Subscribe:

Pages

Sunday, June 12, 2011

மாமா என்றொரு ஆங்கில வார்த்தை

மாமா என்றொரு ஆங்கில வார்த்தை 

எவரொருவருக்கும் தாய் போல்  ஒரு உறவை  எவராலும் தர முடியாது. மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவா போகிறோம் என்று, ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமக்கிடையே பேதமிருப்பினும்,  அவற்றை ஒதுக்கித் தள்ளி ஒற்றுமையுடன் வாழ்வது கண்கூடு. அன்பென்றாலே அது அம்மா தான். மற்ற உறவுகளெல்லாம் சும்மாதான்!!    

மாமா, மாமா என்று தனது  அன்னையைச் சுற்றிவந்தபடி வளர்ந்துவந்த சம்மர் எனும் இந்தப் பெண்ணுக்கு அன்னையே கேடு விளைவிக்கிறாள். 
அம்மாவைத் தேடி வீட்டுக்கு வரும் அம்மாவின் பாய் பிரண்ட், பத்து வயதேயான  சம்மரிடமும் நயமாக நடந்து கொண்டு மெல்ல மெல்ல அவளையும் தகாத உறவுக்கு அடிமையாக்கிவிடுகின்றான். போதைப் பொருட்கள் ருசிகாட்டப் படுகின்றன. பாலியல் உறவோ - போதைப்  பொருட்களோ -  இவையெல்லாம் சம்மருக்குத் தண்ணி பட்ட பாடு. சம்மரின் மாமா இவற்றுக் கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை - உடந்தையாக இருக்கிறாள் . 

குற்றங்கள் செய்வதில் கில்லாடியாகிறாள் சம்மர்.  தொடர்க்  குற்றங்கள் - திருடுவது - வீடு புகுந்து கொள்ளையடிப்பது - கிரெடிட் கார்ட் மோசடி என - அடிக்கடி ஜெயிலுக்குப் போவது என்பது அவளுக்கு வாடிக்கையாகிப் போன ஒன்று.       



பதினைந்தே வயதாகும் அவளுக்கு சமீபத்தில் ஒரு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தை பால் குடிக்க மறுக்கிறது - நீர் குடிக்க மறுக்கிறது - தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அந்தக் குழந்தை பராமரிக்கப் பட்டு வரும் நிலையில் - அக்குழந்தைக்கு இரத்தப் பரிசோதனை நடத்துகிறார்கள். திடுக்கிடும் தகவல் கிடைக்கின்றது. கர்ப்பமாய் இருக்கும்போது சம்மர் சாப்பிட்ட போதைமருந்துகள் யாவும் - கருவில் வளர்ந்து வந்த சிசுவிற்கும் போக   - இக்குழந்தை பிறப்பதற்கு முன்னரேயே போதை மருந்துக்கு அடிமையாகி விட்டது.  இரத்தத்திற்குள் நேரடியாக போதை மருந்துகள் கலந்து வந்த நிலையில் அக்குழந்தைக்கு போதைமருந்தே உணவாகச்  செயல்பட்டு வந்திருக்கிறது. 

இப்போது, பிறந்து வெளிவந்து விட்டாதால் தாயின் போதை சப்ளையிலிருந்து பிரிக்கப் பட்டு அக்குழந்தைக்கு, போதைக்காக அலையும் வெறி நிலை ஏற்பட்டுத் துன்பப் படுகிறது!

வாழையடி வாழையென வந்த  மரபு என்பார்களே அது போல பல மாமாக்கள் செய்யும் பிறழ்வுகளும் குற்றங்களும், தொடர்கின்றன  - தொடர்கின்றன என்று சொல்வதைவிட - ஒவொவொரு - தலைமுறையிலும் - அவை பன்மடங்கு அதிகமான  பாதிப்புகளை   ஏற்படுத்துகின்றன.  இன்று மருத்துவமனையில் இருக்கின்ற  பெண்குழந்தை பிழைக்குமா? பிழைத்தாலும், அவளால் இயல்பாக வளர முடியுமா வாழமுடியுமா? அப்படியே வாழ்ந்தாலும் அவளால் உருப்படியான சந்ததியை உருவாக்க முடியுமா?

மாமாவோ அம்மாவோ  அன்னையாக இருப்பதல்லவோ தாயின் பண்பு? கலாச்சாரங்கள் கடந்த கடமையல்லவா இது? 
     

0 comments:

Post a Comment