்களது தலையாய கடமை. சொல்லப் போனால் மக்கள் முன்னே இவர்கள் இரந்து பெற்ற ஓட்டுக்களால் மட்டுமே இவர்களுக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது!!  இது மக்கள்  போட்ட "பிட்சை " என்பதனை இவர்கள் இருவரும் கணந்தோறும் எண்ணிப் பார்க்கட்டும். 

ஜெயலிதா என்றால், அதர்மத்தை வென்ற அன்னை என்பது பொருள்.
அம்மா தனது  பெயரையும் தமிழகத்தின் பெயரையும்  காப்பாற்றுவாராக!

விஜய காந்த் என்றால் வெற்றி விரும்பி என்று பொருள். ஐயா!! உங்கள் பெயருக்கேற்றாற் போல் நீங்கள் இயங்கி வருவதை மக்கள் அறிவார்கள்!

நினைத்ததைச் சாதிக்கும் திறன் படைத்த நீங்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றவாறு, வன்முறைக்கு வித்திடாத அரசியலையும், ஆளும் கட்சிக்கு பலமாய்  இருந்து, நல்ல பல செயல் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தை உயர்த்துவதை  மட்டுமே நினையுங்கள்.  முதல்வராக வேண்டும் என்ற உங்கள் உள் நினைப்பை மக்கள் அறியாதவர்களா என்ன?

ஆட்சிமைப்பொறுப்பில் வருவது  பெண் என்பதில் உமக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. உம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் அவர் மூத்தவர் என்பது அடிப்படையாகும்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாரதியின் வழி வந்த நீங்கள், உமது பொறுப்பை நழுவவிடமாட்டீர்கள் என்று தமிழக  மக்கள்  எதிர்ப்  பார்ப்பது இயல்பே!!  உமது சொல், சிந்தை, செயல் இவை மூன்றிலும் இறுக்கத்தை விடுத்து,  இணக்கத்தை இணைத்து  மக்கள் விரும்பியாக நீங்கள் உருமாற்றம் - உளமாற்றம்  அடைய  வேண்டும். தலைவனாக நடிப்பதற்கும், தலைவனாக நடப்பதற்கும் லட்சக்கணக்கான வித்தியாசங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறியாதவரா  என்ன?


தமிழகம் தரணியில் தனிப்பெரும் கவுரவம் பெறுவதற்கு ஜெயலலிதாவும் விஜயகாந்துமான நீங்கள் இருவரும் பொறுப்பேற்று  நடப்பீர்களாக!!

வாழ்க தமிழகம்!!        


   

 

0 comments:

Post a Comment