Subscribe:

Pages

Saturday, January 1, 2011

புதுயுகம் பிறக்கட்டும்! புதுமைகள் சிறக்கட்டும்!!

புதுயுகம் பிறக்கட்டும் புதுமைகள் சிறக்கட்டும்

கணநொடி நிமிடமணிஎனும் வகையில் நாளும் பொழுதும் ஓடும் பந்தயம்
கணக்கொடு இராப்பகல் வருடியோட காலப்பந்தாட்டத்தில் புதியதோர் ஒப்பந்தம்
குணவடிவத்துள் மூண்டு நிற்கும் நினைவும், குறைநிறைவும், நவரசக்கதம்பம்
நிணவடிவத்துள் மீண்டெழும் உள்மனம் துலாக்கோலில் தொங்கும் ஞானத்தம்பம்
வண்ணக்குழம்பு வார்த்ததோர் நற்குடம் வருட, மூடித்திறந்து முகபடம் காட்டும்
எண்ணக் கணிதம் எண்கணிதத்தை ஓடித்திறந்து முழுமுகம் பார்க்கும்
ஆண்டொன்று புதிதாய் முளைத்த நன்மாத்திரம் பூமியெங்கிலும் புத்தொளிப் பரவசம்
கண்டொன்று புதிதாய் செயத்தகு பணியென அவ்வவர் கொள்ளுவர் ஆசை இலட்சியம்
திங்களோட்டிட மேன்மை பெற்றிட விருப்பம் சொல்லுவர், வாழ்த்துக்கள் ஒலிக்கும்
மங்களத்துவக்கம் இசைக்கும் நல்லூழ்; தொழுகையில் எங்கணும் இயக்கம்!!
அரசியல், அறிவியல், பொருளாதாரம் அவனியெங்கும் சமன்பட வேண்டுவோம்
ஆட்சியில் அமரும் தலைவர்கள் யாவரும் நல்மாட்சிமை நல்கிடும் வரம்கோருவோம்
புரட்சியில் பிறக்கும் கலை, இலக்கியம், ஆன்மசிந்தனை வளர்ந்திட வாழ்த்து கூறுவோம்
திரட்சியில் விளையும் தீமைகள் யாவுமே நில்லாதோடிடும் நல்வழிகாணுவோம்
வறுமை இலாது கண்டங்கள், நாடுகள் சமானம் வெல்ல பொருள் விதி படைப்போம்
பொறுமை இலாத துக்கிரி நாசகர் முளைத்தெழாமல் சட்டம் இறுக்குவோம்
மாதர், மழலையர், மூத்தோர், பிணியோர் நலமே ஞால நல்லறம் என்னுவோம்
பாதகம் செய்பவர் பாதுகாப்புபெறும் அநியாயம் கொன்று வீழ்த்துவோம்!
கசிவே இலாத அணுஉலைகள், கெடுதல்விளைக்காவேதிமங்கள் நம்மைஆள அனுமதிப்போம்
நசிவு தராத தொழில்நுட்பம், மலிவு மின்னொளிஉற்பத்தி, பொசுக்காக்கதிரொளி தழுவிடுவோம்
அஞ்சுதல் அஞ்சிடும் ஆண்மை கொண்டவர் அவனியில் பெருகிடச் செய்திடுவோம்
பிஞ்சு உள்ளத்தில் காமம் குரோதம் விதைக்கா ஊடகம் படைத்திடுவோம்
உழைப்பை மதிக்கும் உள்ளம் கொண்டவர் ஊரில் பலராய் மிகவேண்டும்
பிழைப்பைக் கெடுக்கும் பித்தாலாட்டங்கள் வேரறுந்து முழுதாய் விழவேண்டும்
கருமம், கடமை, கருத்து நிறைந்தோர் புயலாய் இன்று புறப்படவேண்டும் 
தருமம், சத்தியம், கருணை நிறைந்த புதுயுகம் இன்று பிறந்திட வேண்டும்

 அவ்வைமகள்

0 comments:

Post a Comment