Subscribe:

Pages

Thursday, June 9, 2011

யானை: பலத்தை விழுங்கும் பலவீனம்

யானை: பலத்தை விழுங்கும் பலவீனம்

நில விலங்குகளில் யானை தான் மிகப்பெரியது. 

"யானை பலம்" என்பார்கள் - பலத்தின் மிகப்பெரிய அளவாகும் இது,
 டிஸ்கவரி சேனலில் நான் பார்த்த குறும்படம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
அதே படத்தில், யானை பற்றிய பகுதி வந்தது.  கூட்டம் கூட்டமாகப் போவதும் - ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்வதும்,  குட்டிகளைக் காலுக்கு அடியில் இருத்திப் பாதுகாப்பதும், காலுக்கு அடியில் நின்று கொண்டிருக்கிற குட்டியைத் தொலைவில் ஒரு புலியோ, சிங்கமோ நோட்டம் விடும்போது -  போர்க்களத்தில் எதிரிகட்கு எதிராகப் படை வியூகம் அமைப்பதுபோல் பெரிய யானைகள் சட்டென நகர்ந்து  யானைக்குட்டி, நோட்டம் விடும் விலங்கின் பாரவையிலிருந்து மறையுமாறு செய்வதும் சிலிர்ப்பை உண்டாக்கின.  

குட்டிகளை, பெரிய யானைகள் பயிற்றுவிக்கிறக் காட்சி கண்கொள்ளக் காட்சியாக இருந்தது. கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும்போது, சேற்றில் குழம்பியுள்ள நீரை மேலாக உறிஞ்சிக் குடிப்பது எப்படி, நீரைக்  கலக்காமல், மெல்ல மெல்ல நீரில் முன்னேறி நீர்நிலையின் நடுப்பகுதியை அடைவது எப்படி என்றெல்லாம், குட்டிகளுக்குப் பயிற்றுவிக்கும் தருணங்கள் பதிவாகி இருந்தன. 

பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பதைக் குட்டிகள் கப்பெனப் பிடித்துக் கொண்டு அதே போன்று செய்யத் துவங்கிய காட்சியைப் பார்க்கும்போது, பேசாமல் ஒரு யானைக் குட்டியைக் கொண்டுவந்து வளர்த்துப் படிக்க வைக்கலாம் போலிருக்கிறதே என்று தோன்ற அதையும் வாய்விட்டுச் சொன்னேன். "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேன்னு சொல்லியிருக்காங்க; மொதல்ல ஒரு மணியை ரெடி பண்ணிட்டு அப்புறமா யானைக் குட்டியைத் தூக்கிட்டு வா" என்றான் என் மகன்.

"இங்க அமெரிக்காவில் யானை கிடைக்காது. ஒண்ணு நம்ம ஊர்லேந்து வரணும். இல்லேனா ஆப்பிக்காவிலேர்ந்து வரணும் -- சரி யானைகுட்டியை இந்த வீட்டுல எங்க வெப்ப? பெட்  லிஸ்ட்ல யானை இல்லையே! கம்யூனிடியில அனுமதிக்க மாட்டாங்களே!!"  - என் மகள்.

இதற்குள் வீடியோ விறுவிறுப்பாய் நகரப் பேச்சை நிறுத்தினோம்.

யானைக் கூட்டம் ஒன்று போகிறது. சிங்கம் ஒன்று வந்து சீண்டிப் பார்க்கிறது. பெரிய யானைகள் கண நேரத்தில் அந்த சிங்கத்தை மிரட்டி விரட்டி விடுகின்றன. போன சிங்கம் மீண்டும் வந்து சீண்டுகிறது - மீண்டும் பெரிய  யானைகள் ஒன்று சேர்ந்து துரத்துகின்றன - சிங்கம் ஓடிப் போகிறது.

நானிருக்க நீங்கள் கவலைப்படுவதா  என்கிற பாணியில், ஒரு வாலிப யானை  கூட்டத்தை முன்னே நகரவிட்டு, மேற்பார்வை பார்த்தபடி நகருகிறது.  

சிங்கம் போனதென்று நம்பி யானைகள் நகர ஆரம்பிக்கின்றன. யானைகளை நன்றாய் நகரவிட்டு - போன சிங்கம் மீண்டும் வந்து சீண்டுகின்றது - இம்முறை அது  வாலிப யானையைச் சீண்டுகிறது. அந்த வாலிப  யானைக்குப் பொல்லாத கோபம் வருகிறது. ஏற்கனவே இருமுறை வந்து சீண்டிப்போனத்தில் இரத்தம் கொதித்துக் கொண்டிருந்த வாலிப யானை அது.

சிங்கத்தை அது வீறு கொண்டு தாக்க, சிங்கம் படிப்படியாகப் பின் வாங்குகிறது.  
வாலிப யானை விடுவதாக இல்லை. இன்னும் இன்னும் முன்னேறி, சிங்கத்தைத் தாக்க முற்பட - சிங்கம் பின் வாங்க, போதுமான அளவு கூட்டத்திலிருந்து வாலிப யானை  விலகி வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட நிலையில், அந்த வாலிப யானையை  வெகு வலிமையோடு தாக்கிக் கொன்று தின்கிறது அந்த சிங்கம்.   

அந்நேரம் பின்னணியில் வந்த வாசகம், "தனக்குப் பின்னால் நடப்பதை அறியமுடியாத யானைகள்" "வாலிப யானையைச் சீண்டினால் சுலபமாய் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்த  சிங்கம்"

யோசித்துப் பார்த்தேன். சட்டென்று திரும்பிப் பார்ப்போம்; நமக்குப் பின்னால் யாரோ நின்று கொண்டிருப்பார்கள். இது நமக்கு எதேச்சையாய் நிகழ்வது போல் தோன்றினாலும். உண்மையிலேயே நமது பின் மண்டைக்குப் பின்னால் நடப்பதை உணர்ந்தறிந்து நம்மை  எச்சரிக்கை செய்யும் திறன் இருக்கிறது.  இந்தத் திறன்  யானைக்கு இல்லை.

எத்தனயோ பலம் இருந்தும் இந்த - சிறு பலவீனத்தால் யானைகள் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனவே! என  நான் எண்ணிக் கொண்டிருந்தேன்; மகள் கேட்டாள், "அம்மா! யானைக் குட்டியைத் தூக்கிட்டு வர்ற ஆசை இன்னமும் இருக்கா?"

"போயேப் போச்சு" என்றான் மகன். 





 

 
   



       



0 comments:

Post a Comment