காதலா? காமமா?
காதலா காமமா என்னவென்று கேள்வி
இரண்டிற்கும் வேறுபாடு என்னவென்று கேள்வி
எது முதலில் எது பிறகு என்பதெந்தன் கேள்வி
எதைக்கொண்டு இதைக்கண்டு கொள்வதெந்தன் கேள்வி
பின்னதை முன்னதுதான் விளைத்திடுமா கேள்வி
முன்னது பின்னதைத்தான் விலக்கிடுமா கேள்வி
விடலை ஈர்ப்பு நேசமெல்லாம் வெற்றுக்காமமென்று சொன்னால்
அடலேறும் உறவுப்பற்று எந்தவகையில் சேர்த்தி?
வயோகிதத்தில் வருவதுதான் பாசம் என்று சொல்வீர்
வாலிபத்தில் வருவதை மோசமென்றும் கொள்வீர்
காதல் பித்தலாட்டமென்று பிதற்றிடுவோர் எல்லாம்
போலிப்பசப்பில் காலமோட்டும் விந்தை நல்ல விந்தை
வாலிபத்தில் வருவதுதான் காதலென்று ஆனால்
வயோகிதத்தில் வருவதைக் காமமென்னலாமே!
வாலிபமா வயோதிகமா இதுஅல்ல கேள்வி
காதலா காமமா என்பதுதான் கேள்வி
எது உயர்வு எது இழிவு என்பதுங்கள் கவலை
இது புனிதம் அது புனிதம் என்பதுங்கள் குழப்பம்
வயதானால் முதிர்ச்சிவரும் எனபதுங்கள் பேதம் இள
வயதிலும்தான் மனமுதிர்ச்சிவரும் என்பதெந்தன் வாதம்
அசைவைப்பார்க்கும் இசைவைப்பார்க்கும் காதலென்று கேள்வி
வயதைப்பார்க்கும் உடலைப்பார்க்கும் காமமென்று கேள்வி
வயதைப்பார்த்து உடலைப்பார்த்து ஆசைவந்ததானால்
அசைவும் இசைவும் இல்லையென்றால் காமம் வெற்றுத்தோல்வி
அசைவைப்பார்த்து இசைவைப்பார்ததுக் காதல் வந்ததானால்
வயதும் உடலும் பொருந்திவந்தால் காமமணம்மலரும் காணீர்
காமம் மோசம் என்பதைச் சொல்லிவிடும் யாரும்
காமம்தேடும் சோரப்ப்போக்கைத் தடுப்பதில்லை காணும்
சமயம் பார்த்து வசதி பார்த்து ஒப்புக்கொள்ளும் போக்கில்
சமயம் பார்க்கும் உயர்வுபார்க்கும் வெளிப்போக்கிற்கென்ன வேலை?
மனதும் பரிவும் இல்லையென்று ஆகிவிட்டபோதும்
காமப்போர்வை சேர்க்கையிலே நாட்டமேன் என்கேள்வி
காதலுக்கும் காமத்திற்கும் என்னமாறுபாடு? எண்ணமாறுபாடே!
காதல்தேடும் வழிவழக்கில் காமம் விளைச்சல் காணும்
காமமெழக் காதல் தேவையில்லையென்று சொன்னால்
காதலெழக் காமம் எழக்கூடாதென்று இல்லை!
காதலுக்கு என்னதேவை என்னதேவை கேட்பீர்
இணக்க நிலை இறுதிவரை இருக்கவேண்டும் கேட்பீர்
காதலற்ற காமம் ருசிப்பதில்லை என்றும்
காமமின்றி காதல்முடிவதில்லை என்றும்
காமமற்ற காதலுக்கு நல்காலம்கனிய வேண்டும்
காதலற்ற காமத்திற்கோ நல்புத்திபுகட்ட வேண்டும்
அவ்வைமகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment