மண மனம்
மாலையிட்டுக் கூடவில்லை
தாலி கட்டி ஆளவில்லை - வீடு
கட்டி வாழவில்லை இல்லையே - நல்ல
ஜோடி இங்கு சேர்ந்து போனதிங்கு உண்மையே!
மேளம் கொட்டி ஊதவில்லை
தாளமிட்டுப் பாடவில்லை - ஊரைக்
கூட்டிச் சொல்லவில்லை இல்லையே - ஒரு
திருமணம் தான் நடந்து போனதுண்மையே!
சாத்திரங்கள் பார்க்கவில்லை
சீதனங்கள் கோரவில்லை - இங்கு
காத்திருக்க நேரமில்லை இல்லையே நாங்கள்
சேர்ந்திருக்கப் போவதிங்கு உண்மையே
கேலி கண்டு அஞ்சவில்லை
தோல்வி கண்டு துஞ்சவில்லை - போலி
வாழ்க்கை நாடவில்லை இல்லையே - இன்று
போல என்றும் இணைந்து நிற்போம் உண்மையே!
துன்பம் கண்டு துவளவில்லை
தூற்றல் கண்டு மருளவில்லை - உண்மைக்
காதலென்றும் சாவதில்லை இல்லையே - பெரும்
சாதனையைப் படைத்து விட்டோம் உண்மையே!
அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)
0 comments:
Post a Comment