Subscribe:

Pages

Friday, August 12, 2011

கருப்பச்சியின் சுயம் வரம்

கருப்பச்சியின் சுயம் வரம்



இருள்! இருள் தான் எனது வாழ்க்கை!!
என் வாழ்க்கைப் பிரதேசம் முழுவதுமே இருள் தான்!!
இருள் தான் எனக்குத் தோழி, துணை, உறவு எல்லாமுமே!!

என் பெற்றோர் இருளில் சொர்க்கம் தேடித் தோற்ற நேரம்
தோல்வியின் மொத்தவடிவாய் இருளில் உருவானேன்!!
என் பிறப்பைக் காணவிழையாமல் வெளிச்சம் ஓடி ஒளிந்த பின்னர்
ஒரு இரவில், இருளில் பிறந்து தொலைத்தேன்!!
அன்று நிலவுக்கும் கூட விடுமுறை!!

"அவள் எப்படியிருப்பாள்?" என எவரேனும் கேட்டால் -
"தொட்டுப் பொட்டுவைக்கும் கருப்பு" என எவர் வாயிலும்
பட்டென பதில் வரும்; தோலும் இருள் உண்ட
நிலக்கரிப் பேதை! எனக்குள் வைரம் உண்டு;
வைராக்கியமும் உண்டு; ஆனால்
வெளிச்சத்திற்கு நான் வைரி என்பதால்
வெளியாருக்கு நான் வெறும் துரும்பு!!
தோலுக்கே மதிப்பு தரும் ஈனர் - இருட்டில்
மட்டும் மேயத் தேடினர் என் மேனி!!

தெய்வம் கூட எனக்கு இருட்டு தான்!!
ஒரு நாள் தெய்வத்தைக் காணக் கோயிலுக்குப் போனேன்!!
பெயர் தெரியாத கோயில் -- பழைய கோயில்
சுற்றிலும் ஒருவரும் இல்லை!!
என் குறையைச் சொல்லியழக் கருவறை நோக்கி ஓடினேன்
என் வரவைப் பொறுக்க மாட்டாமல் அங்கே
எரிந்து கொண்டிருந்த ஒரே அகலும் அணைந்தகன்றது
மீண்டும் இருள்! இருளே அவனது ஏற்பாடு!!
எக்கணமும், எங்ஙனமும் இருள் வழியே ஏற்றேன்

இந்த இருட்டுத் தேவன் என்னைத் திகைக்க வைக்கிறான்!
திணற வைக்கிறான்!! திண்டாட வைக்கிறான்!!
ஆக, என் வானம் முழுவதும் இருள் தான்!!
ஒரு நாள் அபூர்வமாய் ஒரு நட்சத்திரம் வெளிப்பட்டது!!
ஆவல் மீதுற ஓடினேன் அதை ஆலிங்கனம் செய்ய
நான் நெருங்க, அது விலக, அது கடைசியில் ஓடி மறைந்து விட்டது
மீண்டும் இருள்! இருளே ஏகாந்தம்!!
இந்த இருட்டுப் பாதையில் குருட்டுப் பேதையாய்
தடவித் தடவி நடந்து விழுந்து
தள்ளாடித் தடுமாறி ஜீவித்துக் கொண்டிருக்கிறேன்!!
உடலிலும் உள்ள்ளத்திலும் ரத்தப் பாளங்கள்
அந்தக் குருதிச் சிதறலால் என் இருட்டுப் போர்வையில்
சிவப்புப் பட்டைகள் கயிற்றடித்தான் மேனி போல
வேதனை தாங்காமல் கதறி அழுதேன்!!
என் கண்ணில் அக்கினிக் கசிவு!!

இருளின் இந்த ரோதனை தாள வில்லை!
வெளிச்சமும் என்பால் வந்தபாடில்லை
போகவும் வரவும் போக்கிடம் இல்லை
"புறம்போக்கு" எனும் பெயர் வேண்டேனாதலால்
என் உயிரை எரித்து அந்த ஒளியிலே
இருட்டை விரட்டத் தொடங்கினேன்!
என் குருதியைப் பூசிப் பூசி கருப்பை
வண்ணமாக்கலானேன் !!
"விட்டேனா பார்"உன்னையென!!
இருட்டை மிரட்டினேன்!!
அவனோ விடாக்கொண்டனாய்
"திமிர் தண்டி" பண்ணுகிறான்!!
உன்னை நான் விடுவதா? என
ராஜபார்வை பார்க்கிறான்!!
அவனிடம் நிபந்தனை இல்லாமல்
சரணாகதி அடைவதொன்று தான் வழி!!

அது கிடக்கட்டும் -

எனது இத்தனை முயற்சிக்கும் இருளே
மூலாதாரமென்பதால், இருளே எனக்கு வேதம்!!
வாழ்வின் நிர்வாணத்தைப் புரிய வைத்ததனால்
இருளே எனக்கு போதிமரம்!!
"வெளிச்சம் போட்டு" அவலங்களைக் காட்டியதால்
இருளே என் மாயக்கண்ணாடி !!
காலம் தப்பாது உடன்பிறந்து வருவதால்
இருளே எனது பஞ்சாங்கம்!!
நகத்திலும் என்னை நாருரிக்க வைத்ததால்
இருளே எனது ஆற்றல் !
பதப்படுத்தி என்னைப் படிய வைத்ததால்
இருளே எனது ஆசான்!!

இருட்டுத் தேவனே! இனியும் நீ
குருட்டாம் போக்கில் விரட்டாதே!
கண்ணாம்பூச்சி காட்டாதே!
இனியும் நான் உனக்காய் ஓடப்போவதில்லை!!
நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்!!
எனக்கும் உனக்கும் பத்துப் பொருத்தம்!!
எங்கும் எப்போதும் என்னுடன் இணைந்து
நீ வருவதால், நீயே என் துணைவன்!! பேசாமல்
என்னை மாலையிட்டு மனைவியாக்கிக் கொள்!!

நீயும் இருள் - நானும் இருள்
இருளும் இருளும் இணைத்து
ஊழிப் பேரொளியை உண்டாக்குவோம்
ரெட்டிப்பிருட்டின் சங்கமத்தில்
ரெட்டைக் கழிவின் கணிதத்தில் - என்
மணிக்குடம் பால் பிடிக்கட்டும் - முலை நெகிழட்டும்!!
உன்னால் என் கால்வழி சூரியன் புறப்படட்டும்!!

அவ்வைமகள்












0 comments:

Post a Comment