கழுகு: சுய வல்லமை இருந்தும் ஏமாற்று மோசடி
டிஸ்கவரி சேனலில் ஒரு வீடியோ பார்த்துக் கொடிருந்தேன். விலங்கினங்களின் அற்புதமான வாழ்க்கைமுறையை விளக்கும் குறும்படம் அது.
கழுகு பற்றிய விவரம் வரும்போது, காட்டப்பட்ட காட்சி இது.
செங்கால் நாரை ஒன்று வெகுப் பொறுமையாகக் காத்திருந்து பிரயத்தனப்பட்டு ஒரு பெரிய மீனைப் பிடிக்கிறது. இதற்கெனவே காத்துக் கொண்டிருந்ததைப் போல, எங்கிருந்தோ ஒரு கழுகு சரேலென வந்து, நாரை பிடித்த மீனை, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அபகரித்துக் கொத்திக்கொண்டு பறந்து போகிறது.
இக்காட்சிக்குப் பின்னணியாக தரப்பட்ட வசனம்:
"சுய வலிமை இருந்தும், பெரிய விலங்குகளைக் கூடப் பிடித்துத் தூக்கும் திறன் இருந்தும், சொற்பமான ஜீவனம் கொண்ட எளிய பறவைகள் சிரமப்பட்டுப் பிடித்த உணவை அபகரிக்கும் கயமைக் குணமே கழுகுக்குப் பிடித்தமாக இருக்கிறது."
பசுமரத்தாணிபோல் பதிந்தது இந்த வாசகம்.
மனிதர்கள் பலரிடம் இதே குணத்தைப் பார்க்கிறோம்.
மனிதர்களைப் பார்த்து - கழுகுகள் இக்குணத்தைக் கற்றுக் கொண்டனவோ?
என்று எண்ணவைக்கின்றன நாட்டு நடப்புகள்.
"மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே!
நிலை மாறுவதெப்போ ? தேறுவதெப்போ ?"
என்று பழங்காலச் சினிமாப் பாடல் எழுப்பிய வினாவிற்கு விடை தருவார் எவரேனும் உண்டோ?
0 comments:
Post a Comment