Subscribe:

Pages

Sunday, June 12, 2011

மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை

வெகுநாட்களாக எனக்கு ஒரு ஐயம். மோனலிசா ஓவியம் காலத்தை வென்ற ஓவியமாக - மிகச்சிறந்த படைப்பாகக் கருதப் படுகிறதே. அதில் என்ன அத்தனைத் திறமை வெளிப்படுகிறது? அதுவும் அந்தப் பெண்ணின் புன்னகை அத்தனை அருமை என்றல்லவா குறிப்பிடுகிறார்கள்!! - முதலில் அந்தப் பெண் எங்கே புன்னகைக்கிறாள்? உம்மணாம் மூஞ்சியாகத்தானே தெரிகிறது! ஒருவர் புன்னகைத்தால் அவரது கண்களிலே ஒளிமிகுவது இயல்பு. அவ்விதமான அடையாளம் கூட அப்பெண்ணின் கண்களில் இல்லையே. அதுமட்டுமா? பொதுவாக இளம்பெண்களின் தோற்றம் தான் கவர்ச்சியாக அமையும். இந்தப்பெண்ணோ வயதில் நன்கு மூத்தப் பெண்மணியாகவன்றோ  தெரிகிறாள்? அதவும் அவளது இடது கண் சிவந்திருப்பது தெரிகிறது!  சொல்லப்போனால் - உண்மையில், அவள்  அழுவது போல்தான் தெரிகிறது!!

நிலைமை இவ்வாறு இருக்க - சரக்கு ஒன்றுமில்லாத இவ்வோவியத்தை உலகோர் பாராட்டுவது என்ன?     

பலரிடம் பேசினேன் -  எவருக்கும் புன்னகையை அடையாளம் காணத் தெரியவில்லை. என் தவிப்பு அதிகரித்தது. இந்நிலையில், ஒரு சிறு ஆய்வு செய்தேன் - புன்னகைக்கும் பிற முகங்களுடன் மோனலிசாவை சேர்த்துவைத்துப் பார்ப்பது என்று - இதோ அந்த ஒப்பீடு!

அனுபவ ஞானம் நிரம்பிய கண்கள் புதிதாக எதனையோ அடையாளம் கண்டு கொண்டதற்கான அடையாளமாய் ஒரு  கீற்றுப் புன்னகை - புலர்ந்தும் புலராப் பொழுதாய் - புரிந்தும் புரியாப் பொருளாய் - மலர்ந்தும் மலரா அரும்பாய் - உள்ளும் வெளியுமாய் - "கணுமுற்றி நின்ற   கரும்புளே  காட்டி"  என்று ஔவை சொன்ன தோலுக்கடியில் தேங்கி நிற்கும் தித்திப்புச் சிரிப்பு  தெரிந்தது!

எனக்குள்  முளைத்து என்னை உபத்திரவம் செய்துவந்த - 
மோனலிசா புதிர் விலகியது - விளங்கியது  - அந்த அபூர்வப் புன்னகை புலப்பட்டது!!

 

Friday, June 10, 2011

கடுகுக்கு நேர்மூத்த துவரை உள்ளம்

கடுகுக்கு நேர்மூத்த துவரை உள்ளம்

சொல்லவரும் கருத்துக்களை எளிய எடுத்துக்காட்டுக்களுடன் தெளிவு படுத்துவது என்பது ஒரு கலை. இந்தக் கலையில் கைதேர்ந்தவர் பாரதிதாசன்.



எந்த ஒருவருக்கும் சமுதாயச் சிந்தனை - சமுதாய சேவை - என்பது கட்டாயத்தேவையான ஒன்று என்பதனை, "புதிய உலகம்" என்ற தனது தொகுதியில் "உலக ஒற்றுமை" எனும் பிரிவில் பாரதிதாசன் எத்தனை எளிமையாக எடுத்துரைக்கிறார் பாருங்கள்.     

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்பான்   
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் 
தெருவார்க்குக் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என்போனுள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்


நசுங்கினாலோ, வெடித்தாலோ மட்டுமே பயனாகும் கடுகு.
வெறுமனே அள்ளித்தின்றாலும் சுவைத்திடும் துவரை, ருசிதருவதொடு, பசியாற்றி, ஊட்டச்சத்தையும் வாரிவழங்கும் தன்மையது.    

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். ஒரு சிறு அளவு மட்டுமேயானாலும் கூட கடுகை வாயிலிட்டு உண்ணமுடியாது. பசியோடு எவரேனும் வந்தால், அவருக்கு,  துவரையை அள்ளித்தந்தால்,  அவரது பசிதீரும் -- கடுகை அள்ளித்தந்தால்? - எரிச்சலும் சினமும் தோன்றி,  பசித்துன்பம்  மிகும்.
தன் மனை - தன் மக்கள் - தன் செல்வம் எனும் சுயநல நெறியாளர்கள் சமுதாயத்தில் உடனடியாகவும் நேரடியாகவும், பயன்தர இலாயக்கற்றவர்கள். குறைந்த பட்சம் தான் வாழும் தெருவுக்கும், தான் வாழும் தெருவினர்க்கும் ஏதாகிலும் ஒரு நன்மையை - ஒத்தாசையை செய்ய இயலாத இந்தக் குடுமபஸ் தர்கள் வாழும் வாழ்க்கை வீணே!

எங்க ஊரு நல்ல ஊரு என்பதாக, தாம் பிறந்த மண்ணை நேசிப்பவர்கள், துவரையைப்போல், உடனடியாகவும், நேரடியாகவும் சமூகத்திக்கு இணக்கமும் இன்பமும் நிறைவும் தருவதான  பயன்தந்து, இல்லம் எனும் நான்கு சுவர்கள், சமுதாயத்தின் எல்லை அளவுக்கு விரிவதான   இசைவுடனும் இயல்புடனும் வாழ்வார்கள்.    

சமுதாயம் என்பது பயன் தரும் மரங்களின் தோப்பு. இத் தோப்பில் ஒன்றி இருக்க விழையாத - ஒன்றியிருக்கவியலாத --

எட்டிமரம் பழுத்தாலென்ன? ஈயாதார் வாழ்ந்தாலென்ன?

I Want to be a Butterfly: Poem by Sri Madhavi Rajasekaran


 I Want to be a Butterfly

I want to be a butterfly
With a colorful happy life
I don’t want this human life
Please make me fly

This life is full of sadness
And gives me a lot of madness
It makes me angry
And leaves me unhappy


I would be a butterfly
With a colorful happy life
I never want this human life
Please make me fly

I want to live worthy
of a life that is lofty
So, let me not be sedentary
Please make me fly



                                                                                                     





Thursday, June 9, 2011

யானை: பலத்தை விழுங்கும் பலவீனம்

யானை: பலத்தை விழுங்கும் பலவீனம்

நில விலங்குகளில் யானை தான் மிகப்பெரியது. 

"யானை பலம்" என்பார்கள் - பலத்தின் மிகப்பெரிய அளவாகும் இது,
 டிஸ்கவரி சேனலில் நான் பார்த்த குறும்படம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
அதே படத்தில், யானை பற்றிய பகுதி வந்தது.  கூட்டம் கூட்டமாகப் போவதும் - ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்வதும்,  குட்டிகளைக் காலுக்கு அடியில் இருத்திப் பாதுகாப்பதும், காலுக்கு அடியில் நின்று கொண்டிருக்கிற குட்டியைத் தொலைவில் ஒரு புலியோ, சிங்கமோ நோட்டம் விடும்போது -  போர்க்களத்தில் எதிரிகட்கு எதிராகப் படை வியூகம் அமைப்பதுபோல் பெரிய யானைகள் சட்டென நகர்ந்து  யானைக்குட்டி, நோட்டம் விடும் விலங்கின் பாரவையிலிருந்து மறையுமாறு செய்வதும் சிலிர்ப்பை உண்டாக்கின.  

குட்டிகளை, பெரிய யானைகள் பயிற்றுவிக்கிறக் காட்சி கண்கொள்ளக் காட்சியாக இருந்தது. கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும்போது, சேற்றில் குழம்பியுள்ள நீரை மேலாக உறிஞ்சிக் குடிப்பது எப்படி, நீரைக்  கலக்காமல், மெல்ல மெல்ல நீரில் முன்னேறி நீர்நிலையின் நடுப்பகுதியை அடைவது எப்படி என்றெல்லாம், குட்டிகளுக்குப் பயிற்றுவிக்கும் தருணங்கள் பதிவாகி இருந்தன. 

பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பதைக் குட்டிகள் கப்பெனப் பிடித்துக் கொண்டு அதே போன்று செய்யத் துவங்கிய காட்சியைப் பார்க்கும்போது, பேசாமல் ஒரு யானைக் குட்டியைக் கொண்டுவந்து வளர்த்துப் படிக்க வைக்கலாம் போலிருக்கிறதே என்று தோன்ற அதையும் வாய்விட்டுச் சொன்னேன். "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேன்னு சொல்லியிருக்காங்க; மொதல்ல ஒரு மணியை ரெடி பண்ணிட்டு அப்புறமா யானைக் குட்டியைத் தூக்கிட்டு வா" என்றான் என் மகன்.

"இங்க அமெரிக்காவில் யானை கிடைக்காது. ஒண்ணு நம்ம ஊர்லேந்து வரணும். இல்லேனா ஆப்பிக்காவிலேர்ந்து வரணும் -- சரி யானைகுட்டியை இந்த வீட்டுல எங்க வெப்ப? பெட்  லிஸ்ட்ல யானை இல்லையே! கம்யூனிடியில அனுமதிக்க மாட்டாங்களே!!"  - என் மகள்.

இதற்குள் வீடியோ விறுவிறுப்பாய் நகரப் பேச்சை நிறுத்தினோம்.

யானைக் கூட்டம் ஒன்று போகிறது. சிங்கம் ஒன்று வந்து சீண்டிப் பார்க்கிறது. பெரிய யானைகள் கண நேரத்தில் அந்த சிங்கத்தை மிரட்டி விரட்டி விடுகின்றன. போன சிங்கம் மீண்டும் வந்து சீண்டுகிறது - மீண்டும் பெரிய  யானைகள் ஒன்று சேர்ந்து துரத்துகின்றன - சிங்கம் ஓடிப் போகிறது.

நானிருக்க நீங்கள் கவலைப்படுவதா  என்கிற பாணியில், ஒரு வாலிப யானை  கூட்டத்தை முன்னே நகரவிட்டு, மேற்பார்வை பார்த்தபடி நகருகிறது.  

சிங்கம் போனதென்று நம்பி யானைகள் நகர ஆரம்பிக்கின்றன. யானைகளை நன்றாய் நகரவிட்டு - போன சிங்கம் மீண்டும் வந்து சீண்டுகின்றது - இம்முறை அது  வாலிப யானையைச் சீண்டுகிறது. அந்த வாலிப  யானைக்குப் பொல்லாத கோபம் வருகிறது. ஏற்கனவே இருமுறை வந்து சீண்டிப்போனத்தில் இரத்தம் கொதித்துக் கொண்டிருந்த வாலிப யானை அது.

சிங்கத்தை அது வீறு கொண்டு தாக்க, சிங்கம் படிப்படியாகப் பின் வாங்குகிறது.  
வாலிப யானை விடுவதாக இல்லை. இன்னும் இன்னும் முன்னேறி, சிங்கத்தைத் தாக்க முற்பட - சிங்கம் பின் வாங்க, போதுமான அளவு கூட்டத்திலிருந்து வாலிப யானை  விலகி வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட நிலையில், அந்த வாலிப யானையை  வெகு வலிமையோடு தாக்கிக் கொன்று தின்கிறது அந்த சிங்கம்.   

அந்நேரம் பின்னணியில் வந்த வாசகம், "தனக்குப் பின்னால் நடப்பதை அறியமுடியாத யானைகள்" "வாலிப யானையைச் சீண்டினால் சுலபமாய் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்த  சிங்கம்"

யோசித்துப் பார்த்தேன். சட்டென்று திரும்பிப் பார்ப்போம்; நமக்குப் பின்னால் யாரோ நின்று கொண்டிருப்பார்கள். இது நமக்கு எதேச்சையாய் நிகழ்வது போல் தோன்றினாலும். உண்மையிலேயே நமது பின் மண்டைக்குப் பின்னால் நடப்பதை உணர்ந்தறிந்து நம்மை  எச்சரிக்கை செய்யும் திறன் இருக்கிறது.  இந்தத் திறன்  யானைக்கு இல்லை.

எத்தனயோ பலம் இருந்தும் இந்த - சிறு பலவீனத்தால் யானைகள் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனவே! என  நான் எண்ணிக் கொண்டிருந்தேன்; மகள் கேட்டாள், "அம்மா! யானைக் குட்டியைத் தூக்கிட்டு வர்ற ஆசை இன்னமும் இருக்கா?"

"போயேப் போச்சு" என்றான் மகன். 





 

 
   



       



Tuesday, June 7, 2011

கழுகு: சுய வல்லமை இருந்தும் ஏமாற்று மோசடி

கழுகு: சுய வல்லமை இருந்தும்  ஏமாற்று மோசடி

டிஸ்கவரி சேனலில் ஒரு வீடியோ பார்த்துக் கொடிருந்தேன். விலங்கினங்களின் அற்புதமான வாழ்க்கைமுறையை விளக்கும் குறும்படம் அது.

கழுகு பற்றிய விவரம் வரும்போது, காட்டப்பட்ட காட்சி இது. 

செங்கால் நாரை ஒன்று வெகுப் பொறுமையாகக் காத்திருந்து பிரயத்தனப்பட்டு  ஒரு பெரிய மீனைப் பிடிக்கிறது.  இதற்கெனவே காத்துக் கொண்டிருந்ததைப்  போல, எங்கிருந்தோ  ஒரு கழுகு சரேலென வந்து,  நாரை பிடித்த மீனை, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அபகரித்துக் கொத்திக்கொண்டு பறந்து போகிறது. 

இக்காட்சிக்குப் பின்னணியாக தரப்பட்ட வசனம்:  

"சுய வலிமை இருந்தும், பெரிய விலங்குகளைக் கூடப் பிடித்துத் தூக்கும் திறன் இருந்தும், சொற்பமான ஜீவனம் கொண்ட எளிய பறவைகள் சிரமப்பட்டுப் பிடித்த உணவை அபகரிக்கும் கயமைக் குணமே கழுகுக்குப் பிடித்தமாக இருக்கிறது."

பசுமரத்தாணிபோல் பதிந்தது  இந்த வாசகம்.
மனிதர்கள் பலரிடம் இதே குணத்தைப் பார்க்கிறோம்.
மனிதர்களைப் பார்த்து - கழுகுகள் இக்குணத்தைக் கற்றுக் கொண்டனவோ?

என்று  எண்ணவைக்கின்றன நாட்டு நடப்புகள்.

"மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா   தம்பிப் பயலே!
நிலை மாறுவதெப்போ ? தேறுவதெப்போ ?"

என்று பழங்காலச் சினிமாப் பாடல்  எழுப்பிய வினாவிற்கு  விடை தருவார் எவரேனும் உண்டோ? 




 




 

Sunday, June 5, 2011

The Sailor’s Tale: Poem by Adhithya Rajasekaran


The Sailor’s Tale
Poem by Adhithya Rajasekaran

Small was the stream,
And I heard the baby pigeon scream,
The first lesson was flying,
To protect the small bird from dying.

By the side of the pigeon I ride,
Into the universe which the tall trees hide,
Feeling the security of my shadows,
I took my flute to sing in the meadows.

There is still a lot to come,
For I am away from home,
For ill or good, let the wheel turn.

Slowly and steadily, the seasons change,
Pleasantness of the green trees began to wane.
Have I my own sword,
From now, I am responsible to god.
I was in the midst of my swagger,
While the stream became unnoticeably larger,
Lucky was my bait,
More fish came to me as I wait.

There is still lot to come,
I was more happy than I would ever become,
For ill or good, let the wheel turn.

I didn’t see the hawks gazing,
Nobody knows the reason for their chasing.
As dogs, they made their way into my shade,
In return, they promised me for a life-time abode.

My boat was completely filled with fish,
To make more than a million dish.
The happy moments didn’t last,
For the time that ran extremely fast.
There is still lot to come,
God decided to teach me a lesson through his hum,
For ill or good, let the wheel turn.

The fish slowly began to ran out,
Leaving was the thing that the dogs were planning about,
They waited for an early morning clear sky,
They began hawks again and soared up high.

My heart was beating in pain,
And my brain was defeated in feign,
It was calm before storm,
I never expected sea to transform.

I swam across the bitter seas,
And reached the sand engulfed by the bees.
The beekeeper was an old wench,
Who gave me some honey to munch.
She took me to the ranch,
And showed me a tree branch.
A bee was persevering to build the hive at the back,
Every time it failed, and but rose aback.

Willed, I rebuilt the boat.
Determined to get a stable float,
I left to the unknown destination,
Which is out of the human estimation.

There is still lot to come,
For I am always away from the dumb,
For ill or good, let the wheel turn.

Adhithya Rajasekaran

சேக்கிழாரும் ஐன்ஸ்டீனும்


சேக்கிழார் திருக்கோயில்: குன்றத்தூர், சென்னை 

அலகில்  சோதியன்  அம்பலத்தாடுவான்: சேக்கிழாரும் ஐன்ஸ்டீனும்  

உலகெலாம்  என இறைவன் முதற்சொல்  எடுத்தளிக்க 

உலகு எலாம் உணர்ந்து  ஓதற்கரியவன் 
நிலவு உலாவிய நீர்மலி வேணியன் 
அலகில்  சோதியன்  அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்    

எனத் திருமலைச் சருக்கம் எனும் முதற்காண்டத்தின்முதற்பாடலாய் எழுந்து பெரிய புராணத்தின், துவக்கத்தை அறிவிக்கும் சேக்கிழாரின் இப்பாடல், ஒரு மாபெரும் அறிவியல் களஞ்சியமாகத் திகழ்கின்றது. 

நிலவு பூமியின் துணைக்கோள் - முக்கால்  பங்கு நீரால் அமைந்துதது பூமி -
இத்தகைய பூமியில்  உறையும், உணர்வுத் திறன் கொண்ட யாவும்  உணர்ந்தும் - உணர்ந்து கொண்டதை விரித்தும் ஓதுதற்கு அரியதானது இறைவன் எனும்  பரம்பொருள் - அப்பரம்பொருளை அளக்கும்  அலகு யாதெனில் அது ஒளியே! இவ்விதமான தன்மையுடைய பரம்பொருளான  ஈசன் அம்பலத்தில் ஆடுகின்றான்!! சிலம்பணிந்த அவனது மலர்ப் பதங்களை வாழ்த்தி வணங்குவம்!! --- இது இப்பாடலின் பொருள்.  

அறிவியல் விதிப்படி, பிரபஞ்சத்தின் இயக்கங்கள்  யாவுமே ஒளியின் வேகத்தை  அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அளவிடப்படுகின்றன.
ஐன்ஸ்டீனின்  சார்புக் கோட்பாடு  (Theory of Relativity)  புவியில் இயக்ககங்களின்  கூறுகளுக்கு, ஒளியின் வேகத்துடன் தம்மை ஒப்பிடும் தன்மை (Relative value)  மட்டுமே உண்டு  ஆனால் அவற்றிற்கென்று தனித்துவ அளவும் மதிப்பும் (Absolute value) கிடையாது -- என்று கூறுகிறது.

ஒளிவடிவான பரம்பொருள் அம்பலத்தில் ஆடுகிறது என்பதே அறிவியல் மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டும் பேருண்மை. Space எனப்படுகின்ற வெட்டவெளியில் இப்பரம்பொருள்  ஓரிடத்தில் தேங்கிவிடாமல், எல்லாத் திசைகளிலும், தூசு தும்பு முதல், கோள்கள் ஈறாக, உயிருள்ளது உயிரற்றது என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்தையும் ஆட்டிவைக்கிறது என்பது அறிவியல் கூறும் உண்மை. 

உயிருள்ளதா உயிரற்றதா என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பொருட்களின் அணுவிலும் எலெக்ட்ரான்கள் ஓயாமல் வலம் வந்து கொண்டே இருக்கின்றன!!

உயிரற்றப்  பொருட்களில் Potential Energy எனப்படும் இருப்பு ஆற்றலும், உயிருள்ளப் பொருட்களில் Kinetic Energy எனப்படும் இயக்க ஆற்றலும் பொதிந்திருப்பதை அறிவியல் காட்டுகிறது. 

அம்பலம் எனும் தமிழ்ச் சொல் "Space"  எனப்படும் வெளியைக் குறிக்கிறது. தில்லை நடராஜர் ஆலயத்தில், திரைக்குள் நுழைந்து பரம்பொருளின் ரகசியத்தை அண்ணாந்து வெட்டவெளியில் காணும்  சூத்திரம், தமிழ்ப் பெரியார்கள் எத்தனை அறிவியல் ஞானத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.
தாமிரசபை, பொற்சபை என்று இறைவனுக்கு திசைகள் தோறும் அம்பலம் அமைத்து  வெட்டவெளியில் பரம்பொருள் நிகழ்த்தும் இயக்கத்தில், நமது இயக்கம் ஒரு அங்கம் - என ஒவ்வொவொரு நாளும் நமக்கு நினைவூட்டும் வித்தகம் எண்ணுந்தோறும் நமக்குள் பரவசத்தை ஏற்படுத்துகிறது. 

"ஆதிபகவன் முதற்றே  உலகு" எனப்  பொய்யாமொழிப் புலவர் கூறிய வாசகம் இங்கே ஒப்புகூறத்தக்கது   

நடராஜர் தத்துவம் எனபது ஆழ்ந்து உணரத்தக்கது. காலைத்தூக்கி நின்றாடும் நாடும் தெய்வம் காட்டுவது, நிற்பது என்பது மரணத்திற்கு ஒப்பானது - இயக்கம் மட்டுமே வாழ்வாகும் என்பதே -- அதுவும் நமது இயக்கத்தில் - வேகம் இருக்கும் வேளையில் - நடுவு நிலைமை வேண்டும் - என்பதை - ஒருகாலைத்தூக்கிய  பாவனையில் உணர்த்தப்படுகிறது.

இரவு நீங்கி ஒளிபுகும் காலையில் உலகின்  இயக்கங்கள் எழுப்பும் ஒலியும், தாவரத்தொகுதிகளின், மலர்ச்சியும், இங்கும் அங்குமாய்ப்பாயும் பறவைகளின் தாவலும் காட்டும் காட்சி  அப்பப்பா! சொற்கள் போதா விவரிக்க!!


ஆற்றல் மாறாவிதிக்கு வித்திட்ட லவோய்சியர் 

அடியும் முடியும் இல்லா அண்டவெளியில் நின்ற வாக்கில் பூமியின் மீது பதியாப் பாதங்களுடன், பரம்பொருள் விளைக்கும் ஒரு சிறு நாட்டிய அசைவு - எத்தனைப் பேரின்பமான ஒலிஒளிக் காட்சிகளை உண்டாக்குகின்றது!! 
மலர்ச் சிலம்படி என்பது இந்த அற்புத நாட்டிய அசைவையன்றோ?


ஒளியால் மட்டுமே அளவிடக்கூடிய ஈசனின் படைப்பாற்றலில் நாமும் ஒரு அங்கம் என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தோமென்றால், நாம் தேக்கநிலையை மறுத்தும் விடுத்தும் செம்மையாய் இயங்கலாவோம். 

எனது பள்ளிப் பருவத்தில் ஆரம்பப் பள்ளியில்  நாள்தோறும் நாங்கள் பாடிய பிரார்த்தனைப் பாடல் என் காதுகளில் இப்போது ஒலிக்கிறது-
சூரியன் வருவது யாராலே?
சந்திரன் தெரிவது எவராலே?
வானில் மின்னும் மின்மினி போல் கண்ணில் தெரிபவை அவை  என்ன?
பேரிடி மின்னல் எதனாலே? பெருமழை பொழிவது யாராலே?
யாரிதற்கெல்லாம் அதிகாரி?
அதை  நீ அறிந்திடல் வேண்டாமோ?

பரம்பொருள் வெட்டவெளியில் பறந்து விரிந்த வகையில் வியாபித்திருப்பதை நம் ஆன்றோர் எடுத்துக் கூறியிருப்பதும், இறைவனோடு ஐக்கியமாவதை வாழ்நாள் பயனாகக் கருதுவதும், திரண்ட அறிவியல் கருத்துக்களாகும் என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பயன்பெறுவது சிறப்பு. 

Law of Conservation of Energy எனப்படும் ஆற்றல் மாறா விதியையும்,  First Law of Thermodynamics எனப்படும் வெப்ப இயக்கத்தின் முதல் விதியையும் வெட்ட வெளியும் இயங்கும் பரம்பொருளும் நமக்குக் காட்டுகின்றன என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெப்ப இயக்கத்தின் முதல் விதியை வழங்கிய ஹெல்ம்ஹோல்ட்

மறுபிறவி எனும் அசைக்கமுடியாத கோட்பாடு நமது தமிழ்ச்சமய வழக்கில் இருப்பது, அறிவியல் சிந்தனைகளில் நாம் எத்தனை உயர்வாய் விளங்கி வந்திருக்கின்றோம் எனபதற்கு மற்றுமொரு சான்று.
       
நமது உடலும் உயிரும் ஆற்றல் பெட்டகங்கள், மரணமெனும் நிகழ்வால் இந்த ஆற்றல் அழிந்து போக வாய்ப்பில்லை. எவ்வகையிலேனும் இன்னொரு வடிவு (form) இந்த ஆற்றலுக்குத் தேவை. எனவே மறுபிறவி என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதே!! (மனிதர்கள் இறக்கும்போது ஒளிவடிவாக உயிர் பிரிவதைப் பல சமயங்களும் நம்புகின்றன. பல திரைபடங்களில் இவ்வாறான உருவகத்தையும் நாம் காண்கிறோம்). 

தொடர்ந்த பிறவிகளால் இயக்கங்கள் செம்மைப்பட்டு மேன்மை அடைந்த நிலையில், இறுதியாக  தனிமனித ஆற்றலானது ஆண்ட வெளியில் நிறைந்த பரம்பொருளோடு இரண்டறக் கலந்து விடுகிறது என்பதை, வீடு பேறு, மோட்சம், எனப் பல வகைகளில் நமக்கு உணர்த்தும் நம் முன்னோரின் விவேகத்தை என்னென்று சொல்வது? மனிதர்கள் இறப்பதை,  "இயற்கை எய்தினார்", "இறைவனுடன் இரண்டறக் கலந்தார்," "ஈசன் பாதம் சேர்ந்தார்" என அழகாக வருணிக்கும் தமிழ்ப் பதங்களுக்கு எத்தனை வணக்கம் செலுத்தினாலும் தகும்.   
பரம்பொருள் எனும் சித்தாந்தம் அறிவியலில், உலகின் முதலும் இறுதியுமான ஆற்றல் கருவூலத்தைக் (the Ultimate Reservoir of Energy) குறிக்கிறது. இந்தக்  கருவூலத்திலிருந்து எடுக்கப்படும் ஆற்றல் எவ்வாறேனும் , எந்தக் காலநிலை யிலேனும் மீண்டும் இந்தக் கருவூலத்தை அடைந்தாக வேண்டும். ஆற்றல் மாறா  விதியின் அடிப்படைக் கோட்பாடு இதுவே (energy can neither be created nor destroyed but can be  transformed from one form to the other) !! வெப்ப இயக்கத்தின் முதல் விதியும் இதுவே (The total energy of the universe is constant). மறுபிறவி என்பது ஆற்றல் வேறு  உருவத்துக்கு மாறும் எளிய நிகழ்வாக எண்ணுதல் எளிமையான அறிவியல் சிந்தனை.

திருவாசகம், "போக்கும் வரவும் இலாப்  புண்ணியனே என ஈசனை" விவரிப்பதும், "விண்ணிறைந்து - மண்ணிறைந்து - மிக்காய்  விளங்கொளியாய் - எல்லை இலாதானே" என்று போற்றுவதும்  இங்கு நினைந்து  உணரத் தக்கது. 

  
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்  -இறைவனடி சேராதார்  
என்றாரே வள்ளுவர். இந்த உலகப் பொதுமறை, பிறவிகளுக்கு இறுதியாய் இறைவனடியை  குறிப்பிடுவது, சேக்கிழாரின் மலர்ச் சிலம்படிதானே?


  ஆற்றல் - பொருண்மை வாய்ப்பாடு தந்த ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் ஆற்றல் - பொருண்மை வாய்ப்பாடு அல்லது சூத்திரம் (Einstein's Mass--Energy equation)
E = mcc

என்பதாகும். இதில் c என்பது ஒளியின் வேகத்தைக் குறிப்பதாகும். எனவே  நபர் எவராகினும் சரி - அவரது தோற்றமும் இயக்கமும் ஒளிபொருந்தியதாக - அறியாமை எனும் இருளிலிருந்து விடுபட்டதாக - தனது மற்றும் பிறரது வாழ்வுக்கு வெளிச்சம் தருவதாக - உயர்நிலைகளுக்கு இட்டுச்செல்வதாக - பரம்பொருள் எனும் பிரபஞ்சப் பேராற்றலை உணர்ந்து போற்றுவதாக - அமைய வேண்டும் என்பது அடிப்படை. 

"தோன்றிற் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் உறுதியான் கட்டளையைக்  காண்க.

பாரதியின் ஊழிக்கூத்து பிரபஞ்ச இயக்கத்தின் இன்னபிற பரிமாணங்களை நமக்களிக்கும் இன்னுமொரு கருவூலம். 

ஊழிக்கூத்து பற்றிப் பேசுவோம்.  

    



   

              

Saturday, June 4, 2011

சினிமாப் பாடல்கள்: தாழ்ந்தும் - ஒலிக்கும் - தமிழ்ச்சொற்கள்

சினிமாப் பாடல்கள்:  தாழ்ந்தும் - ஒலிக்கும் - தமிழ்ச்சொற்கள் 

என் மகன், விக்ரமாதித்தன்  ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
"என்னோட ராசி நல்ல ராசி ---"

அப்போது என் மகள் ஆதிரை  ஒரு கேள்வி கேட்டாள்.

அத்தை மகராசியா?
இல்லை 
அத்தைமக   ராசியா? 

வியந்தேன்!

குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என உற்றுக் கவனித்தேன்.
மிக ஆரோக்கியமாக விவாதித்தார்கள்.

  
நல்ல  மகளைப் பெற்றதால் அத்தை மகராசியே என்றான் மகன். ஆமோதித்த மகள், "ஆனாலும் இப்பாடல் அத்தை மகளையே பாடுகிறது - மகராசிக்குப் பிறந்ததால், பெண்ணும் ராசியானவள் தான் என்றாள்."  
 
தமிழ் தாழ்ந்து விட்டது - ஊடகங்கள் தமிழைச் சிதைக்கின்றன - 
என்று நாமெல்லாம் புலம்பிக்கொண்டிருக்கின்ற கால கட்டத்தில்,
டப்பாங்குத்துப் பாட்டுக்கு இளைப்பில்லை எனும்படியான இந்தப் பாட்டு,
எங்கள் இல்லத்தில் ஒரு மிகப் பெரிய ஆய்வையே நிகழ்த்திவிட்டது.
  
தமிழ் வீழாது என்று என் நா முணுமுணுத்தது!! 

படம் பார்த்துப் பகர்

படம் பார்த்துப் பகர்


"எடுப்பில் அதே மிடுக்கு 
இடுப்பில் அதே உடுப்பு"

அரிதான வண்ணப்படங்களை நமக்கு அளிக்கும் www.onlyfunpics.com  காணுந்தோறும் காணுந்தோறும் நம்மைப் புதிது புதிதாகச சிந்திக்க வைக்கும் பல் வேறு படங்களில் நான் கண்ட ஒன்று. தலைப்பு மட்டும் என் உபயம்.
 

ஒரு மணி நேரம்: சிறு கதை


ஒரு மணி நேரம்: சிறு கதை  

மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்தில் கேத் சோப்பின் எழுதிய ஒரு மணி நேரத்தின் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர்: விக்ரமாதித்தன் (Adhithya Rajasekaran), நம் அம்பராத்தூணியின் திருக்குறள் வாசிப்பாளர். 

அவள் மென்மையானவள் இந்த திடீர் அதிர்ச்சியை அவள் தாங்கமாட்டாள் என்று  உறவினர்கள், அவளுடைய கணவன் இறந்த துக்கச் செய்தியை வள்ளியம்மையிடம்  நிதானமாக, பெரும் ஆரவாரமில்லாமல் வெளியிட்டனர்.
அவளுடைய சகோதரி சிந்தாமணி, பாதி வரிகளை விழுங்கி, குறிப்பினால் அவளுடைய கணவனின் மறைவை உணர்த்தினாள். அவர்களின் குடும்ப நண்பர் சிங்காரவேலனும் அங்கே நின்றுகொண்டிருந்தார். தன்னுடைய பத்திரிக்கைக்கு ரயில் விபத்தில் இறந்தவர்களின் பெயர்களை நிருபர்  கொடுக்க, அதில் வள்ளியம்மையின் கணவர் கபிலனின் பெயரைப் பார்த்து முதலில் அதிர்ச்சியில் உறைந்தவர் அவரே! தன் பால்ய சிநேகிதனின் மகளான வள்ளியம்மையை குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வருபவர் சிங்காரவேலர். சுட்டிப்பெண்ணாய், குறும்பும், துள்ளலும், ஓட்டமுமாய் குழந்தைப் பருவம், கன்னிப் பருவம் என இருந்த வள்ளியம்மை, கல்யாணத்திற்குப் பிறகு நேரெதிர்.   பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டிலும் பொறுமைசாலி எனப்பெயர் எடுத்து, அடக்கமான பெண், இவளே எனும்படியாக அனைவரின் பாராட்டையும் பெற்றவள்.  கபிலன் ஏறக்குறைய இருந்தாலும் அதைப்பெரிதுபடுத்தாமல் அவள் குடும்பத்தை நடத்திப்போவதை அவர் அறியாதவரில்லை. “இந்த நல்லப் பெண் கட்டுக் கழத்தியாக மஞ்சள் குங்குமத்தோடு நெடுநாள் வாழவேண்டும்” என்று வேண்டுபவர் சிங்காரவேலர்.
நிருபர் சேதி கொண்டுவந்தாலும், இறந்தது கபிலன் தானா என்பதை ரயில்வே அதிகாரி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு  உறுதி செய்துகொண்டு அதன் பின்னரே, வள்ளியம்மையைக் காண அவசர அவசரமாக விரைந்தார்.
துக்கச் செய்தியைக் கேட்டதும், வள்ளியம்மையிடம் ஒரு வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. மற்ற பெண்கள் போன்று தேம்பித்தேம்பி அழவில்லை. தன்னுடைய சகோதரியை அணைத்துக்கொண்டு ஒரு முறை ஓ என்று அழுது விட்டு, சுவற்றில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சாவியைப்படக்கென எடுத்துக்கொண்டு  மட மடவென மாடிக்குவிரைந்து, பூட்டைத்திறந்து, உள்ளுக்குள் நுழைந்து  மாடிக்கதவை அடைத்துக்கொண்டு  விட்டாள். இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் அவள் ஆர்ப்பாட்டம் செய்வாள் அல்லது  துக்கத்தில் உறைந்து நிற்பாள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவளுடைய நடவடிக்கைகள் வேறு விதமாய் இருந்தன.
ஒரு வரவேற்பறை, ஹால், தனியறை, குளியலறை, கழிவறை எனக்  கச்சிதமான மாடிப்பகுதி. குடி, சூதாட்டம், கூத்தி என - கபிலனின் சாம்ராஜ்யக் களம் அது. வேலைக்காரி போல் சுத்தம் செய்ய மட்டுமே இவளைக் கூப்பிடுவான். கபிலனின் அந்தப்புரம் - இனி இவள் வசம.         
மாடி அறைக்குள் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள் வள்ளியம்மை. அக்கணம் அவள் தன்னுடைய உடம்பில் ஒரு புது உற்சாகத்தை உணர்ந்தாள். என்றைக்கும் திறந்திருக்கும் அந்த ஜன்னலிலிருந்து ஒரு மெல்லிய தென்றல் அவள் முகத்தினை வருடிச் சென்றது. பல நாட்கள் முன்பு குடுவையில் செருகி வைத்த மரிக்கொழுந்து துளிர் வாடாமல் இருப்பது புலப்பட்டது. . சமையலறை வாடையை மட்டுமே சுவாசித்த அவளது நாசிக்கு இன்று மழையின் மண் வாசம் சட்டென்று புலப்பட்டது. தன கணவனின் கட்டளைகளை மட்டுமே  கேட்டுச் சலித்த அவளது காதுகளுக்கு, இன்று “அம்மா! காய்” என்று கூவிச்செல்லும் தள்ளு வண்டிக்காரனின் கூவல் புதுமையாகக் கேட்டது. தூரத்து தொழிற்சாலையில் ஒலிக்கும் மணியோசை அவளுக்கு அமுதகானம் போல் கேட்டது. தன்னைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிக் கூட்டம் சிறகடித்துப் பறப்பது போன்று உணர்ந்தாள்.
ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள். வானில் கரிய நிறம் நீங்கி, வெள்ளை நிற மேகங்கள் கண்டாள் தன்னை வரவேற்பது உணர்ந்தாள். என்னே! ஒரு மகிழ்ச்சி. யாரிடமும் சொல்லமுடியாத ஒரு நெகிழ்ச்சி.
கட்டிலின் மீது தாறுமாறாய்க்  கிடந்த விரிப்பு, தலையணை, போர்வை என அனைத்தையும் எடுத்துக் கீழே வீசினாள். வெற்றுக் கட்டிலில் படுத்து, தன இரு கைகளையும் மடித்துத் தன்னுடைய சிரத்தின் கீழ் வைத்து கற்பனையில் மூழ்கினாள். சிவனுக்கு நஞ்சு தொண்டையில் நின்றது போல, வள்ளியம்மையின் சோகம் தொண்டயுடன் நின்றது. சிறுபிள்ளையாக இருக்கும்போது, தூங்குவதற்குக்கூட அழது ஆர்ப்பாட்டம் செய்தவள், இன்று தன கணவன் இறந்து விட்ட செய்திகேட்டு ஒரு உணர்வுமில்லாமல் இருந்தாள்!
சிறு வயதில் கட்டுப்பாடுகள் இல்லாமல் வளர்ந்தவள், கட்டுப்பாடுகளே வாழ்க்கையாக மாறி ஒன்றல்ல இரண்டல்ல பதினேழு ஆண்டுகள் கொத்தடிமையாக வாழ்ந்ததை உணர்ந்தாள். இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்பதாகப் போன வாழ்க்கையை எண்ணியபடியே  வானத்தை உற்று நோக்கிகொண்டிருந்தவள், திடீரென,  பல வண்ண வானவில் தோன்றி, தன்னை வெளிச்சத்திற்கு அழைப்பதைக் கண்டாள்.
பல நாட்களாக காத்துக்கொண்டிருந்த ஒன்றை இன்று திடீரென அடைந்துவிட்டது போன்றதொரு உணர்வு அவளுக்குள் எழுந்தது. ஆனால் அந்த “ஒன்று” எது? அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை அவளிடம். ஆனால் அது தன்னுடைய உயிரோடு உயிராகக் கலந்த ஒன்று என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு.
சிறுவயதில் அவள் கேட்டக் கதையில் நிகழ்ந்தது போல, வானத்திலிருந்து ஒரு அதிசயக் கம்பளம் அவளை வேறொரு உலகத்திற்கு கூட்டிச்செல்வதற்காக அவளை நோக்கிப் பறந்து வருவது போல அவள் உணர்ந்தாள், முல்லை அரும்புகள் குப்பென மலர்ந்து அந்த அறை முழுவதிலும் வியாபித்தது போன்று அவள் உணர்ந்தாள்.
அவளுடைய மார்பகங்கள் மாறி மாறித் துடித்தன. அவள் காத்துக்கொண்டிருந்த ஒன்று அவளை நெருங்கிவிட்டதைப்போல  உணர்ந்தாள். அதை வரவேற்றுத் தனதாக்கிக்கொள்ள அவளுடைய மனதைத் தயார்படுத்திக் கொண்டாள்.
உழைப்பு -- உழைப்பு -- உழைப்பு ஒன்றே வாழ்க்கையென --- உழைத்துக் களைத்து வறண்டு கிடந்த தனது இரண்டு கைகளையும் கண்டு வெட்கித் தலை குனிந்தாள். செருப்பாலும், கொம்பாலும், துடைப்பத்தாலும் தான் வாங்கிக்குவித்த தேக அடையாளங்களை எண்ணிப் பார்த்தாள். கண்கள் பிதுங்குமளவுக்கு மென்னியைப் பலமுறை கபிலன் நெறித்ததால் கூம்பிப்போன நெஞ்சுக்குழியைத் தடவி விட்டுக் கொண்டாள்.
குறையைத் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு, ‘கொட்டி மாடு’ என்று சொல்லிச் சொல்லி அவன் எட்டி எட்டி உதைத்த வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.   அந்த மறக்கமுடியாத தருணத்தில், அவளுடைய நா அவளுடைய அனுமதி இல்லாமலே, சில வார்த்தைகளை உதிர்த்தது, “விடுதலை!விடுதலை!விடுதலை!”
யாருமே இல்லாத அந்த அறையில் அவளுடைய கண்கள் யாரையோ உற்றுப் பார்த்தபடி இருந்தன. அவளது உடம்பில் ரத்த ஓட்டம் பல மடங்கு அதிகமானது. இருதயம் வேகமாய்த் துடித்துக்கொண்டே இருத்தது. அவளின் தலைக்குப் பின்னால் ஒரு ஒளி தோன்றியது, அது உடல் முழுவதும் பரவி அவளை சிலிர்க்க வைத்தது. அவளுடைய நரம்பு நாடிகளில் ஒரு புத்துணர்ச்சி பரவியது. .
தன்னை ஆட்கொண்டுள்ள இந்த புதிய உணர்வையும், அதனுடைய வலிமையையும் எண்ணி அவள் மெய் மறந்தாள். இது சாதரணமான ஒரு நிகழ்வல்ல என்பதை உணர்ந்த அவள், அதை மனதாரப் போற்றிப் புகழ்ந்தாள்.
நகராத கைகள், பொலிவில்லாத முகம், பஞ்சடைந்த கண்கள் எனும் தோற்றத்தோடு காணப்படும் இறந்தவரைப் பார்த்தால், பொதுவாக எவருக்கும் கண்ணீர் பாய்ந்தோடும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், தன்னை என்றைக்குமே அன்போடு பார்க்காத முகம், அரவணைக்காத கைகள், அடிமை என்றே நினைத்துவிட்ட மனம் - இதுதான்  இன்று அவள் முன்னே ஒரு உணர்வும் காட்டாத ஒரு உயிரற்றப்  பொருளாக காட்சியளிக்கப் போகிறது. “அந்த ஜடத்தைப் பார்த்து நானும் எந்த உணர்வையும் காட்டக்கூடாது” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
“ஆனால் இங்குள்ள கூட்டத்திற்காகவேனும் கொஞ்சம் அழவேண்டும்.” என்று சொல்லிக்கொண்டவள் “பிணம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று முடிவு கொண்டபடி சொல்லிக் கொண்டாள்
அதே கணம்  அவளுடைய எண்ணங்களை முன்னோக்கிச் செலுத்தினாள். வரப் போகின்ற வருடங்கள் அனைத்தும் அவளுடயதே, அவளிடமிருந்து அதைப் பறிக்க எவருமில்லை. இரு கரங்களையும் நீட்டி அந்த தருணங்களை வரவேற்றாள்.
வரும் காலங்களில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தனிமையே அவளுடைய வாழ்க்கை. ஆனால் தனிமையிலும் ஒரு இனிமை, ஏனெனில் அது அவளுடைய வாழ்க்கை. அதைப் பறிக்க யாருமில்லை. அணையில்லா நதிபோல தான் நினைத்ததைச் செய்ய அவளுக்கு சுதந்திரம் உண்டு. பிறரின் அடிமைப் படுத்தும் ஆசைகளுக்கு இனி அவள் ஆளாகவேண்டும் என்பதில்லை. அடிமைப்படுத்தும் குணம் படைத்தவர்கள், அதை ஒரு குற்றமாக கருதாமல் அதை மரபாக கருதுவதை அவள் வெறுத்தாள்.
ஓரிரு குழந்தைகளாவது பிறந்திருக்கலாம். சொந்தம் எனச் சொல்ல! ஆனால் அவை அவனையே உரித்து வந்திருந்தால் எத்தனைக் கொடுமையாய் இருந்திருக்கும்? கொட்டி மாடு என எட்டி எட்டி உதைத்தானே அதுவே  மேல் என்றல்லவா ஆகியிருந்திருக்கும்?  
இத்தனைக் கொடுமைக்கிடையிலும் கபிலனை சில நேரங்கள் காதலித்ததை. அவளால் மறுக்க முடியவில்ல, ஆனால் அவனைக் காதலித்ததை விட அவனை வெறுத்த நேரங்களே அதிகம். பட்ட கஷ்டத்திகுப் பரிசாய் அவள் தற்போது அடைந்துள்ள பேரானந்தம் அளவிடமுடியாதது. எனவே கபிலனை அவனது மரணத்தோடு மறந்து விடுவது என முடிவெடுத்துவிட்டாள்.
“விடுதலை! உடலுக்கும் உள்ளத்துக்கும் இன்று முதல் விடுதலை!” என்று தனக்குள் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டாள்.
மாடியின் கதவை அடைத்துக்கொண்டு உள்ளே சென்றவள் என்ன செய்கிறாள் என்றறியாமல் வெளியில் உள்ளவர்கள் பயந்துபோயினர். சிந்தாமணி பதறிப்போய் கதவைத் தட்டினாள். பதிலேதும் வராததால், கதவின் சாவி துளையில் சிரமப்பட்டுப் பார்த்தாள். தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்று பதறி “வள்ளியம்மை! என்ன செய்கின்றாய் நீ! உன்னை வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன் எனக்காக கதவைத் திற !” என்று வேண்டினாள்.
உள்ளிருந்து வள்ளியம்மை “நான் நன்றாகத்தான் இருக்கின்றேன்” நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கடுமையாகப் பேசினாள்.
உள்ளே நாற்காலியில் அமர்ந்த படியே வரப்போகின்ற மழைக் காலம், பனிக் காலம், இலையுதிர்காலம் மற்றும் வெயில் காலங்களில் தான் என்ன செய்வது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பின், தானாக வந்து கதவைத் திறந்து கண்ணீர மல்க தன்னுடைய சகோதரியின் கரம் பிடித்தபடியே, மெதுவாகப் படிக்கட்டுகளில் இறங்கி, சிங்காரவேலனை நோக்கி நடந்தாள். அவரிடம் தனது கணவனின் மரணத்திற்குப் பிறகு, தான் எவருடனும் செல்லாமல், அந்த வீட்டிலேயே தனியாக வாழ்வதையே விரும்புவதையும், . எவரும் இவ்விஷயத்தில்  மாற்றுக் கருத்தைச் சொல்லி அவளை நிர்ப்பந்திக்காதபடி  பார்த்துக்கொள்ளுமாறு அவரிடம்  என்று சொல்லி வைத்துவிடவேண்டும் என்று நினைத்தாள். 
சிங்காரவேலனை நோக்கி அவள் நடந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் யாரோ ஒருவர் வீட்டின் வெளி கேட்டை, மெதுவாகத் திறந்து, விட்டிற்குள் நடந்து வந்தார். அவர் வேறு யாரும் இல்லை, கபிலன் தான்!!
வழக்கம் போன்று, அதே படாடோபம், மைனர் செயின், வலக்கையில் வாட்ச், கூலிங்  கிளாஸ், சிக்கென்ற டி ஷர்ட்  அணிந்து உள்ளே வந்த கபிலனை வள்ளியம்மை அப்படியே ஆச்சரியத்தோடு பார்த்தாள். எத்தனை அக்கிரமம் செய்தாலும், எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளாத கபிலனின் ராசி அவளுக்குத் தெரியும்.  விபத்து நடந்த இடத்தில் அவன் இல்லை - தப்பி விட்டான் என்பது ஊர்ஜிதமானது. அவனிடம்  கேட்ட போது, அவ்வாறு ஒரு விபத்து நடந்தது என்பதைப் பற்றி கூட அறியாமல் இருந்தான். அனைவர் கண்ணிலும் இருந்த சோகத்தைக் கண்டு, விஷயத்தைப் புரிந்து ஏகத்தாலமாகச் சிரித்தான்.
வள்ளியம்மையின் காலுக்குக் கீழே பூமி சரிந்தது. அவளின் பின்மண்டையில் கிளம்பி நின்று கொண்டிருந்த ஒளி அவளது கண்களின் வழியே வெளியேறியது ஆம்புலன்ஸ் விரைந்தது, மருத்துவர்கள் குவிந்தனர். ஆனால் அவர்களால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.  தன கணவன் உயிருடன் திரும்ப வந்ததின் இன்ப அதிர்ச்சி  தாள முடியாமல் வள்ளியம்மை  இறந்து விட்டதாக முடிவு செய்தனர்.