அரசு வென்ற பரிசு: குஜராத் சாதனை
உலகின் மிகச்சிறந்த அரசுகளில் வரிசையின் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது நமது நாட்டின் குஜராத் மாநில அரசு. இப்புகழ்மிக்க உயரிடத்தை குஜராத் மாநில அரசு வென்றிருப்பது நமக்கெல்லாம் எத்தனைப் பெருமை? பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியின் வாக்கு இன்று வென்றது எனலாம்.
ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுக் குழு, அறிவித்திருக்கிற இந்த இனிய சேதி நமக்கெல்லாம் கிடைத்த வசந்தகாலப் பரிசு! (விருது அறிவிப்பின் வண்ணப்படம் மேலே) ஆனால் இப்புகழ் நிலை குஜராத் அரசுக்கு ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை. அரசு என்பது மக்களுக்காக, மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளால் நடத்தப்படுவது. இந்நிலையில், “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” எனும் நிலைமை போய், “மக்கள் எவ்வழி தலைவர் அவ்வழி” எனும்படியான நிலைமையிலேயே நாம் வாழ்கிறோம். எனவே மாநில மக்களின் சிந்தனை, வாழ்நிலை, கூட்டுறவுக் கொள்கை ஆகிய அடிப்படைப் பண்புகளே அவ்வவ்வரசுகளின் சித்தாந்தங்களாகின்றன. இவகையில் தனது மக்களின் நோக்கமறிந்து, ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை நிறைவேற்றும் அரசாக குஜராத் அரசு திகழ்ந்ததால் கிடைத்த வெற்றிதான் இது.
குஜராத்காரர்கள் என்றால், அவர்களது செல்வச்செழிப்பும், வியாபாரச் செயல்பாடுகளும் மட்டுமே நம்மில் பலருக்கும் தெரியும். அதனால், வியாபார நோக்கு மற்றும் வாணிபத் திறமை மட்டுமே கொண்டு இவர்கள் வெளிச்சத்திற்கு வந்து விட்டதாகப் பலரும் நினைக்கக்கூடும். குஜராத் மக்கள் நம்மூர் நாட்டுக்கோட்டை செட்டியார்களைப் போல தனவணிகத்திற்குப் பேர் போனவர்கள்தாம் . ஆனால், வியாபார வாழ்க்கையினால் மட்டுமே இவர்கள் முன்னுக்கு வந்துவிட்டதாக நாம் எண்ணுவோமேயானால், அது தவறு. இவர்களது முன்னேற்றத்தின் உண்மையான ரகசியம் இவர்களது, உழைப்பு, சுறுசுறுப்பு, மற்றும் கூடி வாழ்ந்து கூடி உயரும் கூட்டுப் பண்பாடே. இந்த அடிப்படையான வளப்பமான கூட்டுச்சிந்தனை குஜராத் மக்கள் ஒவ்வொருவரது மனத்திலும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதால், இதனிலிருந்து பிறநற்பண்புகள் இயற்கையாகவே பிறந்துவிட்டிருக்கின்றன எனலாம்.
குஜராத் மக்கள் கல்லாப் பணத்தின் மீது எத்தனைக் கருத்தாக இருக்கிறார்களோ அத்தனைக் கருத்தாக நல்ல காரியங்கள் பல செய்து வருகிறார்கள். சமுதாயத்திலிருந்து பெற்றதை சமுதாயத்திகே மீண்டும் அளிக்க வேண்டும் எனும் இவர்களுக்கு இருக்கின்ற சமுதாய சிந்தனை வேறு எவருக்கும் இல்லை எனலாம். இவர்களைப்ப்போல தருமம செய்ய வேறு எவரும் இல்லை எனும் படியாக இவர்கள் வாரிக்கொடுக்கும் பாரிகளாக விளங்குகின்றார்கள். கல்வி, கலைகளை இவர்கள் பேணுவதுபோல் எவரும் செய்யமுடியாது.
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கு இவர்கள் தருகின்ற கவனம் நம்மை வியக்க வைக்கிறது. குறிப்பறிதல் என்பார் திருவள்ளுவர். இக்கலையில் குஜராத் மக்கள் வல்லவர்கள். இயற்கைப் பேரழிவா? பஞ்சமா? பட்டினியா? எவருடையதாகிலும் அத்துயரம் இவருடையது என்பதாக இவர்கள் தாயினும் சாலப்பரிந்து ஒடி உதவும் சான்றாண்மை பற்றிப் பேச சொற்கள் போதா!
தருமம் வளர்த்தல், கல்விப்பணி, முதியோர், பெண்கள், குழந்தைகள், ஆவினம் பேணுதல், கலாச்சார ஒருமைப்பாடு, என ஆன்றோர் காட்டிப் போயிருக்கிற நல்ல வழியிலே இவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் திறம்பட இயங்கி, பிற மொழி, பிற கலாச்சாரம், பிற இனம் என்கிற பாகுபாடு காட்டாமல், ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் படியாக செல்லுமிடமெல்லாம் செல்லுபடியாவதோடு செல்வத்தோடு செல்வாக்கையும் ஈட்டி வருகிறார்கள்.
நான் வாழும் அட்லாண்டா மாநகரில் இவர்கள் நிகழ்த்தியிருக்கிற சாதனைகள் ஒன்றா இரண்டா? எடுத்துக்காட்டிற்காக ஓரிரு சேதிகள்:
*முழுக்க முழுக்க சலவைக் கற்களால் மிக நுண்ணிய
வேலைப்பாடுகளுடன் கட்டப்பபட்ட சுவாமி நாராயணன் கோயில்.
வேலைப்பாடுகளுடன் கட்டப்பபட்ட சுவாமி நாராயணன் கோயில்.
*சக்தி மந்திர் என்று அழைக்கப்படும் அம்மன் கோயில். வழிபாட்டுடன் நின்று விடாது எத்தனைப் பேர் வந்தாலும், வரும் அனைவருக்கும், இலவசமாக உயர்தர உணவு (இனிப்பு, காய்கறிகள், அப்பளம், பூரி, கூட்டு, சாம்பார், சகிதம், உயர்தர அரிசியில் சாதம்) வழங்கப்படுகிறது என்பதோடல்லாது, இக்கோயில் வளாகத்தில் ஒரு மருத்துவ சேவை மையமும் இயங்கி வருகிறது.
*ஹைட்டி துயர், ஜப்பான் சோகம், என உலகத் துயர் துடைப்பிற்காக இவர்கள், துணியும், மருந்தும், உணவுப்பொருளுமாக, சேகரம் செய்து, பொட்டலம் கட்டி, அனுப்பிவைக்கும் பாங்கு, கூடி வாழ்வதில் இத்தனை நேர்த்தியா என நம்மை நெகிழவைக்கிறது. நவீன மாற்றங்கள் ஏற்பட்ட நிலையிலும், இந்தியவழி அலங்காரம், பாரம்பரிய உடுப்புகள், அந்நிய மண்ணிலும் விட்டுக்கொடுக்காது கடைபிடித்துவரும் மரபுவழி கலாச்சாரம் என இவர்களது ஒவ்வொரு அசைவிலும் இந்தியா பரிமளிப்பதை நாம் காண முடியும்.
*அட்லாண்டா மாநகரின் மிகப்பெரிய அரங்கான க்வின்னட் பன்னாட்டு அரங்கில் இவர்கள் வருடந்தோறும் ஏற்பாடு செய்து நடத்துகிற இந்திய விடுதலை விழா ஒரு மாபெரும் கோலாகல விழாவாகும். காலைமுதல் மாலை வரை நடக்கிற இந்தவிழாவில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலப் பெருமைகளும் பறைசாற்றப்படும். இசை, நாட்டியம், நாடகம், நாட்டுப்புறக்கலைகள் என நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக நடந்தேறும் இந்த வைபவம் காண எங்கிருந்தும் இங்கு வந்துவிடுவார் இந்தியர்கள். அன்று இந்தியாவே அட்லாண்டா மாநகரில் கூடிநிற்பதுபோன்ற உணர்வு எவருக்கும் ஏற்படும்.
சுவாமி நாராயணன் கோயில்
பெட்ரோல் பங்குகளே இவர்களது முக்கியத் தொழில் எனினும், மிகப்பெரும்பாலான குஜராத் மக்கள் வெவ்வேறு விதமான வாணிபங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு வகைகளில், இவர்கள் அமெரிக்க விவகாரங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பங்கேற்று வருகிறார்கள். இவர்களுக்கென்று அமெரிக்காவில் தனியானதொரு அங்கீகரிப்பு என்றைக்கும் உண்டு என்பது உண்மை.
இத்தகு மக்களின் ஆர்வத்தையும், வளர்ச்சியையும் கட்டிக்காப்பது என்பது சுலபமான விஷயம் அன்று. அந்த சீரிய செயலைச் செம்மையான முறையிலே நடத்தி வருகின்ற குஜராத் மாநில அரசு, உலகின் தலைசிறந்த அரசுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தை வென்றிருப்பதை, நாம் கொண்டாடியாகவேண்டும். வெளிப்படைத் தன்மை, கடப்பாடு, மக்கள் தேவைகளுக்கு செவிசாய்த்தல் ஆகிய செயல்பாடுகள் வாயிலாகப்பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கும், உலகின் தலைசிறந்த அரசுகளில் இரண்டாவது அரசு என்பது இந்த விருதுப் பத்திரத்தின் அடக்கம்.
அடக்கம் என்பது அரசின் அணிகலன் என்பதைச் சொல்லாமல் சொல்லும் இவ்வரசு உலக வங்கியிலிருந்து தான் பெற்ற கடனை முழுமையாக அடைத்ததோடல்லாமல், அவ்வங்கியில் பெருத்த முதலீட்டைச் செய்துள்ளது என்பது சிறப்புக்குச் சிறப்பாகும்.
(மேலே சக்தி மந்திர் அம்மன்).
அவ்வைமகள்
0 comments:
Post a Comment