கல்லும் முள்ளும் கண்ணாடித் துண்டும்
ஊசியும் ஆணியும் உருகிய தாரும்
எச்சிலும் குப்பையும் எரிபடு தணலும்
சாணமும் மலமும் சாக்கடை நீரும்,
வறுத்த மணலும் வழுக்குப் பாறையும்
கட்டாந்தரையும் களிமண் சகதியும்
பொசுக்கும் வெயிலும் ஒடுக்கும் பனியும்
பெருமழை வெள்ளமும் பெரும்புதைகுழியும்
குத்தியும் கிழித்தும் இரத்தம் கொட்ட
வீங்கி வழித்து துர்நீர் வடிய
வெந்து வதங்கி வறண்டு உலர
வழுக்கி விழுந்து அடிபட்டுக் கொண்டே
தள்ளாடித் தடுமாறித் தாங்கிக்கொண்டே
அங்குலம் அங்குலம் என்னும் அளவாய்
மெல்ல மெல்ல ஊர்ந்து தேய்ந்து
பிளந்த வெடிப்புகள் செந்நீர்த் தெளிக்க
பதிந்த பாதங்கள் குருதிக் கோலம்
அலைந்து திரிந்து அல்லலுற்று
கடந்த பாதை கடுமையாய் இருக்க
காலுக்கிங்கே செருப்பு வந்துவிட்டால்
அவ்வை மகள் (Dr Renuka Rajasekaran)
0 comments:
Post a Comment