Subscribe:

Pages

Sunday, March 13, 2011

கட்டிடத்தொழிலாளர்களின் கடின வாழ்வு


கட்டிடத்தொழிலாளர்களின் கடின வாழ்வு

ஒவ்வொரு தொழிலும் ஒரு வகை; எந்த ஒன்றிலும் சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. குடும்பமாகக் களத்தில் இறங்கிவேலை செய்து கைநிறையக்கூலி வாங்கினாலும் ஒன்றும் இல்லையெனும் கதையாகக் கட்டிடத்தொழிலாளர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வாழும் நிலைபற்றிய கவிதை

கட்டிடக் கட்டிடக் கட்டிடமாம் அதிலொவ்வொரு
கட்டமும் கட்டமே தான்
கட்டுகள் உள்ளவர் கட்டளைக்குக்
கட்டுப்பட்டவர் கட்டிடும் கட்டிடங்கள்

கட்டிடும் கட்டிடம் எத்தனையோ சொந்தக்
கட்டிடம் என்றிடக் கொட்டிலில்லை
கட்டங்கள் கட்டங்கள் கட்டங்களாய் அவர்
கட்டமும் நட்டமும் கூடவரும்

கட்டிதட்டிக்கிளப்பிடும் ஆணுடனே
கட்டிய ஏரினில்மாடெனப்பெண்ணிருக்கும் அவன்
கட்டியதாலிக்குக் கூலியென்றோ பிள்ளைக்
கட்டுத்தட்டுடன் நித்தமும்கூடக் கூடவரும்?

கட்டுத்தலையுடன் கொண்டவன் சாய்ந்திருக்கும்
கட்டுச்சோற்றுக்கும் கூட கேடிருக்கும்
கட்டிய சேலைக்கந்தலிலே காலில்
கட்டுடன் பிள்ளை படுத்திருக்கும்

கட்டுமேத்திரிக்கு அங்கே பாசம் வரும் முன்
கட்டணம் தந்திடத்தேடி வரும்
கட்டளை கட்டளை கட்டளையே அவள்
கட்டுப்படாவிடில் பட்டினியே!

கட்டிலும் மெத்தையும் தேவையில்லை
கட்டித்தொட்டிடும் ஆசைக்கும் பஞ்சமில்லை
கட்டிடம் கட்டிடும் வேளையிலும் அவர்
கட்டுடல் எண்ணுவார் குற்றம் இல்லை

கட்டுவேலைக்கு ஆலாய்ப்பறந்திடுவார்
கட்டுக்கூலியைச் சுளையாய் வாங்கிடுவார் துட்டுக்
கட்டினைக் கண்டதும் மாறிடுவார்
கட்டை சரக்குண்டு வீழுவார் மிச்சமில்லை

கட்டுதல் வாழ்க்கையென்றானதனால் சுயவாழ்வைக்
கட்டுதல் தேவையன்றோ? சிந்தனைச் சீர்படக்
கட்டுதலை முதல்வேலையென்றேயவர் கொண்டுவிட்டால்
கட்டங்கள் மாறுதல் பெற்றுவிடும்; சட்டங்கள் சாதகமாகிவிடும்

கட்டுமானத்தின் வருமானத்திலே அவர்
கட்டும் மானம் உயர்மானமென்றால்
கட்டுத்தொழிலாளர்கள் உய்யுவர் வாழ்வினிலே அவர்
கட்டுப்பாட்டுடன் வெல்லுவர் தாழ்வினிலே!





0 comments:

Post a Comment