அம்மா போட்டாள் கொள்ளி
சரோஜா அத்தைக்கு மொதல்ல தெரிவிக்கணுண்டா!
கூடப் பொறந்த அக்கா வராம பாடியை எடுக்கமுடியாதுனு பெரியவங்க சொல்லுவாங்க, ஒடனே பொறப்பட்டு வரச்சொல்லு!
துபாய்க்கு நீ அனுப்பற மெயிலத் தப்பில்லாம அனுப்பிட்டு வா!
அப்புறம், ப்ரௌசிங்க் செண்டர்லேர்ந்து வரச்சே ஃப்ரீசர் பெட்டிக்குச் சொல்லிடு!
ஜகன், கோபாலின் பையன் டூ வீலரில் கிளம்புகிறான்.
ஏண்டா சரோஜாவுக்குத் தெரிவிச்சுட்டயா? கோபாலின் அம்மா கேட்கிறாள்.
இதோ ஜகனை அனுபியிருக்கேன் சரோஜாவுக்கு மெயில் அனுப்பறதுக்கு!
அவ இங்க எப்ப வந்து சேருவா?
ஏம்மா! அங்க அவளுக்குப் புறப்படக் கொஞ்சம் நேரமாகதான்னா?
வீட்ட ஏரக்கட்டி, டிக்கெட் எடுத்து, ஃப்ளைட் பிடிச்சு வர எப்படியும் நாளைக்கு ஆயிடும்! பெரும்பாலும் அவ மட்டுந்தான் வருவா! குழந்தைகளும் அவரும் அங்கேயே இருக்கவேண்டியிருக்கும் அவர் வேலைக்குப் போயாகணும். பசங்களுக்குப் படிப்பு!
கோபால், அம்மாவின் கேள்விக்கு அவள் காதில் கேட்கும்படியாகச் சத்தமாய்ச் சொன்னார்.
அழுவது - அவ்வப்போது இப்படிக் கேள்வி கேட்பது என்று அவள் ஏதோ செய்துகொண்டிருக்கிறாள். கொஞ்சம் அவளுக்குத் தண்ணி தந்து குடிக்கச் சொல்லித் தடவிவிட்டு கோபால் திரும்ப ஜகன் வாசலில்.
வண்டியை நிறுத்தாதடா!
வெட்டியானுக்குச் சொல்லிட்டு வந்துடு!
அவன் வந்தபிறகு சொல்லிக்கலாம் நாளைக்கு ஆயிடுன்னு, இப்ப ஒண்ணும் சொல்லாதே!
சரி பெட்டி என்னாச்சு?
கொஞ்ச நேரத்துல வந்துடும்.
கோபால் பார்க்கிறார் - மரபெஞ்சில் அசைவற்று அண்ணாந்து கிடக்கும் தம்பி - சீனிவாசன்!
இன்னைக்கெல்லாம் பார்த்தா முப்பத்தி நாலு வயசு! சாகற வயாசா இது!
ஏண்டா இப்படிப் போயிட்ட?
தம்பியின், உதட்டை இன்னமும் கொஞ்சம் விரித்து மூடி, இமைகளைச் சரி செய்து விடுகிறார்.
தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியிலிருந்து பொட்டலம் கட்டி அனுப்பும்போதே சொன்னார்கள். இன்ஃபெக்ஷியஸ் என்று!
"தொடவேண்டாம்!" உஷா, கோபாலின் மனைவி முணுமுணுத்தாள்.
சும்மா இருடீ! இவனை இப்பக் கூடத்தொடலேன்னா! நா தழுக்க கண்கள் சுரக்கின்றன!
பெட்டி வந்தது! பின்னாடியே வசந்தா, சீனிவாசனின் மனைவி, அவனது இரு பெண் குழந்தைகள் - தம்பியின் மாமனார், மாமியார் என வந்து சேர்கிறார்கள்!
வசந்தா விசும்பினாள்! குழந்தைகள் அழவில்லை; அமைதி மட்டுமே நிலவியது!!
உடல் பெட்டிக்கு மாறியது!
மீண்டும் அமைதி! அம்மா கூட அமைதியாகி விட்டாள்!
போன் அடிக்கிறது! கோபால் எடுத்துப் பேசுகிறார். கால் முடிகிறது!
யாருடா?
சரோஜாதாம்மா!
எப்ப வராளாம்?
வரலேன்னுட்டா!
ஏனாம்? உஷா கேட்கிறாள்.
எம் முகத்தைப் பாத்தா என் தம்பியோட பொணம் வேகாதுன்னுட்டா!
அவ சொல்றதும் சரிதாண்டா!
இவன் அவளக் கொஞ்சமாவாப் படுத்தியிருக்கான்!
ஒரு நாள் கூட அக்கான்னு ஆசையாப் பாசமா நடந்துக்கவே இல்லையே!
அப்படியென்னப் பிறவிப் பகையோ?
அது மட்டுமா? அவளோடப் பணம், நகைன்னு எல்லாம் ஸ்வாகா!
இந்த மொகத்தப் பாக்க அவ அங்கேர்ந்து வரணமாக்கும்?
அம்மா தொடர்கிறாள்!
அது சரி! இவன் யார் கிட்டதான் இணக்கமா இருந்திருக்கான்?
பொண்டாட்டிக்கு ஒரு மொழம் பூ? ஒரு நல்ல பொடவை?
வசந்தாவும், அவள் பெற்றோரும் குலுங்கி அழுகிறார்கள்.
ஏதோ ஒத்தப் பொண்ணப் பெத்துட்டோமேன்னு, எப்படியோ ஒங்க பொண்ணக் காப்பாத்திட்டீங்க! எனக்கு வாச்ச புள்ள அப்படி!
அவர்கள் காலில் விழுந்து கதறுகிறாள் அம்மா!
அம்மா! நீங்க இதையெல்லாம் செய்யக் கூடாது!
வசந்தா பதறுகிறாள்! அம்மாவைத் தூக்க முயற்சிக்கிறாள்!
அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்!
உஷா அவர்களைச் சமாதானப் படுத்துகிறாள்!
ஒன்னையும் அவன் விட்டு வைக்கலியேம்மா!
ஒன்னோட பத்து சவரன் நகையையும் கூட கப்ளீகரம் பண்ணிட்டானே பாவி! உஷாவைப் பார்த்துக் கதறுகிறாள் அம்மா!
உஷாவின் அப்பா வீட்டிற்குள் வந்து நிற்க அவரின் காலில் போய்
விழுகிறாள் அம்மா!
யெப்பா! இந்த வயிறு மோசமான புள்ளயப் பெத்த வயிறுப்பா! மன்னிச்சுடுப்பா!
கோபால் பிணத்தை ஆச்சரியமாய்ப் பார்க்கிறார்!
இறப்பிலும் கூட இரக்கம் உருவாக்காதப் பிறவியா நீ?
பெத்த அம்மாவ இப்படிக் கதறவச்சுட்டியேடா! உள்ளுக்குள் கரைகிறார் கோபால்!
சின்ன வயசிலிருந்தே பிடிவாதக்காரனான உன்னை நன்றாகப் படிக்கவைத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, நல்லப் பெண்ணாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சு என ஒரு விதவை சாதிச்சதுடா!
ஏண்டா இப்படியான? குடி - கூத்தி - திருட்டு- எய்ட்ஸ்! - கோபால் உள்ளுக்குள் நினைத்தபடியே தம்பியைப் பார்க்கிறார்.
அம்மா உரக்கப்பேசுகிறாள்-
டேய்! இப்படியே வச்சுகிட்டு வேடிக்கப் பாக்கத்தேவையில்ல! எடுத்துடுங்கடா! அக்காகாரியும் வரமாட்டேன்னுட்டால்ல!
அம்மா!
பேசாத! வந்தவங்க போதும்! எடுக்க ஏற்பாடு பண்ணு!
சரிம்மா!
ஏ ஜகன் ஓடு!
வெட்டியானப் போய் உடனடியாக் கூட்டிட்டு வா!
மாமா நீங்க அவனோட வண்டியிலப் போங்க! அப்படியே மத்த எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணுங்க! நான் இங்க வீட்டுல இருந்தாகணும்.
வசந்தாவோட அப்பா முடியாமப் படுத்துட்டாரு! நீங்க தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். ம்ம்- கெளம்புங்க!
மடமடவென வேலையாகிறது!
சித்தப்பாவிற்குக் கொள்ளிபோட ஜகன், வீட்டின் ஒற்றைப் பிள்ளை தயாராகிறான்!
வாய்க்கரிசி போட்டு நமஸ்காரம் பண்ணிக்கோங்க!
ப்ரோகிதர் கட்டளையிடுகிறார்!
நிற்க முடியாதவளாக அம்மா கொஞ்சம் உட்கார்ந்தாள்!
ஆபத்துக்குப் பாவமில்லை!
பெத்த வயிறு பதைக்காதா என்ன?
அந்த அம்மா அப்படியே உட்காரட்டும்; நமஸ்காரம் பண்ணலேன்னா தோஷம் இல்லை! ப்ரோகிதர் சொல்கிறார்.
ஒருவினாடி தான் அம்மா அப்படியிருந்திருப்பாள்! திடீரென அசுரபலம் வந்தவள் போல் அம்மா கம்பீரமாக எழுந்தாள்!
பக்கத்திலிருந்த ஒரு குடம் நீரைத் தலையில் சரேலென ஊற்றிக்கொண்டாள்!
சொட்டச் சொட்ட ஈரத்துடன் நடந்து வந்தவள்
பேரனின் கையிலிருந்து நெருப்புச் சட்டியைப் பிடுங்கிகொள்கிறாள்!
பாட்டீ!
நகருடா!
தூக்குங்க!
பொம்பள கொள்ளிப் போடற பழக்கம் கெடையாதும்மா!
அது அந்தக் காலம்!
அம்மா உள்ளப் போ! ஊர்க் கூடி வேடிக்கைப் பார்க்கிறதும்மா!கோபால் கதறுகிறார்.
இந்த ராட்சசனைப் பெத்தவடா நான்! இவனுக்குக் கொள்ளிபோட நான் யார் கிட்டயும் அனுமதி கேட்கத் தேவையில்லை.
இந்த ஜென்மத்துக்குக் கொள்ளி போட்ட பாவம் ஏம் பேரனுக்குப் போக வேண்டாம். எந்தக் கையாலச் சீராட்டி, சோத்தப்போட்டு வளத்தேனோ அதே கையாலக் கொள்ளியும் போட்டுடறேண்டா!
எடுங்க! கம்பீரக் குரல் கொடுத்து, அம்மா கொள்ளிச்சட்டியுடன் அடியெடுத்துவைக்கப், பாடை எழுந்தது!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment