Subscribe:

Pages

Tuesday, January 4, 2011

மனதை மாற்றிய புத்தகம்!!

மனதை மாற்றிய புத்தகம்!!

அவன் தூங்க முயற்சிக்கவில்லை; படுத்தபடியே, என் தலையை, என் கன்னத்தை. என் மோவாயை - கழுத்தை - கைகளை - தடவிப் பார்த்தான்! சட்டென்று திரும்பி, நகர்ந்து என் இரு கால் பாதங்களுக்குள் தன் முகத்தைப் பதித்துக் கொண்டான்.


அம்மா! உன் மடியில் கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா?

தளர்ந்த நடையுடன், கூம்பிய முகத்துடன், குழைந்த குரலுடன் - என் பிள்ளை - தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளை! வயது பதினைந்து!

தூக்கிவாரிப்போட்டது! இவனுக்கு என்ன ஆயிற்று என நெஞ்சு பதைத்தது; தானுண்டு தன்வேலையுண்டு என ஓயாமல் படிப்பு அல்லது  கம்ப்யூட்டர் என வீட்டுக்குள்ளே ஒதுங்கி வாழுகிற என் பிள்ளை - அதுவரை அவன் மேசையில் என்னமோ செய்து கொண்டிருந்தவன் - வெடுக்கென எழுந்து வந்து இப்படிப் பேசுகிறானே! நான் அதிர்ந்தேன்!! இருப்பினும் - ஏற்கனவே வாட்டம் கண்டிருக்கிற பிள்ளையை ஏதும் கேட்டுவிடக் கூடாது என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாடா கண்ணு! என்று, தரையில் வாகாய் அமர்ந்தேன்! - என் பிள்ளை வந்து படுத்துக் கொண்டான்!

ஒட்டுமொத்தமாய் உடலைச்சுருக்கி தலையை என் மடியில் முட்டி இரண்டு கைகளாலும் என் இடுப்பை நெருக்கி  அவன்படுத்துக் கொண்டவிதம், என் வயிற்றுக்குள் நுழைந்து பதுங்கிகொள்ள எத்தனிப்பது போல் இருந்தது.

நான் எதுவும் பேசவில்லை. அவனது தலையைக் கோதி, பின்னங்கழுத்தில் கையை இறக்கி இதமாக வருடி விட்டேன்.  தன் கைகளை விடுத்து, மடியில் படுத்தபடியே தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான்.

அம்மா! நீ என் வாழ்நாள் முழுக்க என்னோட  இருக்கணும்மா!
என்னடா கேள்வி இது! நான் ஒன்ன விட்டுட்டு எங்கடாப் போகப் போறேன்?

எனது இரு உள்ளங்கைகளையும் தன் இரு கண்களில் ஒற்றிகொண்டபடி கேட்டான் - ஏம்மா! வயசாச்சுன்னா எல்லாம் செத்துத்தான் போகணுமா?

என்னடா கேள்வி இது?
சொல்லும்மா - வயசானா எல்லாரும் செத்துப் போயிடணுமா?
நீயும் வயசானா செத்துப் போயிடுவயா?

இன்னும் இருபது வருஷத்துக்கு ஒன்னோடதாண்டா இருக்கப் போறேன்!

அது பத்தாதும்மா!  ஐம்பது வருஷத்துக்கு ஒன்னோட நான் இருக்கணும்மா!

பைத்தியம் மாதிரிப் பேசாதே! கொஞ்சநேரம் கண்ணைமூடி அப்படியே தூங்கு! தலையைத்தட்டினேன்!

அவன் தூங்க முயற்சிக்கவில்லை; படுத்தபடியே, என் தலையை, என் கன்னத்தை. என் மோவாயை - கழுத்தை - கைகளை - தடவிப் பார்த்தான்! சட்டென்று திரும்பி, நகர்ந்து என் இரு கால் பாதங்களுக்குள் தன் முகத்தைப் பதித்துக் கொண்டான்.

அம்மா! நான் ஒனக்கு ஒண்ணுமே செய்யலியேமா!
நீ எத்தனக் கஷ்டப்பட்டிருப்பம்மா!!

அது கெடக்கடுண்டா! இப்ப நீ  அமைதியாத் தூங்கு!

இல்லம்மா! நான் எதாவது செஞ்சுதான் ஆகணும்!
நா ஒன்ன சாக விடமாட்டேன்!
நீ என்னோட இருப்ப!

ஒனக்கு எந்த ஆர்கனாவது கெட்டுப்போச்சுன்னா, ட்ரான்ஸ்பளாண்ட் பண்ணிடுவேன்! நீ எனக்கு வேணும்!!

அந்தப் பையனைப் போல இருந்திட மாட்டேன்!
எந்தப் பையன்டா?

கை நீட்டினான்! கொஞ்சம் எட்டத்தில், அவன் மேசை மீது ஒரு புத்தகம் தெரிந்தது. அப்புத்தகத்தை எடுக்கவேண்டும் என ஒரு கணம்  நினைத்தேன் .ஆனல், நான் அவனை விலக்க விரும்பவில்லை! என் பிள்ளையின் நெகிழ்வு ஒரு சுகமான வேதனையாக இருந்தது!

எங்களுக்குள் நடப்பதை, அத்தனை  நேரம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த என் பெண், அப்புத்தகத்தைப் படுக்கென எடுத்து என்னிடம்  நீட்டினாள். ஜானதன் சாஃப்ரான் ஃபோயர் எழுதிய “Extremely Loud and Incredibly Close” எனும் அமெரிக்க நாவல்.

இது என்னடா புத்தகம் என்றேன் - பிள்ளை விவரித்தான்

"ஒன்பது வயதுச் சிறுவனின் தந்தை  - செப்டம்பர் 11, 2001 அன்று நடந்த  பயங்கரத்தில் இறந்து போகிறார் - 
உலக வர்த்தகக் கட்டிடத்திற்கு ஒரு மீட்டிங்கிற்காக அங்குச் சென்றவர், திரும்பவே இல்லை. அவரது ஆசைகளை, அவர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றுவதற்காக, அந்த  சிறு மகன் எத்தனையோ பிரயத்தனங்களைச்  செய்கிறான்."

விண்டர் ரீடிங்கிற்காக,  அவனது பள்ளியில் அவனுக்குக் கொடுத்திருக்கிறப் புத்தகம் அது.
புரட்டிப் பார்த்தேன் - எளிய நடை - ஆங்காங்கே புகைப்படங்கள், 326 பக்கங்கள் விலை 14 டாலர்.

எழுத்துக்கள் எளிமையாக இருப்பினும், வலிமையாக இருந்தன!
ஜானதன் சாஃப்ரான் ஃபோயர் தன் எழுத்துச் சாமரத்தால், என் பிள்ளையின் மனதிலே, மிகப்பெரியதொரு வேள்வியைக் கிளப்பியிருக்கிறார்.

கடந்த இருவாரங்களாக அவனது, சொல், செயல், சிந்தனை யாவற்றிலும், பொறுப்பும், கவனமும் மிகுந்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இது ஒரு எழுத்தாளனுக்கு எளிதில் கிடைக்காத பாக்கியம்.

அம்மையப்பனாக அற்புத மாற்றம் நிகழ்த்தியிருக்கிற ஜானதன் சாஃப்ரான் ஃபோயர் சிரஞ்சீவியாக வாழ்வார் என்பதில் ஐயமில்லை!

  

 





  

  

0 comments:

Post a Comment