Subscribe:

Pages

Wednesday, June 15, 2011

பொழுதுபோக்கு:காலத்தைப் பொன்னாக்குவோம் வாருங்கள்


பொழுதுபோக்கு: காலத்தைப் பொன்னாக்குவோம் வாருங்கள்   


பொழுதுபோக்கு எனும்போது நமக்குக்கிடைக்கும் உபரி நேரத்தைப்பயனுள்ள வகையில் கழிப்பது எனப்பொருள் கொள்ள வேண்டும்.

பயனுள்ளவகையில் பொழுதைக்கழித்தல் என்றால், மூன்று விஷயங்கள் நம் கவனத்திற்கு வரும். அதாவது பொழுதுபோக்கிற்காக நாம் எடுத்துக்கொள்ளும் வேலை (1) நமக்கு மனநிறைவையும் அறிவு வளர்ச்சியையும் தரவேண்டும்  (2) நாம் வாழும் சமுதாயத்திற்குப் பயன் தருவதாய் அமையவேண்டும் (3) நமக்கு,  கொஞ்சமேனும் பணவரவைத் தருவதாய் அது இருக்க வேண்டும்.
   
இன்றைக்குள்ள சூழ்நிலையில் இந்த மூன்று வழிமுறைகளையும், ஒருங்கே தருவது கழிவுப்பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை மீட்பதாகும்.

இதனை ஆங்கிலத்தில் ரீசைக்ளிங் என்பர்.

வீட்டுக்கழிவுப்பொருட்களிலிருந்து, வாணிப, மற்றும் தொழிற்கூடக்கழிவு வரை - பல்வேறுவிதமானக்கழிவுகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கின்றன.
இவற்றை நாம் ரீசைக்ளிங் செய்யவேண்டும் என்றால் பலதகவல்கள் தேவைப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக-

எவ்வாறானக்கழிவுகள் இவை - இவற்றின் தன்மை யாவை, இவற்றை எவ்வாறு பிரித்தெடுப்பது, அவ்வாறு பிரித்தெடுத்தப் பொருட்களிலிருந்து என்னென்ன செய்யலாம் என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் தேவைப்படுகின்றன.

இந்தத்தகவல்களை அறியவேண்டும் என்றால் இதற்கு நாம் அதற்குரிய காலநேரத்தைச் செலவழிக்கவேண்டியுள்ளது. பொழுதுபோக்கு நேரம் இதற்கு உகந்ததாகும்.

இண்டர் நெட் அல்லது இணையதள வசதி மூலம் இதுகுறித்தத் தகவல்களை அறியலாம் என்றாலும், நூலகத்தில் பல நூல்கள் உள்ளன. குறிப்பாகப் பொது நூலகங்களில் இவ்வாறான நூல்கள் நிறைய உள்ளன. நூலகத்திற்குச்சென்று இவற்றைப்படித்துக் குறிப்பெடுத்துக் கொள்ளுவது நல்லது. நூலகத்தில் உறுப்பினராகும் பட்சத்தில், சில புத்தகங்களை நூலகத்திலிருந்து வீட்டிற்கும் கொண்டுவந்து படிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வாங்கி வந்த புத்தகத்தைத் திருப்பித் தந்துவிட்டு வேறு புத்தகங்களை எடுத்துவந்து படிக்கலாம். புத்தகங்களைப்படிக்கும்போது பயனுள்ள இன்ன பிறதகவல்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புகிடைக்கிறது.

மேலும், சில தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், ரீசைக்ளிங் வகையில் பயிற்சிதருகின்றன; இப்பயிற்சிகளில் சேர்ந்து பயில நமது பொழுதுபோக்கு நேரத்தை ஒதுக்கலாம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பார்கள். ரீசைக்ளிங் பற்றி நாம் அறிந்து கொண்டவற்றைப் பிறருக்குச் சொல்லித்தர வேண்டும். நம்மையொத்த சிறுவர் சிறுமியர் ஒன்றுசேர்ந்து இயங்கினால் அது பார்க்க அழகாக இருப்பதோடு பெரியோரது பாராட்டுக்களையும் பெறும்.  இதற்கென, நமது வீட்டை அல்லது பள்ளியை மையமாகக்கொண்டு சிறுகுழுக்கள் அமைத்துச்  செயல்படலாம்.  

பிறருக்குச் சொல்லித்தருவதிலே எத்தனை ஆனந்தம் இருக்கிறது என்பதை இவ்வாறானப் பயிற்சிகளில் நாம் கண்கூடாகக் காணமுடியும். பயிற்சிமுடிந்த கையோடு ரீசைக்ளிங் செய்யும் செயல்பாட்டில் நாம் இறங்க வேண்டும். குழுக்களாகச்செய்யும்போது பலம் பெருகும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல நிறைய பணிகளைக் குறுகிய காலத்திற்குள் செய்யமுடியும். இதனால் மனிதஆற்றலை நாம் மேம்படுத்த முடியும்.

குப்பையிலிருந்து மாணிக்கம் என்பார்கள். ரீசைக்ளிங் முறையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடத்திலே நல்ல வரவேற்பு இருப்பதால்; அவற்றை அவர்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். எனவே மாணவர்களாகிய நாம் படித்துக்கொண்டே பணம் ஈட்டவும் முடியும்.

ரீசைக்ளிங்க் என்பது சுற்றுச்சூழல் மாசுபடுதலைக்குறைக்கும் ஒரு அணுகுமுறை என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நல்லதொரு வழி என்பதால் இதில் குழந்தைகளாகிய நாம் கவனம் செலுத்துவது நல்லது.  பொறுப்புள்ள குடிமக்கள் நாம் என்பதனை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.



ரீசைக்ளிங் எனும்போது இதில் நிறைய ப்ராஜெக்ட்க்ள் உள்ளன; குழந்தைகளாகிய நமது வயது, நேரம்,  ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டு எளிய ப்ராஜெக்ட்களைத்தெரிவு செய்து கொள்ளுவது நல்லது.

எடுத்துக்காட்டாக,  வீட்டுக்காய்கறிக் கழிவில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், தூக்கி எறியப்படும் பேனா மற்றும் பிற பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பொம்மைகள் தயாரிப்பது. பழைய துணிகளிலிருந்து, பைகள், பொம்மைகள், மிதியடிகள் செய்வது, தூக்கியெறியப்படும் அட்டைகள், தாள்கள், மரத்தூள், கொண்டு வாழ்த்து அட்டைகள் தயாரிப்பது,  ஆகியன நமக்கு ஏற்றவையாகும்.



கழிவாக வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் காகிதத் தகடுகளை க்ரோஷா என்று நாம் சொல்லும் நூல்பின்னல் மூலம் இணைத்து அழகிய திரைச்சீலைகளை உருவாக்கலாம். இவ்வகைப்பொருட்களுக்கு வெளி நாட்டிலே அதிக வரவேற்பு உள்ளது. நமக்குள்ள கற்பனைத்திறனைப்பயன்படுத்தி வசீகரமானதும் தரமானதுமான பொருட்களைத்தயாரித்தால் அதனை நல்ல விலைக்கு விற்கமுடியும். கணிசமான அன்னியச் செலாவணியையும் ஈட்டமுடியும். 

இவற்றையெல்லாம் சாதிக்கவேண்டுமெனில் அதற்கு நம் பொழுதுபோக்கு நேரத்தைச் செலவிடவேண்டும் என்பது அவசியமாகின்றது.



இன்னொருபடி மேலே சென்று ரீசைக்ளிங் பற்றி வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், போன்ற ஊடகங்களில் நாம் நிகழ்ச்சிகள் படைக்கலாம் - கட்டுரைகள் எழுதலாம். சமுதாயசேவையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள இது நல்லதொரு வாய்ப்பாகும்.

நம் வீட்டு வாசலில் ரீசைக்ளிங் கோலம் போடுவது ஒரு நல்ல விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்.

இவ்வாறு பயனுள்ள வகையில் நேரத்தை நாம் திட்டமிட்டுச்செலவழித்தோமேயானால்,நம் சின்னசிறு கைகள் ஒன்றிணைந்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதனைப் பெரியவர்கள் புரிந்து கொள்வார்கள், 

பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரத நாடு என உலகமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.



ஆதிரை (Sri Madhavi Rajasekaran)



  
  














 



0 comments:

Post a Comment