Subscribe:

Pages

Friday, June 10, 2011

கடுகுக்கு நேர்மூத்த துவரை உள்ளம்

கடுகுக்கு நேர்மூத்த துவரை உள்ளம்

சொல்லவரும் கருத்துக்களை எளிய எடுத்துக்காட்டுக்களுடன் தெளிவு படுத்துவது என்பது ஒரு கலை. இந்தக் கலையில் கைதேர்ந்தவர் பாரதிதாசன்.



எந்த ஒருவருக்கும் சமுதாயச் சிந்தனை - சமுதாய சேவை - என்பது கட்டாயத்தேவையான ஒன்று என்பதனை, "புதிய உலகம்" என்ற தனது தொகுதியில் "உலக ஒற்றுமை" எனும் பிரிவில் பாரதிதாசன் எத்தனை எளிமையாக எடுத்துரைக்கிறார் பாருங்கள்.     

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்பான்   
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் 
தெருவார்க்குக் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என்போனுள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்


நசுங்கினாலோ, வெடித்தாலோ மட்டுமே பயனாகும் கடுகு.
வெறுமனே அள்ளித்தின்றாலும் சுவைத்திடும் துவரை, ருசிதருவதொடு, பசியாற்றி, ஊட்டச்சத்தையும் வாரிவழங்கும் தன்மையது.    

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். ஒரு சிறு அளவு மட்டுமேயானாலும் கூட கடுகை வாயிலிட்டு உண்ணமுடியாது. பசியோடு எவரேனும் வந்தால், அவருக்கு,  துவரையை அள்ளித்தந்தால்,  அவரது பசிதீரும் -- கடுகை அள்ளித்தந்தால்? - எரிச்சலும் சினமும் தோன்றி,  பசித்துன்பம்  மிகும்.
தன் மனை - தன் மக்கள் - தன் செல்வம் எனும் சுயநல நெறியாளர்கள் சமுதாயத்தில் உடனடியாகவும் நேரடியாகவும், பயன்தர இலாயக்கற்றவர்கள். குறைந்த பட்சம் தான் வாழும் தெருவுக்கும், தான் வாழும் தெருவினர்க்கும் ஏதாகிலும் ஒரு நன்மையை - ஒத்தாசையை செய்ய இயலாத இந்தக் குடுமபஸ் தர்கள் வாழும் வாழ்க்கை வீணே!

எங்க ஊரு நல்ல ஊரு என்பதாக, தாம் பிறந்த மண்ணை நேசிப்பவர்கள், துவரையைப்போல், உடனடியாகவும், நேரடியாகவும் சமூகத்திக்கு இணக்கமும் இன்பமும் நிறைவும் தருவதான  பயன்தந்து, இல்லம் எனும் நான்கு சுவர்கள், சமுதாயத்தின் எல்லை அளவுக்கு விரிவதான   இசைவுடனும் இயல்புடனும் வாழ்வார்கள்.    

சமுதாயம் என்பது பயன் தரும் மரங்களின் தோப்பு. இத் தோப்பில் ஒன்றி இருக்க விழையாத - ஒன்றியிருக்கவியலாத --

எட்டிமரம் பழுத்தாலென்ன? ஈயாதார் வாழ்ந்தாலென்ன?

0 comments:

Post a Comment