Subscribe:

Pages

Friday, January 7, 2011

ஒற்றைக் கிழங்கு

ஒற்றைக் கிழங்கு
சேம்பு என்றால் என் பெண்ணுக்கு உயிர்.  அதிலே கறி செய்து - அதைப்போட்டு மோர்க்குழம்பு  செய்து விடவேண்டும். கறியை  இரண்டு மூன்று நாள் வைத்துச் சாப்பிடுவாள். சாப்பாட்டு நேரம் மட்டுமென்றில்லை. மற்ற நேரங்களிலும் கூட, கிண்ணமும் கையுமாக இருப்பாள். செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்த கறியை மைக்ரோ வேவ் ஓவனில் வித விதமான பதத்தில் சுடவைத்துச் சாப்பிடுவது அவளுக்கு வாடிக்கை. மோர்க்குழம்பை எவரும் டச் பண்ணிவிடக்கூடாது. எல்லாம் அவளுக்கே சொந்தம் என்கிற கதையாய் ஒருவாரம் காபந்து பண்ணி, மற்றவர்களை நன்றாய் உசுப்பேத்தி உண்ணுவாள்.

ஆக எங்கள் வீட்டில், எங்கள் ஒற்றைக் குட்டி ராணிக்கென்றே அடிக்கடி சேம்பு ஆஜராகிவிடும். நம் பட்டேல் பிரதர்ஸ் கடையில் நுழைந்தவுடனேயே முதல் சல்யூட் சேப்பங்கிழங்கிற்குத்தான். குண்டுகுண்டாய் ஒன்றுபோல் பொறுக்கி எடுத்துப்பையை நிரப்புவோம். எத்தனை எல்பியானுலும் பரவாயில்லை, அவளோட முகத்துலப் பிரகாசம் வரவரைக்கும் பொறுக்கிப்போடுவது நிற்காது!

அன்றொரு   நாள்  வேறு எதையோ எடுக்கப்போகும்போது எங்கிருந்தோ எட்டிப்பார்த்தது ஒரு சேப்பங்கிழங்கு. வெடுக்கென எடுக்கப்பார்த்தேன். வேகவைத்து சாம்பாரில் சேர்த்து விடலாமே என்கிற ஆதங்கம் தான். ஆனால் கண்ணுக்கெட்டியது கைக்கு எட்டவில்லை. அந்த ஒற்றைக்கிழங்கு கைக்கு அம்படாமல் எங்கேயோ உருண்டோடி ஒளிந்து கொண்டது.

இதை நகர்த்தி, அதை நகர்த்தி அந்தக் கிழங்கை எங்கெங்கெல்லாமோ தேடியாயிற்று. போதாக்குறைக்கு என் பையன் வேறு வந்து தேடோ தேடென்று தேடினான்.

கிழங்கு போனவன் போனாண்டி தான். (சரி, கிழங்கோட "பால்" ஜெண்டர் என்ன?)

இதற்கிடையே பலமுறை வீட்டை ஒழித்தும் பெருக்கியானது. எங்கேயாவது இருந்திருந்தால் வெளியே வந்திருக்கலாம். வந்தபாடில்லை. எனவே  கிழங்கு தானே விரும்பி, குப்பைக்குப் போய்விட்டது என முடிவு கட்டி அந்தக் கிழங்கை மறந்து தலைமுழுகியாகிவிட்டது.

இப்படியாக, காலம் போக, இன்று  இடியாப்பம் பிழியலாம் என இடியாப்பக் குழலை எடுக்க அதைவைத்திருந்த டப்பாவை எடுக்கப்போனேன். அது ஒரு திறந்த டப்பா, இடியாப்பக்குழல், அப்பளக் குழவி, பிஸ்ஸா கட்டர் போன்ற சில்லறைச் சாமான்கள் போட்டு வைத்திருந்தேன். சமையல் மேடையின் கீழே உள்ளக் கதவு போட்ட அலமாரி - குனிந்தபடியே கையைவிட்டு அப்பெட்டியைப் பார்க்காமலே இழுக்கப் பார்த்தேன். கைபட்ட நேரம், வித்தியாசமாக ஏதோ கையில் பட்டது. ஒருவித வழவழுப்பு ஒருவிதக் கூர்மை எனக் கையில் பட்டதை, மூளை வெகுவிரைவாய் எச்சரிக்க, வெடுக்கென கையை இழுத்துக் கொண்டேன். படமெடுத்த நிலையில் ஒரு பாம்பு, அந்தப்பெட்டிக்குள் இருப்பது போலவும், அப்பாம்பின் படத்தை நான் ஸ்பரிசித்தது போலவும் தெரிந்தது. நெஞ்சில் கொஞ்சம் படபடப்பு.

அமெரிக்காவில், வீட்டிற்குள் பாம்பு அதுவும் மாடி வீட்டில் பாம்பு வருமா? அதுவும் நம்ப ஊரைப்போல இப்படி ஒரு பெட்டிக்குள் புகுந்து உட்கார்ந்துகொண்டு பயமுறுத்துமா?

முன்னொரு முறை மாரோவில் இருந்தபோது, ஒரு முழ அளவேயான பொடிகலர்பாம்புகளை வீட்டு வாசலில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். லீஸ் ஆபீசில் விசாரித்தபோது, பயப்படத்தேவையில்லை - அதுக்கெல்லாம் விஷம் கிடையாது என்றார்கள். அதுபோல, இங்கு இப்போது நல்லப்பாம்பு - விஷப்பாம்பு எப்படியோ வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறதோ?

பயம் கவ்வியது வீட்டில் எவரும் இல்லை.

என் பிள்ளை ஜார்ஜியா டெக்கில் படிப்பு முடிந்து புறப்பட்டு, வீடு வந்து சேர நான்கு மணிநேரமாவது ஆகும். பெண்ணுக்குப், போன மாதம் தான் கல்யாணம் ஆனது. துபாயில் இருக்கிறாள்! வீட்டில், சுற்றிச் சுற்றி வளைய வந்தவள், அவளது  பிரிவிலும், தனிமையிலும் ஏற்கனவே கொஞ்சம் ஆடிபோயிருக்கிறேன். இப்போது பார்த்து இந்தப் பாம்பு எங்கே வந்தது?
லீஸ் ஆபீசைக் கூப்பிடலாமா? கூடாது! இந்த அமெரிக்கர்களுக்கு நம் நல்லப் பாம்பைப் பற்றித் தெரியாது. தப்பிக்கவிட்டு விடுவார்கள். அப்புறம் நம்ம கதி அதோ ககிதான்!!

சட்டென்று அந்த ஐடியா உதித்தது - டக்கென்று போனையெடுத்து, 911 போட்டேன். வீட்டிற்குள் பாம்பு என்று அலறினேன்.

படைபுடை சூழ, அபாய ஒலி முழங்க, தீ, முதலுதவி, காவல் துறையென, வண்டிகள் வந்து தேய்த்து நின்றன. டக் டக் என ஷூ க்கள் படிகளில் தாவ, உள்ளே வந்தார்கள்!     

எங்கே பாம்பு என்றார்கள் - பயத்துடன், அலமாரிக்குள் இருந்த பெட்டியைக் காட்டினேன், பெட்டியைத் தட்டினார்கள், ஒன்றும் வெளியேறவில்லை! அதுக்குள்ள தான் பாம்பு இருக்கு என் கையில நல்லா தெரிஞ்சுதுன்னு ஆணித்தரமாய்ப் பேசினேன்!

பெட்டியை அலாக்காகத் தூக்கிக் கொண்டு வந்து டைனிங் டேபிள் மீது வைத்தார்கள். ஒருவன் பெட்டிக்குள் கையை விட்டு எதையோ தூக்க முயற்சிப்பது தெரிந்தது.

"இங்கே வேண்டாம்" எனக் கதறினேன்! கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன்! பயம் தெளிய என்று எப்போதோ நெட்டுரு போட்ட ஸ்லோகம் நினைவுக்கு வந்தது! "ஓம் ஸ்ரீ மகாகாளி----"

இந்தா இதைப்பிடியென்று முரட்டுக் குரல் ஆணையிட்டது!
அடப்பாவி! ஏற்கனவே பாதி செத்துப் போயிருக்கிறேன் பாம்பைப் பிடிக்கச் சொல்றியா என மனதில் வைது கொண்டே  கண்களை மேலும் இறுக மூடிக்கொண்டேன்!

தேர் யு கோ! என்று சத்தமாய் என் காதுக்கருகே பேசினாள்! அது அந்த ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் போலீஸ்காரி என்பது புரிந்தது. 

ஏண்டியம்மா உனக்கு என் நெலைமை புரியலியா! என்ன தேர் யு கோ?
நான் மனதுக்குள் புலம்பியபடி, கண்ணைத் திறக்காமல், அப்படியே நின்றேன்.

எல்லாரும் எதற்கோ கொல்லென சிரித்தார்கள்! பாவிகளா ! எல்லாம் சேர்ந்து பாம்பை வீட்டுக்குள் தப்பிக்க விட்டு விட்டீர்களா என்ன? பயத்தில் சட்டெனக் கண்ணைத் திறக்கிறேன் - இந்தா உன் பாம்பு என்றாள்!

வளர்ந்த செடி --- அடையாளத்துக்கு, அடியில் தம்மாத்துண்டு சேம்பு!
அன்றொரு நாள் தப்பிபோன சேம்பு! செடியாய் முளைத்து!

வெட்கமாயிருந்தது!
ஆல் ரைட் என்று ஒரு தினுசாகப் பார்த்து விட்டுக் கிளம்பினார்கள்!

சேம்புச் செடி அழகாய்த் தொட்டியிலே!
என் பெண் என்னுடனேயேதான் இருக்கிறாள்!





    

0 comments:

Post a Comment