Subscribe:

Pages

Sunday, June 12, 2011

மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை

வெகுநாட்களாக எனக்கு ஒரு ஐயம். மோனலிசா ஓவியம் காலத்தை வென்ற ஓவியமாக - மிகச்சிறந்த படைப்பாகக் கருதப் படுகிறதே. அதில் என்ன அத்தனைத் திறமை வெளிப்படுகிறது? அதுவும் அந்தப் பெண்ணின் புன்னகை அத்தனை அருமை என்றல்லவா குறிப்பிடுகிறார்கள்!! - முதலில் அந்தப் பெண் எங்கே புன்னகைக்கிறாள்? உம்மணாம் மூஞ்சியாகத்தானே தெரிகிறது! ஒருவர் புன்னகைத்தால் அவரது கண்களிலே ஒளிமிகுவது இயல்பு. அவ்விதமான அடையாளம் கூட அப்பெண்ணின் கண்களில் இல்லையே. அதுமட்டுமா? பொதுவாக இளம்பெண்களின் தோற்றம் தான் கவர்ச்சியாக அமையும். இந்தப்பெண்ணோ வயதில் நன்கு மூத்தப் பெண்மணியாகவன்றோ  தெரிகிறாள்? அதவும் அவளது இடது கண் சிவந்திருப்பது தெரிகிறது!  சொல்லப்போனால் - உண்மையில், அவள்  அழுவது போல்தான் தெரிகிறது!!

நிலைமை இவ்வாறு இருக்க - சரக்கு ஒன்றுமில்லாத இவ்வோவியத்தை உலகோர் பாராட்டுவது என்ன?     

பலரிடம் பேசினேன் -  எவருக்கும் புன்னகையை அடையாளம் காணத் தெரியவில்லை. என் தவிப்பு அதிகரித்தது. இந்நிலையில், ஒரு சிறு ஆய்வு செய்தேன் - புன்னகைக்கும் பிற முகங்களுடன் மோனலிசாவை சேர்த்துவைத்துப் பார்ப்பது என்று - இதோ அந்த ஒப்பீடு!

அனுபவ ஞானம் நிரம்பிய கண்கள் புதிதாக எதனையோ அடையாளம் கண்டு கொண்டதற்கான அடையாளமாய் ஒரு  கீற்றுப் புன்னகை - புலர்ந்தும் புலராப் பொழுதாய் - புரிந்தும் புரியாப் பொருளாய் - மலர்ந்தும் மலரா அரும்பாய் - உள்ளும் வெளியுமாய் - "கணுமுற்றி நின்ற   கரும்புளே  காட்டி"  என்று ஔவை சொன்ன தோலுக்கடியில் தேங்கி நிற்கும் தித்திப்புச் சிரிப்பு  தெரிந்தது!

எனக்குள்  முளைத்து என்னை உபத்திரவம் செய்துவந்த - 
மோனலிசா புதிர் விலகியது - விளங்கியது  - அந்த அபூர்வப் புன்னகை புலப்பட்டது!!

 

0 comments:

Post a Comment