ஒரு மணி நேரம்: சிறு கதை
மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்தில் கேத் சோப்பின் எழுதிய ஒரு மணி நேரத்தின் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர்: விக்ரமாதித்தன் (Adhithya Rajasekaran), நம் அம்பராத்தூணியின் திருக்குறள் வாசிப்பாளர்.
அவள் மென்மையானவள் இந்த திடீர் அதிர்ச்சியை அவள் தாங்கமாட்டாள் என்று உறவினர்கள், அவளுடைய கணவன் இறந்த துக்கச் செய்தியை வள்ளியம்மையிடம் நிதானமாக, பெரும் ஆரவாரமில்லாமல் வெளியிட்டனர்.
அவளுடைய சகோதரி சிந்தாமணி, பாதி வரிகளை விழுங்கி, குறிப்பினால் அவளுடைய கணவனின் மறைவை உணர்த்தினாள். அவர்களின் குடும்ப நண்பர் சிங்காரவேலனும் அங்கே நின்றுகொண்டிருந்தார். தன்னுடைய பத்திரிக்கைக்கு ரயில் விபத்தில் இறந்தவர்களின் பெயர்களை நிருபர் கொடுக்க, அதில் வள்ளியம்மையின் கணவர் கபிலனின் பெயரைப் பார்த்து முதலில் அதிர்ச்சியில் உறைந்தவர் அவரே! தன் பால்ய சிநேகிதனின் மகளான வள்ளியம்மையை குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வருபவர் சிங்காரவேலர். சுட்டிப்பெண்ணாய், குறும்பும், துள்ளலும், ஓட்டமுமாய் குழந்தைப் பருவம், கன்னிப் பருவம் என இருந்த வள்ளியம்மை, கல்யாணத்திற்குப் பிறகு நேரெதிர். பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டிலும் பொறுமைசாலி எனப்பெயர் எடுத்து, அடக்கமான பெண், இவளே எனும்படியாக அனைவரின் பாராட்டையும் பெற்றவள். கபிலன் ஏறக்குறைய இருந்தாலும் அதைப்பெரிதுபடுத்தாமல் அவள் குடும்பத்தை நடத்திப்போவதை அவர் அறியாதவரில்லை. “இந்த நல்லப் பெண் கட்டுக் கழத்தியாக மஞ்சள் குங்குமத்தோடு நெடுநாள் வாழவேண்டும்” என்று வேண்டுபவர் சிங்காரவேலர்.
நிருபர் சேதி கொண்டுவந்தாலும், இறந்தது கபிலன் தானா என்பதை ரயில்வே அதிகாரி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உறுதி செய்துகொண்டு அதன் பின்னரே, வள்ளியம்மையைக் காண அவசர அவசரமாக விரைந்தார்.
துக்கச் செய்தியைக் கேட்டதும், வள்ளியம்மையிடம் ஒரு வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. மற்ற பெண்கள் போன்று தேம்பித்தேம்பி அழவில்லை. தன்னுடைய சகோதரியை அணைத்துக்கொண்டு ஒரு முறை ஓ என்று அழுது விட்டு, சுவற்றில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சாவியைப்படக்கென எடுத்துக்கொண்டு மட மடவென மாடிக்குவிரைந்து, பூட்டைத்திறந்து, உள்ளுக்குள் நுழைந்து மாடிக்கதவை அடைத்துக்கொண்டு விட்டாள். இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் அவள் ஆர்ப்பாட்டம் செய்வாள் அல்லது துக்கத்தில் உறைந்து நிற்பாள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவளுடைய நடவடிக்கைகள் வேறு விதமாய் இருந்தன.
ஒரு வரவேற்பறை, ஹால், தனியறை, குளியலறை, கழிவறை எனக் கச்சிதமான மாடிப்பகுதி. குடி, சூதாட்டம், கூத்தி என - கபிலனின் சாம்ராஜ்யக் களம் அது. வேலைக்காரி போல் சுத்தம் செய்ய மட்டுமே இவளைக் கூப்பிடுவான். கபிலனின் அந்தப்புரம் - இனி இவள் வசம.
மாடி அறைக்குள் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள் வள்ளியம்மை. அக்கணம் அவள் தன்னுடைய உடம்பில் ஒரு புது உற்சாகத்தை உணர்ந்தாள். என்றைக்கும் திறந்திருக்கும் அந்த ஜன்னலிலிருந்து ஒரு மெல்லிய தென்றல் அவள் முகத்தினை வருடிச் சென்றது. பல நாட்கள் முன்பு குடுவையில் செருகி வைத்த மரிக்கொழுந்து துளிர் வாடாமல் இருப்பது புலப்பட்டது. . சமையலறை வாடையை மட்டுமே சுவாசித்த அவளது நாசிக்கு இன்று மழையின் மண் வாசம் சட்டென்று புலப்பட்டது. தன கணவனின் கட்டளைகளை மட்டுமே கேட்டுச் சலித்த அவளது காதுகளுக்கு, இன்று “அம்மா! காய்” என்று கூவிச்செல்லும் தள்ளு வண்டிக்காரனின் கூவல் புதுமையாகக் கேட்டது. தூரத்து தொழிற்சாலையில் ஒலிக்கும் மணியோசை அவளுக்கு அமுதகானம் போல் கேட்டது. தன்னைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிக் கூட்டம் சிறகடித்துப் பறப்பது போன்று உணர்ந்தாள்.
ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள். வானில் கரிய நிறம் நீங்கி, வெள்ளை நிற மேகங்கள் கண்டாள் தன்னை வரவேற்பது உணர்ந்தாள். என்னே! ஒரு மகிழ்ச்சி. யாரிடமும் சொல்லமுடியாத ஒரு நெகிழ்ச்சி.
கட்டிலின் மீது தாறுமாறாய்க் கிடந்த விரிப்பு, தலையணை, போர்வை என அனைத்தையும் எடுத்துக் கீழே வீசினாள். வெற்றுக் கட்டிலில் படுத்து, தன இரு கைகளையும் மடித்துத் தன்னுடைய சிரத்தின் கீழ் வைத்து கற்பனையில் மூழ்கினாள். சிவனுக்கு நஞ்சு தொண்டையில் நின்றது போல, வள்ளியம்மையின் சோகம் தொண்டயுடன் நின்றது. சிறுபிள்ளையாக இருக்கும்போது, தூங்குவதற்குக்கூட அழது ஆர்ப்பாட்டம் செய்தவள், இன்று தன கணவன் இறந்து விட்ட செய்திகேட்டு ஒரு உணர்வுமில்லாமல் இருந்தாள்!
சிறு வயதில் கட்டுப்பாடுகள் இல்லாமல் வளர்ந்தவள், கட்டுப்பாடுகளே வாழ்க்கையாக மாறி ஒன்றல்ல இரண்டல்ல பதினேழு ஆண்டுகள் கொத்தடிமையாக வாழ்ந்ததை உணர்ந்தாள். இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்பதாகப் போன வாழ்க்கையை எண்ணியபடியே வானத்தை உற்று நோக்கிகொண்டிருந்தவள், திடீரென, பல வண்ண வானவில் தோன்றி, தன்னை வெளிச்சத்திற்கு அழைப்பதைக் கண்டாள்.
பல நாட்களாக காத்துக்கொண்டிருந்த ஒன்றை இன்று திடீரென அடைந்துவிட்டது போன்றதொரு உணர்வு அவளுக்குள் எழுந்தது. ஆனால் அந்த “ஒன்று” எது? அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை அவளிடம். ஆனால் அது தன்னுடைய உயிரோடு உயிராகக் கலந்த ஒன்று என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு.
சிறுவயதில் அவள் கேட்டக் கதையில் நிகழ்ந்தது போல, வானத்திலிருந்து ஒரு அதிசயக் கம்பளம் அவளை வேறொரு உலகத்திற்கு கூட்டிச்செல்வதற்காக அவளை நோக்கிப் பறந்து வருவது போல அவள் உணர்ந்தாள், முல்லை அரும்புகள் குப்பென மலர்ந்து அந்த அறை முழுவதிலும் வியாபித்தது போன்று அவள் உணர்ந்தாள்.
அவளுடைய மார்பகங்கள் மாறி மாறித் துடித்தன. அவள் காத்துக்கொண்டிருந்த ஒன்று அவளை நெருங்கிவிட்டதைப்போல உணர்ந்தாள். அதை வரவேற்றுத் தனதாக்கிக்கொள்ள அவளுடைய மனதைத் தயார்படுத்திக் கொண்டாள்.
உழைப்பு -- உழைப்பு -- உழைப்பு ஒன்றே வாழ்க்கையென --- உழைத்துக் களைத்து வறண்டு கிடந்த தனது இரண்டு கைகளையும் கண்டு வெட்கித் தலை குனிந்தாள். செருப்பாலும், கொம்பாலும், துடைப்பத்தாலும் தான் வாங்கிக்குவித்த தேக அடையாளங்களை எண்ணிப் பார்த்தாள். கண்கள் பிதுங்குமளவுக்கு மென்னியைப் பலமுறை கபிலன் நெறித்ததால் கூம்பிப்போன நெஞ்சுக்குழியைத் தடவி விட்டுக் கொண்டாள்.
குறையைத் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு, ‘கொட்டி மாடு’ என்று சொல்லிச் சொல்லி அவன் எட்டி எட்டி உதைத்த வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அந்த மறக்கமுடியாத தருணத்தில், அவளுடைய நா அவளுடைய அனுமதி இல்லாமலே, சில வார்த்தைகளை உதிர்த்தது, “விடுதலை!விடுதலை!விடுதலை!”
யாருமே இல்லாத அந்த அறையில் அவளுடைய கண்கள் யாரையோ உற்றுப் பார்த்தபடி இருந்தன. அவளது உடம்பில் ரத்த ஓட்டம் பல மடங்கு அதிகமானது. இருதயம் வேகமாய்த் துடித்துக்கொண்டே இருத்தது. அவளின் தலைக்குப் பின்னால் ஒரு ஒளி தோன்றியது, அது உடல் முழுவதும் பரவி அவளை சிலிர்க்க வைத்தது. அவளுடைய நரம்பு நாடிகளில் ஒரு புத்துணர்ச்சி பரவியது. .
தன்னை ஆட்கொண்டுள்ள இந்த புதிய உணர்வையும், அதனுடைய வலிமையையும் எண்ணி அவள் மெய் மறந்தாள். இது சாதரணமான ஒரு நிகழ்வல்ல என்பதை உணர்ந்த அவள், அதை மனதாரப் போற்றிப் புகழ்ந்தாள்.
நகராத கைகள், பொலிவில்லாத முகம், பஞ்சடைந்த கண்கள் எனும் தோற்றத்தோடு காணப்படும் இறந்தவரைப் பார்த்தால், பொதுவாக எவருக்கும் கண்ணீர் பாய்ந்தோடும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், தன்னை என்றைக்குமே அன்போடு பார்க்காத முகம், அரவணைக்காத கைகள், அடிமை என்றே நினைத்துவிட்ட மனம் - இதுதான் இன்று அவள் முன்னே ஒரு உணர்வும் காட்டாத ஒரு உயிரற்றப் பொருளாக காட்சியளிக்கப் போகிறது. “அந்த ஜடத்தைப் பார்த்து நானும் எந்த உணர்வையும் காட்டக்கூடாது” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
“ஆனால் இங்குள்ள கூட்டத்திற்காகவேனும் கொஞ்சம் அழவேண்டும்.” என்று சொல்லிக்கொண்டவள் “பிணம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று முடிவு கொண்டபடி சொல்லிக் கொண்டாள்
அதே கணம் அவளுடைய எண்ணங்களை முன்னோக்கிச் செலுத்தினாள். வரப் போகின்ற வருடங்கள் அனைத்தும் அவளுடயதே, அவளிடமிருந்து அதைப் பறிக்க எவருமில்லை. இரு கரங்களையும் நீட்டி அந்த தருணங்களை வரவேற்றாள்.
வரும் காலங்களில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தனிமையே அவளுடைய வாழ்க்கை. ஆனால் தனிமையிலும் ஒரு இனிமை, ஏனெனில் அது அவளுடைய வாழ்க்கை. அதைப் பறிக்க யாருமில்லை. அணையில்லா நதிபோல தான் நினைத்ததைச் செய்ய அவளுக்கு சுதந்திரம் உண்டு. பிறரின் அடிமைப் படுத்தும் ஆசைகளுக்கு இனி அவள் ஆளாகவேண்டும் என்பதில்லை. அடிமைப்படுத்தும் குணம் படைத்தவர்கள், அதை ஒரு குற்றமாக கருதாமல் அதை மரபாக கருதுவதை அவள் வெறுத்தாள்.
ஓரிரு குழந்தைகளாவது பிறந்திருக்கலாம். சொந்தம் எனச் சொல்ல! ஆனால் அவை அவனையே உரித்து வந்திருந்தால் எத்தனைக் கொடுமையாய் இருந்திருக்கும்? கொட்டி மாடு என எட்டி எட்டி உதைத்தானே அதுவே மேல் என்றல்லவா ஆகியிருந்திருக்கும்?
இத்தனைக் கொடுமைக்கிடையிலும் கபிலனை சில நேரங்கள் காதலித்ததை. அவளால் மறுக்க முடியவில்ல, ஆனால் அவனைக் காதலித்ததை விட அவனை வெறுத்த நேரங்களே அதிகம். பட்ட கஷ்டத்திகுப் பரிசாய் அவள் தற்போது அடைந்துள்ள பேரானந்தம் அளவிடமுடியாதது. எனவே கபிலனை அவனது மரணத்தோடு மறந்து விடுவது என முடிவெடுத்துவிட்டாள்.
“விடுதலை! உடலுக்கும் உள்ளத்துக்கும் இன்று முதல் விடுதலை!” என்று தனக்குள் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டாள்.
மாடியின் கதவை அடைத்துக்கொண்டு உள்ளே சென்றவள் என்ன செய்கிறாள் என்றறியாமல் வெளியில் உள்ளவர்கள் பயந்துபோயினர். சிந்தாமணி பதறிப்போய் கதவைத் தட்டினாள். பதிலேதும் வராததால், கதவின் சாவி துளையில் சிரமப்பட்டுப் பார்த்தாள். தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்று பதறி “வள்ளியம்மை! என்ன செய்கின்றாய் நீ! உன்னை வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன் எனக்காக கதவைத் திற !” என்று வேண்டினாள்.
உள்ளிருந்து வள்ளியம்மை “நான் நன்றாகத்தான் இருக்கின்றேன்” நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கடுமையாகப் பேசினாள்.
உள்ளே நாற்காலியில் அமர்ந்த படியே வரப்போகின்ற மழைக் காலம், பனிக் காலம், இலையுதிர்காலம் மற்றும் வெயில் காலங்களில் தான் என்ன செய்வது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பின், தானாக வந்து கதவைத் திறந்து கண்ணீர மல்க தன்னுடைய சகோதரியின் கரம் பிடித்தபடியே, மெதுவாகப் படிக்கட்டுகளில் இறங்கி, சிங்காரவேலனை நோக்கி நடந்தாள். அவரிடம் தனது கணவனின் மரணத்திற்குப் பிறகு, தான் எவருடனும் செல்லாமல், அந்த வீட்டிலேயே தனியாக வாழ்வதையே விரும்புவதையும், . எவரும் இவ்விஷயத்தில் மாற்றுக் கருத்தைச் சொல்லி அவளை நிர்ப்பந்திக்காதபடி பார்த்துக்கொள்ளுமாறு அவரிடம் என்று சொல்லி வைத்துவிடவேண்டும் என்று நினைத்தாள்.
சிங்காரவேலனை நோக்கி அவள் நடந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் யாரோ ஒருவர் வீட்டின் வெளி கேட்டை, மெதுவாகத் திறந்து, விட்டிற்குள் நடந்து வந்தார். அவர் வேறு யாரும் இல்லை, கபிலன் தான்!!
வழக்கம் போன்று, அதே படாடோபம், மைனர் செயின், வலக்கையில் வாட்ச், கூலிங் கிளாஸ், சிக்கென்ற டி ஷர்ட் அணிந்து உள்ளே வந்த கபிலனை வள்ளியம்மை அப்படியே ஆச்சரியத்தோடு பார்த்தாள். எத்தனை அக்கிரமம் செய்தாலும், எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளாத கபிலனின் ராசி அவளுக்குத் தெரியும். விபத்து நடந்த இடத்தில் அவன் இல்லை - தப்பி விட்டான் என்பது ஊர்ஜிதமானது. அவனிடம் கேட்ட போது, அவ்வாறு ஒரு விபத்து நடந்தது என்பதைப் பற்றி கூட அறியாமல் இருந்தான். அனைவர் கண்ணிலும் இருந்த சோகத்தைக் கண்டு, விஷயத்தைப் புரிந்து ஏகத்தாலமாகச் சிரித்தான்.
வள்ளியம்மையின் காலுக்குக் கீழே பூமி சரிந்தது. அவளின் பின்மண்டையில் கிளம்பி நின்று கொண்டிருந்த ஒளி அவளது கண்களின் வழியே வெளியேறியது ஆம்புலன்ஸ் விரைந்தது, மருத்துவர்கள் குவிந்தனர். ஆனால் அவர்களால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தன கணவன் உயிருடன் திரும்ப வந்ததின் இன்ப அதிர்ச்சி தாள முடியாமல் வள்ளியம்மை இறந்து விட்டதாக முடிவு செய்தனர்.
0 comments:
Post a Comment