
உலகு வியக்கும் தமிழன்: கே.ஆர். ஸ்ரீதர்
உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தருகிறவர்கள் உலகில் வாழும் கடவுள்களாகிறாகள். இவ்வரிசையில், இன்று உலகமே இவரை அண்ணாந்து பார்க்கிறது. இவர் தருகிற வரத்திலே தான், இப்புவியில் எதிர்வரும் காலங்களில் நாம் எதிர் நோக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்கிற நம்பிக்கை அனைவரது மனத்திலேயும் உருவாகியுள்ளது.
மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து விட்டது — உலகம் அழியப்போகிறது என்று பலபேரும் நெகடிவாக எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலே, இவ்வுலகத்திற்கு அழிவே இல்லை; நாம் சர்வ சௌக்கியமாக வாழமுடியும் என்று உறுதியாகக்கூறும் இந்த மனிதர் புவியில் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும் நாம் வசதியாக வாழமுடியும் என்று தைரியமாகக் கூறுகிறார். உலகுக்காக இவர் உருவாக்கியிருப்பது எரிபொருள் பெட்டிகள், இவற்றால் மின்சாரம் பெறலாம். அதுவும் சுற்றுச்சூழல் கேடு இல்லாத தூய்மையான மின்சாரம்.
தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!! என்று நம்மை எழுச்சியுறச்செய்யும் ஸ்ரீதர், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இளம் பொறியியல் முடித்துவிட்டு, அமெரிக்காவிற்கு வந்தவர; இலினாயிஸ் பல்கலைக் கழகத்தில், முதுநிலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டு அரிசானா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக, நாசாவின் நிதி உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கான திட்டப்பணிகளைச் செய்தவர்.
என் கடன் பணிசெய்துகிடப்பதே எனும் பிரபல வாசகம் இவருக்காகவே பிறந்தது எனலாம்.
உழைப்பு என்றால் இப்படி அப்படி என்றிராமல் இவர் கொடுத்திருக்கிற உழைப்பு மண்ணில் இவர் போல் உழைத்தவரில்லை எனும் படியானது. ஊழையும் உப்பக்கம் காண்பர் என்று வள்ளுவன் சொன்னானே அதன்பொருள் என்னவென்பதனை ஸ்ரீதரிடம் காணமுடியும். ஒற்றை மனிதனாக எழுந்து, விடாப்பிடி உழைப்பினால் மட்டுமே இன்று உலகு முழுவதிலும் “பேட்டன்ட்” வாங்கி, ஜாம்பவான்கள் என்று சொல்லக்கூடிய கூகிள், ஈபே, வால்மார்ட், பெடெக்ஸ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, தான் உருவாகியுள்ள தொழில்நுட்பத்தால் மின்வசதி வழங்கி உலகில் ஒரு மாபெரும் ஆக்கப்புரட்சியை அமைதியாக நிகழ்த்திக் காட்டியுள்ளார் ஸ்ரீதர்.
சவால்கள் நிறைந்த துறையில், குறைகூறவும் தூற்றவும் பலரும் இருக்கின்ற சூழலில், தனது விவேகத்தையும் தன்னம்பிக்கையையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு இம்மனிதர் உறுதியாக முன்னேறி வந்திருக்கிறார். வேறு எவரேனும் இருந்திருந்தால் இந்நேரம் காணமல் போயிருப்பார்கள்.
சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக மாற்றிக்காட்டியிருக்கிற ஸ்ரீதரை இவ்வுலகின் ஒளிவிளக்கு எனலாம். ப்ளூம் என்றால் மலர்ச்சி—வளர்ச்சி, ஸ்ரீதரது நிறுவனத்தின் பெயர் ப்ளூம் எனர்ஜி. பெயருக்கேற்றார்போல் இந்நிறுவனம் வளர்க வளர்க என வாழ்த்துவோம்.
1 comments:
உலகமே திரும்பி பார்த்த தமிழன் திரு.கே.ஆர். ஸ்ரீதர் அவர்களின் கண்டு பிடிப்பை நாம் அனைவரும் பாராட்டலாம்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
எல்.தருமன்
18.பட்டி.
Post a Comment